நீங்க இல்லாம நல்லாயில்லைன்னு சொன்னாங்க...





‘‘வாய் பேசாத ஆடு, மாடுகளை புரிஞ்சிக்க முடியும்ணே... ஓயாம பேசுகிற மனுஷங்களை புரிஞ்சிக்க இன்னும் ரெண்டு பெறவி வேணும் போல இருக்கு. ஆக, படம் நல்லா வந்திருக்கு. டைரக்டர் யுவராஜ் இளவட்ட பையன். ‘அட, யாருக்கய்யா... இந்தக் கதை தெரியாது’ன்னு சொல்லி சிரிச்சேன். இதில் சில விஷயங்களை சேர்ப்போம். நறுக்குத் தெறிச்ச மாதிரி நாலைந்து மேட்டர்களை பட்டை தீட்டி புதுசாகப் பிடிச்சிருக்கேன்னு சொன்னார். மொகத்தைப் பார்த்தேன். ஆர்வம் கட்டுக்கடங்காம தெரிஞ்சுது. புதுசா நம்மளை யூஸ் பண்ணி ஏதாவது செய்து காட்டிறணும்னு நினைக்கிறாரு. நாமளும் தெரிஞ்சோ தெரியாமலோ ரெண்டு வருஷமா மராவை மறந்திட்டோம். வீட்டு லைட்டு தவிர எதுவும் மூஞ்சில படலை. சரி, வந்துருவோம்னு கௌம்பிட்டேன்’’
என்கிறார் அசத் தல் கலைஞன் வடிவேலு.

‘‘‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராம’னில் இரட்டை வேஷம்... கிருஷ்ணதேவ ராயர், தெனாலிராமன்  எப்படி வித்தியாசப்படுத்தினீங்க?’’



‘‘நல்லவேளை, மச்சம் வச்சுக்கிட்டு வரலை. ரெண்டு பேரும் ரெண்டு தினுசு. எல்லோரும் அறிஞ்ச சிரிப்புக்காரன் தெனாலிராமன். முன்னாடி சிவாஜி சார் செய்திருக்கார். அவர் பக்கத்தில போக முடியுமா?

அதனால் வேறமாதிரி லைன் பிடிச்சுப் போனேன். பாடி லாங்குவேஜ்தான் நமக்கு சட்டுபுட்னு வருமே, அதுல விளையாடியிருக்கேன். ‘கட்’ சொல்லாம கேமராமேனும், டயலாக் பேப்பரை பறக்க விட்டுட்டு

டைரக்டர் தம்பியும் சிரிக்கிறாங்க. உயரத்தில லைட் புடிக்கிற அய்யா சிரிச்சு குலுங்குறாரு. தமிழ்நாடே குலுங்கப் போறதை அவங்க முகத்தில பார்த்தேன். ஆனால் இதையெல்லாம் விட சிரிப்பு, சிலர்

கொளுத்திப் போட்ட வெடிதான்ணே. தீபாவளிக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டாங்க. அறைக்குள்ளே டைரக்டரும் நானும் டிஸ்கஷன் பண்ணினால்... ‘கட்டிப் புரண்டு சண்டை’ங்கிறாய்ங்க. அவுட்டோர் போனா, ‘கடையை காலி பண்ணிட்டாய்ங்க’ன்னு அளந்து விட்றாய்ங்க. வாடகைக்கு கார் எடுத்திட்டு போயி... லீசுக்கு லாரி எடுத்துக்கிட்டுப் போயி... வதந்திகளை அள்ளி விடுறாங்க. எல்லாத்தையும் மீறி எழுந்து நிக்கிறான் இந்த தெனாலிராமன்.’’



‘‘டான்ஸ்ல பின்னி உதறுனீங்களே..?’’

‘‘சந்திரபாபு வரும்போதே எனக்கு கையும் காலும் உதறும்ணே, மனுசன் துள்ளிக் குதிச்சு ஆட்டத்தில் குத்தி எடுப்பாரு. அதுமாதிரி சில அயிட்டங்கள் இதுல வந்தது. டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்

கொடுத்தார். அதில் சில ‘பிட்’களைப் போட்டு பொரட்டி எடுத்து, ஆடினேன். குரூப் டான்ஸ் ஆடுகிற புள்ளைக அடிவயித்திலிருந்து சிரிக்குதுங்க. அப்புடி ஒரு தினுசா, புதுசா, வெரசா, எளசா இரண்டு மூணு

ஆட்டங்கள் போட்டிருக்கேன். இந்த மியூசிக் டைரக்டர் இமான் ‘நானே இதைப் பண்றேன்’னு ஆராய்ச்சி பண்ணி, சில கருவிகளை கண்டுபிடிச்சு பழைய ராகங்களை புதுப்பிச்சு பண்ணியிருக்கார்.’’

‘‘இந்த கேப்ல நிறைய பேர் வண்டியைப் பூட்டி பயணம் போயிட்டு இருக்காங்களே சாமி...’’

‘‘அண்ணே... வரட்டும்ணே... இந்த மழை பெய்யுதே, வடிவேலுக்கு மட்டுமா பெய்யுது! எல்லாருக்கும்தானே. எல்லாரும் இருந்து நல்ல மார்க்கமா சுத்த பத்தமா, அசிங்கம் பண்ணாமல் பொண்டுபிள்ளைகளை நரகல் நடையில திட்டாமல் காமெடி பண்ணினால் நல்லதுதானே! வெள்ளையா சிரிக்க வச்சா வணக்கம் சொல்லுவோம். கூறுவாறு இல்லாமல் பேசி காமெடி பண்ணினால் அது பாவம்ணே. ஆறு தலைமுறைக்கும் கூட கூட வந்து பாவம் சுத்தும். எங்கே போனாலும், ‘நீங்க இல்லாம நல்லாயில்லை’ன்னு சொன்னாங்க, ஏன் நடிக்கலைன்னு சண்டைக்குக்கூட வந்தாங்க. அபூர்வ ஜனங்கண்ணே, பொய் சொல்ல மாட்டாங்க!
அண்ணே... கடலை பார்த்தீங்களா? சில சமயம் அப்படியே குளம் மாதிரி கிடக்கும். அடிவாங்கி அழுது முடிச்ச புள்ளை மாதிரி அசந்து கிடக்கும். அதமாதிரி கிடக்கிற கடலில, பொயலு இல்லாத நேரத்துல ஓட்டத் தெரியாதவன் கூட படகு ஓட்டலாம்ணே. எல்லாம் அண்ணனுக்குத் தெரியும்... தெரியாத மாதிரியே நடிச்சு வாயைப் புடுங்கிறது!’’


‘‘உங்களையும் ரெண்டு வருஷம் உட்கார வச்சிட்டாங்களே..?’’

‘‘சரி... அவங்களுக்கு என்ன கிடைச்சது? ஆனா, மக்கள்கிட்ட நா சொல்றது... வதந்திகளை நம்பாதீங்க! எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. நல்லாயிருக்கேன். பொண்ணு கல்யாணத்தை நடத்தி

முடிச்சேன், ஆத்தா பக்கத்திலே உட்கார்ந்து வெத்தலை இடிச்சுக் கொடுத்தேன். புதன், சனி எண்ணெய் தேய்ச்சு குளிச்சேன். ஷேவிங் பண்ணிக்காம ஒரு வாரம் போல கெடந்தேன். சொந்தக்கார வீடுகளுக்கு

விசிட் அடிச்சேன். பக்கத்து அக்கத்து ஊர்களுக்கு குலதெய்வத்தைப் பார்க்கப் போனேன். பின்னாடி ரெஸ்ட் எடுக்கிறதை, இப்ப எடுத்திட்டு சும்மா ‘திம்’னு வந்திருக்கேன்.

நகைச்சுவை பண்றவங்களை எல்லோருக்கும் புடிக்கும்ணே. நமக்கு யாரைப் பிடிக்காது, எதுக்குப் போனோம், திரும்பிட்டோம்னு எல்லோருக்கும் தெரியும்... அவ்வளவுதான்! நமக்கு எல்லாரும்

ஒண்ணுதான். சில அல்லக்கைகள் நினைச்சுக்கிட்டு வெடச்சுக்கிட்டு திரிஞ்சா தப்புண்ணே. எல்லோரும் எனக்கு வேணும்ணே!’’
 நா.கதிர்வேலன்