கமலோட ஒரு சீன்லயாவது நடிக்கணும்!





ஷகிலா. பெயரே இவரது அடையாளம். மலையாள சினிமாவை தன் விரலசைவுக்கு ஆட்டம் போட வைத்த இந்த கவர்ச்சிப் புயல், இப்போதும் கோடம்பாக்கத்தில் எளிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு சந்தித்தபோது மனம் திறந்தார்...

‘‘அண்ணன், அக்கா, தம்பி, தங்கைன்னு நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான் நானும். படிப்பு மட்டும் ஏறல. பத்தாவது ஃபெயிலாகிட்டேன்னு ரிசல்ட் அன்னிக்கு வீட்டுக்கு வெளில நிக்க வச்சி அப்பா

அடிச்சாரு. அப்போ அந்த வழியா போன ஒரு சினிமா மேக்கப்மேன்,  ‘வயசுக்கு வந்த பிள்ளையை இப்படி அடிக்கிறீங்களே’ன்னு கேட்டார். ‘இவளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்திங்க. என்னத்த அடிச்சாலும்

ஒழுங்கா படிக்க மாட்டாள்’னு அப்பா கவலையா சொன்னார்.

அந்த மேக்கப்மேன் என்ன நினைச்சாரோ தெரியல... ‘ஏம்மா, சினிமால நடிக்கிறீயா?’ன்னு கேட்டார். நான் கலரும் இல்ல; சூப்பர் ஃபிகரும் இல்ல. எனக்கு எதுக்கு சினிமான்னு தயங்கினேன். ஆனா நான்

சொல்றதுக்கு முன்னாடியே அப்பா பர்மிஷன் கொடுத்திட்டாரு. ‘பிளே கேர்ள்’ படத்தில சில்க் தங்கையா நடிக்கக் கூட்டிட்டுப் போனாங்க. வேண்டா வெறுப்பா நடிச்சேன். அப்போ எனக்கு பதினாறு வயசு.

ஆனா பார்க்கறதுக்கு வாட்டசாட்டமா இருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகு ‘கின்னார தும்பிகள்’ மலையாளப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. 35 வயசு பொண்ணு, 15 வயசு பையனோட தப்பு பண்ற

மாதிரி கேரக்டர்னு சொன்னதும் எனக்கு அழுகை வந்திடுச்சு. ‘என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?’ன்னு கோபப்பட்டேன்.

இதுக்கு இடையில் அப்பா இறந்துட்டார். உடம்புக்கு முடியாம இருந்த என் அம்மா, ‘எத்தனை நாள் இப்படியே இருக்கறது? சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு சொன்னதும் நடிக்க ஓகே சொல்லிட்டேன்.

மலையாளம் புரியல. அந்த சாப்பாடு புடிக்கல. விதியேன்னு சகிச்சிட்டு கேரளாவே கதின்னு கிடந்தேன். அப்புறம் வரிசையா வாய்ப்புகள். ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிட்டு இருந்தவளுக்கு ரெண்டு

லட்சம் தர்றேன் அஞ்சு லட்சம் தர்றேன்னு கம்பெனிங்க கெஞ்ச ஆரம்பிச்சாங்க. எனக்குள்ளே இருந்த பணப் பேய் கண் முழிக்க, வந்த எந்தப் படத்தையும் விடல!



கட்டு கட்டா பணம், கைநிறைய நகைகள்னு நிறைய பார்த்த நான், கணக்கு பார்க்க தவறிட்டேன். எல்லாத்தையும் அம்மாகிட்ட கொடுத்தேன். அவங்ககிட்ட இருந்து அக்கா வாங்கி வச்சிக்கிட்டாங்க. சின்ன வயசில என் தேவை களை பார்த்துக்கிட்டது அக்காங்கறதால அசால்ட்டா இருந்துட்டேன். கடைசியில் எல்லாம் போச்சு! அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சின்னு அடுத்தடுத்து எல்லாரையும் இழந்தேன்.

தங்கச்சிதான் சொந்த வீடுவாங்ணும்னு அடம் பிடிச்சு, நெசப்பாக்கத்தில் பங்களா வாங்கினேன். வீடு வாங்கின கொஞ்ச நாளிலேயே தங்கச்சி இறந்துட்டா. சுவரைப் பார்த்தாலும் அவ ஞாபகம். இருக்கப்

பிடிக்காம வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு வந்துட்டேன்.

நான் நிறைய இங்கிலீஷ் படம் பார்ப்பேன். அதிலிருந்து என்னை பாதிச்ச விஷயங்களை வச்சி கதை பண்ணினேன். ஒரு புரொடியூசர் கேட்டுட்டு தயாரிக்க முன்வந்தார். அதில் நந்திதா தாஸ் நடிச்சா நல்லாயிருக்கும். ஆனா நான்தான் நடிக்கணும்னு புரொடியூசர் அடம் பிடிக்கிறார். நான் எங்கே? நந்திதா தாஸ் எங்கே? முடிவுக்கு வராம அப்படியே நிற்குது.

இதாவது பரவாயில்ல... நான் கன்னியாஸ்திரி மாதிரியான கேரக்டரில் நடிக்கணும்னு ஒருத்தர் வந்தார். ‘என் கண்ணுல செக்ஸ்தானே தெரியுது. இது சரிவருமா’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘உங்க கண்ணுல நான் கருணையை பார்க்கறேன்’னு சொன்னார். ‘மாட்டிக்கப் போறீங்க’ன்னு சொல்லியும் கேட்காம படத்தை எடுத்தார். இப்போ எதிர்ப்பு கிளம்பி அதுவும் பாதியிலேயே நிக்குது!



நடுவுல நான் மலையாளப் படங்கள்ல நடிக்கறதை விட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு... சில வருஷங்களுக்கு முன்னாடி சென்னை, பல்லாவரத்தில் ஒரு ஷூட்டிங். பக்கத்துல ஒரு தியேட்டர்ல நான் நடிச்ச மலையாளப் படங்கள் எப்பவும் ஓடும். அன்னைக்கும் அந்த தியேட்டரில் பெரிய சைஸில் என்னோட பேனர். மேக்கப்மேனை விட்டு தியேட்டருக்குப் போய் படம் பார்த்துட்டு வரச் சொன்னேன். ஒரு மணி நேரம் கழிச்சி வந்தவர், ‘அக்கா! நீங்க நடிச்ச ஒரே ஒரு சீன் மட்டும்தான் வருது. மற்ற சீன்ல துணியில்லாம வேற யாரோ நடிக்கிறாங்க’ன்னு சொன்னதும் ஷாக். எங்கிட்ட கதை சொல்ல வர்றவங்க நல்லாதான் சொல்றாங்க. கடைசியில தப்பான சீன் வச்சி பிட்டு படமா ஓட்டுறாங்க. மலையாளப் படத்தில் இனி நடிக்கறதில்லைன்னு அன்னிக்கே 27 படத்தோட அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தேன்.

இந்த சமயத்தில மோகன்லால் நடிச்ச ‘சோட்டா மும்பை’ படத்தில் நடிகை ஷகிலாவாகவே நடிக்க கூப்பிட்டாங்க. பெரிய ஹீரோ... நம்மளையெல்லாம் எங்க மதிக்கப் போறார்னு நினைச்சேன். ஆனா, ‘நீங்க நடிச்ச ‘கின்னார தும்பிகள்’ பார்த்தேன். நல்லா நடிச்சிருந்தீங்க’ன்னு லால் சார் சொன்னப்போ சந்தோஷப்பட்டேன். அப்புறமென்ன... மறுபடியும் மலையாளத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.



என்னை ஏன் ரசிக்கிறாங்கன்னே தெரியல. அப்படி எங்கிட்ட என்ன இருக்குன்னும் புரியல. ஸ்லிம்மா இருந்தாலும் பரவாயில்ல. குண்டா வேற இருக்கேன். ஆனா என் படத்தைப் பார்க்க ஒரு கூட்டமே

இருக்கு. இந்த மக்கள நினைச்சி வருத்தப்படுறதா, சந்தோஷப்படுறதா?



இப்போ எனக்கு 36 வயசு. எத்தனையோ பேர் என்னை நெருங்க முயற்சி பண்ணி இருக்காங்க. ஆனா ஒருத்தரோட மட்டும்தான் காதல் வந்தது. இரு வீட்டாரும் சம்மதிச்சு, கல்யாணப் பத்திரிகை வரை போனது. ஆனா அப்பவே என்னோட சுதந்திரத்துக்குக் குறுக்கே அந்த நபர் நிற்க ஆரம்பிச்சார். அண்ணன் குழந்தைகளுக்கு உதவி செய்யுறதைக்கூட அவர் அனுமதிக்கல. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்குப் பிறகு நாம இவருக்கு அடிமையா காலம் முழுக்க இருக்கணுமேன்னு கவலை வந்துச்சு. உடனே கல்யாணத்தை நிறுத்தினேன். இனி என் வாழ்க்கையில் கல்யாணம் நடக்குமான்னு தெரியாது. வருங்காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் தொடங்கும் ஆசை இருக்கு. அந்தக் குழந்தைகள் என்னை அம்மான்னு கூப்பிடுற சந்தோஷத்திலேயே காலத்தைத் தள்ளணும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆசைதான்... கமல் சார்கூட ஒரு சீன்லயாவது நடிச்சிடணும்!’’
 அமலன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்