வேலைக்குப் போகாதீர்கள்!





நமக்கு களைப்பும் அயர்ச்சியும் வேலையினால் ஏற்படுவதில்லை; துயரமும் எரிச்சலும் ஏமாற்றமுமே அதற்குக் காரணமாக இருக்கிறது.
- டேல் கார்னெகி

ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். ஆண்கள் மட்டும் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில், ஒரு பெண்... அதிலும் சற்று அழகானவள் நுழைந்துவிட்டால் போதும்... ஆண்கள் சட்டென்று டென்ஷனாகி

விடுவார்கள். தங்கள் தலைமுடியை, ஆடையை ஒழுங்கு செய்வதிலிருந்து அவளுக்கு பொறுப்பாக பதில் அளிப்பது வரை... ரொம்பவே சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.

யார் என்றே தெரியாத - ஓரிரு நிமிடங்களுக்கு மேல் தொடர வாய்ப்பில்லாத இந்தக் குறுகிய உறவின் பொருட்டு ஆண்கள் காட்டும் அக்கறை கொஞ்சநஞ்சமில்லை. ஒரு பெண் சொன்னாள் என்பதற்காக

அவளது பேனாவில் இங்க் ஊற்றிக் கொடுப்பதைக் கூட பெருமையாகக் கருதும் ஆண்கள் இருக்கிறார்கள். நோக்கம் இதுதான்... அந்தப் பெண்ணைக் கவர வேண்டும்; எப்படியாவது அவளை அசத்த

வேண்டும்!
இதே போல்தான் பெண்களும். அவர்கள் ஆண்கள் அளவு தங்கள் உணர்வுகளை பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் சொல்லாவிட்டாலும் அவர்களும் இரும்புப் பிறவிகள் அல்ல. ‘‘உங்கள் சேலை

அழகாக இருக்கிறது’’ என்று ஒரு ஆணும், பெண்ணும் ஒரு பெண்ணிடம் சொன்னால், பெரும்பாலான பெண்கள் மனதில் ஆணின் பாராட்டுதான் அதிக நேரம் ரிப்பீட் செய்யப்படும்.

இவ்வளவும் ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை... ஆண் - பெண் ஈர்ப்பு! வயது, இனம், படித்தவர், பாமரர், அறிவுஜீவிகள், அறிவற்ற ஜீவிகள்... எல்லோருக்கும் பொதுவான ஆண் - பெண் இச்சை. இது

எதற்காக என்றும், இந்த பஞ்சு - நெருப்பு உறவு ஒரு எல்லையைக் கடந்தால் அது எதை நோக்கிய பயணமாக அமையும் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  

இச்சைகளை வென்றுவிட்டதாகக் கருதப்பட்ட பெரிய பெரிய மகான்களே இந்த ஈர்ப்பை உதற முடியாமல் திணறியதை நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். எல்லா மதங்களுமே புலனடக்கத்தின்

சிறப்புகளை எதற்காக வலியுறுத்துகின்றன என்றால், அதற்கான அறிவுரை மனிதனுக்கு எப்போதும் தேவைப்படுகிற ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம், ‘ஒரு ஆண் ஒரு நாளைக்கு
1 முதல் 388 தடவை செக்ஸ் பற்றி நினைக்கிறான்’ என்கிறது. பெண் 1 முதல் 140 தடவை. இதில் கவலைப்படவோ, வெட்கப்படவோ எதுவுமில்லை. காமத்தின் விளைவாகவே மனிதன் பிறக்கிறான்.

காமத்தினால் செய்யப்பட்டவன் எப்படி காமத்தினால் ஈர்க்கப்படாமல் இருப்பான்? உணவுக்கு அப்புறம் ஒரு மனிதனுக்கு தேவை என்னவாக இருக்க முடியும்? காமம்தான். இயற்கை எல்லா உயிர்களையும் அப்படித்தான் படைத்திருக்கிறது. மயிலுக்குத் தோகையும், சிங்கத்திற்கு பிடரியும், யானைக்கு தந்தமும் இயற்கை தந்தது தற்செயலானது அல்ல. 



ஆண் - பெண் ஈர்ப்பு எல்லா உயிரினங்களிலும் இருந்தே தீரும். மனிதன் மட்டும் எப்படி விதிவிலக்கு ஆவான்? ஆதி காலத்தில் மனிதன் மிருகங்களைப் போல் எப்படி எப்படி எல்லாமோ வாழ்ந்து,

அப்புறம் சமூகம், குடும்பம், திருமணம் போன்ற அமைப்புகளை உருவாக்கினான். பல நூற்றாண்டுகளாக இந்த ஏற்பாடுகள் இருப்பதால், மனிதன் தன்னுள் உள்ள ஆதி உணர்ச்சிகளை விட்டு விடுவானா

என்ன? எனவே, அது அவ்வப்போது நாகரிகமாகவும், அநாகரிகமாகவும், சூழ்நிலையைப் பொறுத்தும், மனிதர்களின் தராதரத்தைப் பொறுத்தும் தலை காட்டியே தீரும்.

இன்னொன்று... குடும்ப உறவுக்கு அப்பால் எழும் உறவுகள் பொறுப்புணர்ச்சி அற்றவை. இன்பத்தை மட்டுமே பிரதானமாய்க் கொண்டவை. தேவையில்லாதபோது விட்டுவிடலாம். தண்ணீர் விட வேண்டாம்,

மருந்து அடிக்க வேண்டாம், காவல் காக்க வேண்டியதில்லை, ஆனால் பழத்தை மட்டும் பறித்துக்கொள்ளலாம். இன்பத்துக்கு இன்பம்... ‘நான் இதற்கு பொறுப்பில்லை’ என்ற தப்பித்தல் வசதி இலவசம்.

எனவே, கட்டிட வேலை முதல் கம்ப்யூட்டர் வேலை வரை ஆணும், பெண்ணும் எங்கெல்லாம் ஒன்றாக வேலை பார்க்கிறார்களோ, அங்கெல்லாம் ஏதோ ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் மெல்லிய

இழையாய் ஒரு சொல்லப்படாத உறவு ஓடிக்கொண்டுதான் இருக்கும். குறைந்தபட்சம் ஒரு ஜோடியைப் பற்றி கிசுகிசுவேனும் உலவும். உங்கள் பணி இடத்திலும் இப் பிரச்னை இருக்கக்கூடும்.
 
இதில் சிக்கிக்கொண்டு நிம்மதியையும், குடும்ப அமைதியையும் இழந்தவர்கள் நிறைய. வேலையை இழந்து தவித்தவர்கள் அதை விட அதிகம். காரணம், வெளிப்படையானது! வெறும் இன்பத்தை மட்டுமே

அடிப்படையாகக் கொண்டு, பொறுப்புகளைத் தவிர்க்கிற எந்த விஷயத்திலும் தர்மசங்கடங்களும், தலைகுனிவுகளும் வராவிட்டால்தான் ஆச்சரியம். தொடர்புடைய ஆணோ, பெண்ணோ பிரச்னைகள் வருகிறபோது நிர்வாகத்திடம், ‘‘புலனடக்கம், ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடு என்பதெல்லாம் நடுவில் வந்தவை. ஆனால் ஆண் - பெண் ஈர்ப்போ மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருப்பது; இயற்கையானது’’ என்று நியாயம் பேசிக் கொண்டு இருக்க முடியாது.

உண்மையில் தனி மனித ஒழுங்குதான் நிர்வாகத்திற்கும் பெருமை தருகிறது. பணி இடத்தின் பெயர், மேன்மை, கம்பீரம் இவற்றுக்கு பாதிப்பு ஏற்படுவதை நிர்வாகம் சகிக்காது. இன்றைய நாட்களில் ஆணும், பெண்ணும் ஒன்றாக வேலை பார்ப்பது தவிர்க்க முடியாதது. இயல்பிலேயே முட்டை ஓடு போன்ற இந்த உறவை இன்றைய இன்ப நுகர்வு கலாசாரம் எப்போது வேண்டுமானாலும் உடைக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. ஒரு செல்போனின் உதவியோடு வீட்டில், அலுவலகத்தில் இருந்தவாறே எல்லோரது கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு இந்த உறவிற்கு அஸ்திவாரம் என்ன, பில்டிங்கையே கட்டி முடித்து விடலாம். 

ஒருவர் தான் வேலை பார்க்கும் இடத்தில் சுயமாகவே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னை இது. ஒரு பெண் ஆணின் இரட்டை அர்த்த ஜோக்கை வரவேற்றுச் சிரித்தாள் என்றால், அதை ஆண் அடுத்த கட்டத்துக்கான அனுமதியாகவே கருதுவான். சந்தேகமே வேண்டாம். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தேவையின்றி அதிக நெருக்கம் காட்டினால் பின்னால், ‘‘இந்தப் பெண்களே இப்படித்தான்...’’ என்று

புலம்பத் தயாராகிவிட்டான் என்றுதான் பொருள்.

பணி இடத்தில் இந்த மாதிரி தற்காலிக உறவுகளை ஏற்படுத்தி இன்பம் காணுவது பெரிய விஷயமே அல்ல. ஆனால், அப்புறம்..? இதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், பிரச்னைகள்

ஏற்பட்டு, வெளியில் சொல்ல முடியாத காரணங்களால் அவமானப்பட்டு..! சரி, பணி இட பாதிப்பை விடுங்கள். ஒருவேளை இது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக இருந்துவிட்டால், இந்த விஷயங்கள் இருவர் குடும்பத்திற்கும் தெரிய வருகிறபோது... அன்றாடம் எத்தனை விஷயங்களை செய்தித்தாள்களில் பார்க்கிறோம்..!

ஒருவன் வேலை பார்க்கும் இடத்திலிருந்து ஏதேனும் பிரச்னை காரணமாக வெளியேற நேர்ந்தால் அது என்ன மாதிரியான பிரச்னை என்றாலும் நாளடைவில் எல்லோராலும் மறக்கப்படும், பெண் பிரச்னையைத் தவிர! வாழ்வதற்காகத்தான் வேலை பார்க்க வருகிறோம். வாழ்க்கையைத் தொலைப்பதற்கா?
அதற்காக பணி இடங்களில் ஆணும், பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் பழகக்கூடாது என்பதோ, பார்த்தாலேயே ஓடி விட வேண்டும் என்றோ, கண்ணுக்குத் தெரியாத திரையை ஏற்படுத்திக் கொண்டு விலக வேண்டும் என்றோ இதற்கு அர்த்தம் அல்ல. பழக்கங்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது. அது அடுத்தவர்களோ, அலுவலக விதிகளோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரவர் மனசாட்சியே அதை அறியும்!

 இந்த உலகில் பொதுவாக ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமே பேரின்பம் தரக்கூடியவர்கள். இது இருந்தால்தான் குழந்தை, கவிதை, இலக்கியம் எல்லாம். அதேபோல் ஆணுக்கு பெண்ணால் மட்டுமே சொல்லொண்ணா துயரத்தைத் தர முடியும். பெண்ணிடம் ஆணால் மட்டுமே நிம்மதியைப் பிடுங்க முடியும். இதை மனதில் கொண்டு பழகுங்கள்.
(வேலை வரும்...)