நிழல்களோடு பேசுவோம்





சைக்கிள் செல்லும் பாதைஒரு நாள் எலியட்ஸ் கடற்கரையில் எனக்கு அருகில் இரண்டு பையன்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருமே ஸ்போர்ட்ஸ் உடையில் இருந் தார்கள். சற்று நேரத்தில் அவர்கள் தங்கள் அருகில் இருந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்கள். அப்போது தான் அவர்களின் சைக்கிள்களைக் கவனித்தேன். வித்தியாசமான மாடலில் இருந்தது. ஆங்காங்கே

விளக்குகள் மினுங்கின. என் அருகில் இருந்த என் தங்கை பையனிடம், ‘‘இந்த சைக்கிள் எவ்வளவு இருக்கும்?’’ என்றேன். ‘‘கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்’’ என்றான். ‘‘ஒரு லட்சம் ரூபாய்க்கு

சைக்கிளா?’’ என்று அதிர்ந்தேன். ‘‘சென்னையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை சைக்கிள்கள் கிடைக்கின்றன. வாங்கித் தர்றீங்களா?’’ என்றான் சிரித்துக்கொண்டே.

சைக்கிளில் பயன்படுத்தப்படும் உலோகம், அதன் மெலிதான எடை, அதன் உள்ளே நவீன சாதனங்கள் என சைக்கிள்கள் இன்று அந்தஸ்தின் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நடுத்தர

வர்க்கத்திற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் உற்பத்தி செய்யப்படும் தேசத்தில், பணக்காரர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு சைக்கிள்கள் விற்கப்படும் வினோதத்தை என்னவென்று சொல்வது?
ஆனால் எது ஒன்று பொதுமக்களின் உபயோகத்திலிருந்து இல்லாமல் போகிறதோ, அது பணக்காரர்களுக்கு உரியதாக மாறிவிடும்; அல்லது அது ஒரு சமூக அந்தஸ்தைப் பெற்று விடும். இன்று ஆர்கானிக்

காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு வசதி படைத்தவர்கள் பெருமளவுக்கு வருகிறார்கள். சாதாரண மக்கள் காலங்காலமாக உண்டு வந்த இயற்கையான உணவுப் பொருள்கள்

இன்று அவர்களுக்கு அரிதாகி, விஷக் கனிகளை உண்டு விஷ நீரை அருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

லட்ச ரூபாய் சைக்கிள்களோடு சென்ற பையன்களைப் பற்றி சொன்னேன் அல்லவா? அப்போதுதான் வேறு ஒரு விஷயத்தைக் கவனித்தேன். கடற்கரையில் வேறு சைக்கிள்களே இல்லை. எங்கு

பார்த்தாலும் பைக்குகளும் கார்களும் நிரம்பியிருந்தன. நடைப்பயிற்சிக்கு வருபவர்களில் பலர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள்தான். அவர்கள் ஒரு சொகுசு காரில் வந்து இறங்கி, நடைப்பயிற்சி

செய்துவிட்டு, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தங்கள் வீட்டிற்கு காரில் போவார்கள். அல்லது, காரில் ஒரு சைக்கிளைக் கொண்டு வந்து எங்காவது ஒரு ஒதுக்குப்புறமான சாலையில் அதைக்

கொஞ்ச நேரம் ஓட்டுவார்கள். இந்தியர்களின் விசித்திரமான மன நிலைகளில் இதுவும் ஒன்று. ஒரு சைக்கிளை ஓட்டிக்கொண்டு நடைப்பயிற்சிக்கு வந்து செல்லலாமே என்று அவர்கள் ஒருபோதும்

யோசிக்க மாட்டார்கள். விலையுயர்ந்த சைக்கிள்கள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகக் கருதப்படும் அதே சமயம், பொது வாகனமாக சைக்கிளைப் பயன்படுத்துவதில் பெரும்பாலானோருக்கு ஒரு மனத் தடை

இருக்கிறது. அது ஏழைகளின் வாகனமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இது சைக்கிள்கள் சம்பந்தமான மனோபாவம் மட்டும்தானா? இல்லை. இன்றைய சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது ஆபத்தாக மாறிவிட்டது. தனியார் மோட்டார் வாகனங்களின் வளர்ச்சிக்காக இந்த நாட்டில் எப்படி பொதுப் போக்குவரத்து பலியிடப்பட்டதோ, அதே போல சைக்கிள்களும் பலியிடப்பட்டன. முன்பெல்லாம் கோடை விடுமுறையில் அல்லது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பையன்கள் வாடகை சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சுற்றுவது ஒரு முக்கிய கேளிக்கை. இப்போது வாடகை சைக்கிள் கடைகள் அரிதாகிவிட்டன. அதே போல சைக்கிள் பெண்களின் முக்கிய வாகனமாக இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது பெண்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாக இருந்திருக்கிறது. சின்ன வயசில் சைக்கிள் கற்றுக்கொண்ட அனுபவம், நம்மை சுதந்திரமான மனிதனாக உணர்ந்த அபூர்வமான சந்தர்ப்பம்.



ஆனால் இன்று சைக்கிள்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. அதிவேகமாக வரும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாதசாரிகளையும் சைக்கிளில் செல்பவர்களையும் கொன்று தீர்க்கின்றன.

வாகனம் ஓட்டுவதில் இந்தியர்களைப் போன்ற மூடர்களை எங்குமே பார்க்க முடியாது. பெரும்பாலானோருக்கு வேகம் குறித்து எந்த அறிவும் இல்லை. சாலை விதிகளின் மீதோ, மனிதர்கள் மீதோ எந்தப்

பொறுப்பும் இல்லாத மனிதர்கள் கையில் அதிவேக வாகனங்கள் இருப்பது, பைத்தியக்காரர்கள் கையில் துப்பாக்கி இருப்பதைவிட ஆபத்தானது.

சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனரும் புகழ்பெற்ற சூழலியல்வாதியுமான சுனிதா நாராயண், ஒரு ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் புதுடெல்லியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும்போது ஒரு காரினால் மோதப்பட்டு படுகாயமடைந்தார். அந்தக் கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மறுநாள் அவர் மருத்துவமனையிலிருந்து இவ்வாறு கூறினார்.

‘‘இந்தியாவில் கார்கள் சுதந்திரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக சைக்கிள் ஓட்டுபவர்கள் திட்டமிட்டு சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்!’’
உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று, 2010ல் இந்தியாவில் 6696 பேர் சைக்கிள் ஓட்டும்போது சாலை விபத்துகளில் கொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. இது உலகில் அந்த ஆண்டு விபத்துகளில்

கொல்லப்பட்ட சைக்கிளிஸ்டுகளில் 5 சதவிகிதம். பாதசாரிகளையோ சைக்கிள்களில் செல்பவர்களையோ கார் அல்லது மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் செல்வது இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, இன்று கிராமப்புற சாலைகளில்கூட மனிதர்கள் நடமாடுவது ஆபத்தாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு வாகனங்கள் பெருகிவிட்டன. குழந்தைகள் தெருவில் நடமாடுவதோ சைக்கிள் ஓட்டுவதோ மிகப்பெரிய அபாயமாக மாறிவருகிறது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் சைக்கிள் பயணம் என்பது கலாசார வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் என்ற மூன்று கோணங்களில் மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகச் சிறந்த வாகனமாக சைக்கிள் இருக்கிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எடைக் குறைப்பு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதய நோய்களைத் தடுப்பது, தேவையற்ற கொழுப்பைக் கட்டுப்படுத்துவது, சர்க்கரை நோயைத் தடுப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது, தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பது, உடல் வலிமையை அதிகரிப்பது என பல்வேறு விஷயங்களுக்கு சைக்கிள் ஓட்டுவதே சிறந்த வழிமுறை என்பதை மருத்துவ விஞ்ஞானம் தொடர்ந்து பரிந்துரைக்கிறது.
அதிகரித்து வரும் எரிபொருள் தேவை, நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல... ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. எரிபொருள் தேவைகளைச் சமாளிக்கவே இந்தியாவின் அன்னியச் செலவாணியில் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் எல்லா பொருள்களின்மீதும் படிந்து மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீர்குலைக்கிறது. முடிந்தவரை சைக்கிள்களைப் பயன்படுத்துவது பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை ஏற்படுத்தும் மாசு, சுற்றுச்சூழலின்மீது மிகப்பெரிய வன்முறை. புவி வெப்பமடைதலில் இதனுடைய பங்கு பிரதானமானது. வாகனப் புகையால் காற்று முற்றிலும் நஞ்சாகிவிட்டது. சைக்கிள் உபயோகத்தை அதிகரிப்பதுதான் இதற்கான ஒரே மாற்றாக முன் வைக்கப்படுகிறது.



பல நாடுகளில் சாலைகளில் சைக்கிளில் செல்பவர்களுக்காகத் தனி வழிகள் இருக்கின்றன. நடப்பதற்கான, சைக்கிள் ஓட்டுவதற்கான உரிமை வேண்டும் என்பது ஒரு இயக்கமாகவே வளர்ந்து வருகிறது.

சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான விதிகள் உண்டு. ஆனால் இங்கு சில பெரு நகரங்களில் அதற்கான பாதைகள் இருந்தாலும் அவை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகின்றன. இன்னொருபுறம் தங்க நாற்கர சாலைகள் வந்த பிறகு சைக்கிளில் செல்பவர்களின் நிலை மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. கார்கள் சாதாரணமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. கிராம மக்கள் சைக்கிளில் அந்த சாலையோரங்களில் செல்வது மரண விளையாட்டு என்றே சொல்லலாம்.

என் தந்தை தனது 76வது வயதில் இறக்கும்வரை சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு எந்த நோயும் இருக்கவில்லை. மருத்துவர்கள் அவரது சைக்கிளிங்தான் அவரை நன்றாக வைத்துக்கொண்டிருந்தது என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். சென்னை நகரில் வாடகை சைக்கிள் நிலையங்களை அரசே அமைக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு சொன்னார்கள்.

அதைவிட சைக்கிள் வாடகைக் கடைகளை நடத்துவதற்கு வேலையில்லாத இளைஞர்களுக்கு கடன் உதவிகள் வழங்கலாம். குறைந்த விலைக்கு சைக்கிள்கள் கிடைக்க மானியம் தரலாம். வீட்டுக்கொரு மரம் என்பதைப் போல வீட்டுக்கொரு சைக்கிள் திட்டம் கொண்டு வரலாம். எல்லாவற்றையும் விட சைக்கிள் ஓட்டுபவர்களுக்குப் பாதுகாப்பான சாலைகளை உருவாக்க வேண்டும்.சைக்கிள்கள் மோட்டார் யுகத்தின் தீமைகளுக்கு எதிரான ஒரு யுத்தம்.
(பேசலாம்...)


நெஞ்சில் நின்ற வரிகள்
இந்திய வாழ்க்கையில் பெண்ணிற்குக் கிடைக்கும் முக்கியமான தண்டனைகளில் ஒன்று, திருமண தினத்தன்று அதுவரையிலான அவளது வாழ்க்கையிலிருந்து அகதியாக்கப்படுவதுதான். தனது சூழலிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு இன்னொரு இடத்திற்கு அனுப்பப்படுகிறாள் அவள். இதை ஒரு இளம்பெண் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. கல்யாண வீடுகளில் அழும் பெண்களின் காட்சி மனதை உருகச் செய்வது. இந்தத் துயரத்தை ‘கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் அவ்வளவு நுட்பமாக வடித்துவிடுகிறது.
‘போறாளே பொன்னுத்தாயி
பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள’
என்பதில் ஒரு கிராமத்து வாழ்க்கையின் ஆதாரமான வேர்கள் நடுங்குவதைக் காணலாம்!
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம்
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒண்ணு
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
என்ற வரிகளில் காதல் திருமணம் தொடர்பான நமது சமகால சரித்திரம் இன்று கடந்து செல்கிறது.

மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு மெஜாரிட்டியைக் காட்டவேண்டும் என்று ராகுல் காந்தி சொல்கிறாரே?
 எஸ்.கதிரேசன்,
பேரணாம்பட்டு.
‘அண்ணன் மேல கை வச்சுப் பாருங்கடா’ என்ற வடிவேல் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.
ஒருவேளை உ.பி.யில் 1000 டன் தங்கப் புதையல் கிடைத்துவிட்டால்?
 மல்லிகா அன்பழகன், சென்னை28.
கனவு கண்ட சாமியார் இந்தியப் பிரதமர் ஆகிவிடுவார்.
சொர்க்கம், நரகம் போன்றவையெல்லாம் இருக்கிறதா?
 ஜி.மஞ்சரி,
கிருஷ்ணகிரி.
நானும் இல்லையென்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், சில மனிதர்களைச் சந்திக்கும் வரை!
முட்டாள்கள் எங்கே உருவாகிறார்கள்?
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
முட்டாளாக்குபவர்களின் காலடியில்...
சினிமாவில் ஏன் வில்லனுக்குப் பாட்டு வைப்பதில்லை?
 கி.ரவிக்குமார், நெய்வேலி.
கதாநாயகன், கதாநாயகி போன்ற சுவாரசியமற்ற ஆட்களுக்குத்தான் பாடலின் கவர்ச்சி தேவை. வில்லன்கள் அடிப்படையிலேயே சுவாரசியமானவர்கள்.


எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
தமிழின் மிக முக்கியமான நவீன எழுத்தாளர் ஆர்.அபிலாஷ். நாவல், கிரிக்கெட் விமர்சனம், சமூக விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் செயல்படுபவர். அவரது ஒரு முகநூல்

பதிவிலிருந்து...
சமீபத்தில் மைய அரசின் செம்மொழி ஆய்வுக்கழகம் பேராசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள விருதுகள் வழங்கியது. இதுபோல் மைய அரசு இந்தி எழுத்தாளர்களுக்கு

வழங்குகிறது. அரசுப் பேராசிரியர்களுக்கு மட்டும் ஆய்வுக்கென லட்சக்கணக்கில் உதவித்தொகை கொடுக்கிறது யுஜிசி. ஆனால் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யும், பல்வேறு துறை சார்ந்து புத்தகம்

எழுதும் எழுத்தாளனுக்கு இத்தகைய எந்த ஆதரவும் கிடையாது. தொண்ணூறுகளில் தமிழவன், ரவிக்குமார் போன்றவர்கள் அறிமுகம் செய்த சிந்தனையாளர்கள் தமிழில் ஏற்படுத்தின தாக்கம் போல்

ஏதாவது ஒரு பழந்தமிழ் ஆய்வு செய்துள்ளதா? இல்லை. நாம் கைமாறு பார்க்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, இந்தப் பேராசிரியர்களுக்கு மட்டும் அரசு அள்ளி அள்ளிக் கொடுப்பது ஒரு

கண்மூடித்தனமான செய்கை. யுஜிசி தன் கீழுள்ள பேராசிரியர்களை மட்டும் தான் பொருட்படுத்தும் என்றால், பாடத்திட்டத்தில் அவர்கள் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
https://www.facebook.com/abilash.chandran.98?hc_location=stream