ஆர்யா கல்யாணம் முடிஞ்சதும் என் கல்யாணம்!





‘‘இந்த தீபாவளியிலிருந்து ஒரு நடிகனா, தயாரிப்பாளரா எனக்குப் புது வெளிச்சம் கிடைக்கப் போகுது. அதுக்குக் காரணமா ‘பாண்டியநாடு’ இருக்கும். சுசீந்திரன், பாரதிராஜா சார், கேமராமேன் மதி, இமான் மியூசிக், வைரமுத்து பாடல், அழகான ஹீரோயின் லட்சுமி மேனன்னு நல்ல டீம் அமைஞ்சதே ‘பாண்டியநாடு’க்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன்’’  நம்பிக்கை மத்தாப்பை மலர விட்டுப் பேசுகிறார் விஷால்.

‘‘கொஞ்சம் சதை போட்டு ஆளே மாறிட்டீங்களே?’’
‘‘நண்பர் திரு மூலமாத்தான் சுசீந்திரனும் நானும் மீட் பண்ணினோம். கதை கேட்டு முடிச்சதுமே, ‘இந்தப் படத்தில் சிக்ஸ் பேக் இல்லாம கொஞ்சம் புஷ்டியான விஷாலா நீங்க வேணும்’னு சுசி ஒரே ஒரு

வேண்டுகோள்தான் வச்சார். டயட்டை மறந்துட்டு வாய்க்குப் பிடிச்சதை வகை வகையா சாப்பிட்டேன். அதான் இந்த சேஞ்ச். நடுத்தர வர்க்க இளைஞனோட பழி வாங்கும் படலம்தான் கதை. பத்து

வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தேனோ, அதுக்கு எதிர்மறையான கேரக்டர், பாடி லாங்குவேஜ்னு பண்ணியிருக்கேன். ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு தீனியுள்ள ஒரு கதாபாத்திரம்னு இதைச்

சொல்லலாம்.’’

‘‘பாரதிராஜா என்னவா வர்றார்?’’

‘‘என்னோட அப்பாவா நடிச்சிருக்கார். அவர்கிட்ட சுசி, ‘விஷாலுக்கு அப்பாவா நடிக்கணும்’னு சொன்ன அடுத்த நொடியே, ‘அவன் ரொம்ப உயரமா இருப்பானே... கரெக்டா வருமா?’ன்னு கேட்டாராம்.

பாரதிராஜா சாருக்கு பிரமாதமான கேரக்டர். நான் கதை கேட்கும்போது என்னோட கேரக்டருக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கானு பார்க்காமல், மற்ற கேரக்டர்கள் என்ன பண்ணுதுன்னு கவனிப்பேன்.

ஸ்ரேயா ரெட்டியோட பொம்பள வில்லன் கேரக்டர்தான், என்னை ‘திமிரு’ படத்தை ஒப்புக்க வச்சது. அதே மாதிரிதான் ‘பாண்டியநாடு’ல பாரதிராஜா கேரக்டர் என்னை ஈர்த்தது. அது ரசிகர்களுக்கும் புது

அனுபவமா இருக்கும். அடுத்து என்ன நடக்கும்... எப்படி முடியும்ங்கிற பதைபதைப்பு ஆடியன்ஸை சீட் நுனியில உட்கார வைக்கப் போவது உறுதி. படம் முடிஞ்சதும் சுசீந்திரன்கிட்ட, ‘மறுபடியும் சேர்ந்து பண்ணணும்’னு சொன்னேன். பண்ணுவோம்!’’



‘‘தயாரிப்பாளர் ஆனது திடீர் முடிவா?’’

‘‘ஒரு கோபத்தில் எடுத்த முடிவுதான். என்னை நிலை நிறுத்திக்கணும், புதுசா ஏதாவது பண்ணணும்னு உத்வேகம்... ப்ளஸ் சில கோபங்களும்தான் விஷால்
ஃபிலிம் பேக்டரி ஆரம்பிக்கக் காரணம். அப்பாவும் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் என் முடிவைச் சொன்னப்போ, பெரிசா ரீயாக்ட் பண்ணிக்கல. ஒரே மூச்சில் மொத்த ஷூட்டிங்கையும் முடிச்சிட்டு

சென்னை திரும்பியதும் அப்பா முன்னால போய் நின்னேன். ‘இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் இருக்கு?’ன்னு கேட்டார். ‘ஷூட்டிங் ஓவர்... தீபாவளி ரிலீஸ்’னு சொன்னதும், ‘ஒரு நல்ல

தயாரிப்பாளருக்கு திட்டமிட்டு செயல்படுறதுதான் லட்சணம். அது உங்கிட்ட இருக்கு’னு ஆசீர்வதிச்சார். அந்த நொடியில் இருந்தே படத்தோட சக்சஸ் அலாரம் கேட்டுட்டே இருக்கு!’’

‘‘மறுபடியும் பாலா..?’’

‘‘என் கேரியரில் முக்கியமான படத்தைக் கொடுத்த இயக்குனர் அவர். அப்பப்ப போன் பண்ணி நலம் விசாரிப்பார். ‘மதகஜராஜா’ ஷூட்டிங் டைம்ல, ‘காமெடி படம்தானே பண்றே... அப்புறம் ஏன் அடிபட்டு ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் போறே’ன்னு அக்கறையா கேட்பார். ‘அவன் இவன்’ நவரசம் கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்கும்னு நிறைய பேர் சொன்னாங்க. விருதை நினைச்சு படம் பண்ற ஆளு நான்


இல்ல. கிடைச்சா சந்தோஷம், கிடைக்கலைன்னாலும் கவலை இல்லை. ஷூட்டிங் சமயத்திலேயே, ‘ரசிகர்கள் இதுவரை பார்க்காத, நடிகர்கள் யாரும் முயற்சி பண்ணாத ஒரு கேரக்டர். கண்டிப்பா உனக்கு

அங்கீகாரம் கிடைக்கும்’னு பாலா சார் சொன்னார். அதனால எனக்கு விருது கிடைக்காததில் நிச்சயமா பாலா சாருக்கு வருத்தம் இருக்கு.

நடிகனா எனக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் பாலா சார்கிட்ட போய் நின்னு, ‘எனக்கு சோறு போடுங்க’ன்னு கேட்பேன். அவர் இயக்கும் எல்லா படத்திலும் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. சமீபத்தில்

ஒருநாள் போன் பண்ணி, ‘ஆபீசுக்கு வர்றியா... பேசணும்’னு கூப்பிட்டார். போனதும், ‘மைண்ட்ல ஒரு விஷயம் வச்சிருக்கேன். மறுபடியும் சேர்ந்து பண்ணுவோம். அடுத்த வருஷம் கொஞ்சம் டேட்டை

ஃப்ரீயா வச்சுக்கோ’ன்னு சொன்னார். சந்தோஷ சிகரத்தோட உச்சியில இருக்கேன். அடுத்து திரு இயக்கத்தில் நடிக்கப் போறேன். நவம்பர் 10ம் தேதி ஷூட்டிங் தொடங்குது. அடுத்த ரெண்டு மாசத்தில்

பாலா சார் படத்தோட அறிவிப்பு வரலாம்.’’
‘‘நடிகர் சங்கத்தில் என்ன சலசலப்பு?’’

‘‘சலசலப்பும் இல்லை. சண்டையும் இல்லை. எல்லா சங்கத்துக்கும் கட்டிடங்கள் இருக்கு. நடிகர் சங்கத்துக்கு மட்டும் இன்னும் கட்டலை. சரத்குமாரிடம் வேற யாரும் கேள்வி கேட்டுடக் கூடாதே என்ற அக்கறையைத்தான் பொதுக்குழுவில் கேள்வியா வச்சோம். நடிகரா மட்டுமில்லாம, தனிப்பட்ட மனிதராகவும் என்னை பிரமிக்க வைத்தவர் சரத்குமார். அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. எனக்கும்

வரலட்சுமிக்கும் ஏழு வயசிலிருந்து தொடருது நட்பு. சரத்குமாருக்கு எதிர் அணியில் நான் நிற்கிறேன் என்று செய்தி வரும்போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருக்கும். ஆனால், வரு புரிந்துகொள்கிறார்.



எதிரணி திரட்டி நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணமோ, தலைவராகும் ஆசையோ எனக்கு சுத்தமாக இல்லை. அப்படி நினைப்பது முட்டாள்தனம். அதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள்.’’

‘‘அடுத்த தீபாவளி தலை தீபாவளியா இருக்குமா?’’

‘‘கண்டிப்பா இருக்காது. கல்யாணக் கனவுகளை சுமக்கிற டைம் இது இல்ல. நிறைய வேலைகள் இருக்கு. முதல்ல நம்மாளு ஆர்யாவுக்கு முடியட்டும்... அப்புறம் பார்த்துக்கலாம். ஆர்யா எவ்வழியோ அவ்வழிதான் எனக்கும். அவன்தான் எனக்கு குரு. ஆனா, ஒண்ணு... கண்டிப்பா காதல் கல்யாணம்தான்!’’
 அமலன்