வேலை : ஒரு பக்கக் கதை





‘‘நான் படிச்சு முடிக்கறவரைக்கும், குடும்ப செலவுகளை சமாளிக்க வீட்டு வேலைக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டே. இரண்டு வீடுகளில், காலையில் பத்து மணிக்கு வேலைக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாங்க... ஒரே

சம்பளம். எந்த வீட்டுக்கும்மா போவே?’’  தன் அம்மா கிரிஜாவிடம் கரிசனத்தோடு கேட்டாள் வானதி.

‘‘ரெண்டு வீட்டிலேயும் ஒவ்வொரு நாள் வேலை செய்துட்டு முடிவு பண்றேம்மா...’’ என்ற கிரிஜா, இரண்டாம் நாளே முடிவெடுத்தாள்.

‘‘பக்கத்தில் இருக்கிற இடத்தை விட்டுட்டு, தூரத்தில் இருக்கிற வீட்டுக்கு வேலைக்குப் போக ஏம்மா முடிவு பண்ணே? சம்பளம் அதிகமா தர்றேன்னு சொன்னாங்களா..?’’  வானதி பரிவோடு கேட்டாள்.

‘‘காரணம் வேற! சின்னச் சின்ன குப்பைகளைப் பெருக்காம விட்டப்போ, முதல் வீட்டில் ‘இங்க குப்பை இருக்கிறது கண்ணுக்குத் தெரியலையா... என்ன வேலை செய்யறே?’ன்னு அதட்டினாங்க. தரையில்

கிடக்கிற சின்ன அயிட்டமெல்லாம் தெரியலைன்னா, கண்ணுல ஏதாவது கோளாறா இருக்கும்னு சந்தேகப்பட்டு டாக்டரிடம் அழைச்சுக்கிட்டுப் போய், கண்ணாடியை வாங்கிக்கொடுத்து, அக்கறையோட

இன்னொரு வீட்டுக்காரங்க நடந்துக்கிட்டாங்க. காசை விட அவுங்க காட்டின கரிசனம் எனக்குப் பிடிச்சிருக்கு. அதான் அங்கே போறதா முடிவு
பண்ணேன்!’’

அம்மா காட்டிய மூக்குக் கண்ணாடியைத் துடைத்து, கரிசனத்தோடு அவளுக்கு மாட்டினாள் வானதி.