வெங்காய வெடி!





தீபாவளி ராக்கெட்டில் ஏறி உயரப் பறக்கிறது வெங்காய விலை. கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயம் ஓரளவுக்கு இங்கு விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், வட இந்தியாவில் நிலைமை மோசம்! பெட்ரோலைவிட விலை அதிகம். சில நாட்களில் தேர்தல் நடக்க இருக்கும் டெல்லியில் வெங்காய விலையால்தான் முன்பு ஆட்சியைப் பறிகொடுத்தது பி.ஜே.பி. 15 ஆண்டுகளாக அவர்களால்

மீண்டும் ஜெயிக்க முடியவில்லை. இப்போது காங்கிரஸ் அரசை வெங்காயம் மிரட்டுகிறது. ‘‘இன்னும் மூன்று வாரங்களுக்கு விலை குறையாது’’ என ஜோசியம் சொல்கிறார் மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார்.

வெங்காயம் தொடர்பான ஜோக்குகளும் இந்தச் சூழலில் நிஜமாகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வார்த்தை, வெங்காயம்தான். ஜெய்ப்பூர்  டெல்லி நெடுஞ்சாலையில் 40 டன் வெங்காயத்தோடு வந்த லாரியைக் கடத்த முயற்சி நடந்தது. ஆம்லெட்டில் வெங்காயம் இல்லாததால் ஒரு பிளாட்பாரக் கடைக்காரர் கத்தியால் குத்தப்பட்டார். ‘சேலை

வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என வட இந்திய நகரங்களில் ஆஃபர் தருகிறார்கள்.



இந்த நகைச்சுவைகளைத் தாண்டி வெங்காய விலை உயர்வு கண்ணீர் வரவழைக்கிறது. தினசரி சமையல் வெங்காயம் இல்லாமல் முழுமை பெறுவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால், நடுத்தரக்

குடும்பங்களின் பட்ஜெட்டில் விலைச்சுமையை ஏற்றும் வெங்காயம், அதை விளைவிப்பவர்களுக்கும் பெரிய லாபம் தருவதில்லை. ‘‘இந்தியாவில் வெங்காயத்தின் விலையை 12 பேர் கொண்ட ஒரு தரகர்

குழு தீர்மானிக்கிறது. அதன்மூலம் கோடிகளில் லாபம் அடைகிறது. தடுக்க வேண்டிய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது’’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த வெங்காயத் தேவையில் 45 சதவீதத்தை மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவின் லாசல்காவ் பகுதியை ‘இந்தியாவின் வெங்காயத் தலைநகரம்’ என்பார்கள். இங்கிருக்கும் மிகப்பெரிய விவசாய விளைபொருள் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையே, இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வெங்காய விலையைத் தீர்மானிக்கிறது.

ஒரு ஏக்கரில் வெங்காயம் விளைவிக்க சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது. சுமார் 30 குவிண்டால் விளைச்சல் கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோ வெங்காயம் விளைவிக்க 17 ரூபாய் செலவாகிறது. இந்த வெங்காயத்தை அவர் மார்க்கெட் கொண்டு சென்று விற்றால், அங்கு தர வேண்டிய கட்டணங்கள், போக்குவரத்து செலவு போக அவருக்கு 26 ரூபாய் கிடைக்கும். கிட்டத்தட்ட மூன்று மாத உழைப்பில் ஒரு கிலோ வெங்காயம் அவருக்கு சம்பாதித்துத் தருவது 9 ரூபாய்தான்! கிலோ 90 ரூபாய்க்கு விற்றாலும், அவருக்குக் கிடைக்கும் லாபம் இதுதான்!



அப்படியானால் யாருக்கு லாபம் போகிறது? லாசல்காவ் மார்க்கெட்டில் 12 பெரிய தரகர்கள் இருக்கிறார்கள். வெங்காயத்தை தரம் பார்த்து விலை முடிவு செய்வது இவர்கள்தான். இவர்கள் சொல்லும் விலைக்கு விவசாயி விற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் உதை விழும். இவர்களைத் தாண்டி வேறு யாராவது வெங்காயம் வாங்க வந்தாலும் அடி விழும். இவர்கள் சீசனில் வாங்கும் வெங்காயத்தை குடோன்களில் பத்திரமாகப் பதுக்கி வைக்கிறார்கள். துபாய், பஹ்ரைன், நேபாளம், வங்க தேசம் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் வெங்காயம் கிடைக்காதபடி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை ஏற்றுகிறார்கள். அதன்பின் தங்கள் குடோன்களிலிருந்து வெங்காயத்தை வெளியில் எடுக்கிறார்கள். சில நாட்கள் குடோனில் வைத்திருந்து, ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை லாபம் பார்க்கிறார்கள்.

இந்த சர்வகட்சி கூட்டணியை யாரும் தொட்டுப் பார்ப்பதில்லை. கடந்த செப்டம்பர் மாதம் விலை தாறுமாறாக எகிறியபோது, மகாராஷ்டிர விவசாயத் துறை அதிகாரிகள் வந்து இந்தத் தரகர்களிடம்

பேசினர். கடும்கோபத்தில் இருக்கும் அரசு, குடோன்களில் ரெய்டு நடத்தினாலும் நடத்தும் என அவர்கள் எச்சரித்தனர். கிலோ 57 ரூபாய் என மொத்த விலை, ஒரே நாளில் 43 ரூபாயாகக் குறைந்தது.

ரெய்டு என்ற எச்சரிக்கைக்கே இப்படி என்றால், உண்மையில் ரெய்டு நடந்திருந்தால்?
ஆனால் அதற்கு இங்கே அரசுகள் தயாராக இல்லை. குறைந்தபட்சம் விலை கட்டுக்குள் வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் யோசனை கூட இல்லை. சீனா, பாகிஸ்தான், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப் போகிறார்களாம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கலை, இந்தியர்களுக்கு மட்டுமே கைவந்தது!
 அகஸ்டஸ்