தொடரும் புதையல் வேட்டை!





போகிற போக்கைப் பார்த்தால், எல்லையில் நிற்பதைவிட அதிக ராணுவ வீரர்களை இந்தியாவின் கோயில்களிலும், கோட்டைகளிலும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சுரங்க அறையில் பொக்கிஷம் கிடைத்ததும், பல ஊர்களில் கோயில்களைத் தோண்டினார்கள். இப்போது சாமியார் கனவில் தங்கப் புதையல் சமாசாரம்

பரபரப்பானதும், எல்லா கோட்டைகளும் டேஞ்சர் லிஸ்ட்டில்!

‘ஆயிரம் டன் தங்கப் புதையல் தன் கோட்டையில் புதைந்திருப்பதாக மன்னர் சொன்னார்’ என சோபன் சர்கார் என்ற சாமியார்
பரபரப்பு கிளப்பியதால், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தான்டியா கேரா என்ற கிராமத்தில் இருக்கும் கோட்டையில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. ராஜா ராவ் ராம் பக்ஷ் என்ற மன்னரே, சாமியாரின் கனவில் வந்தவர்.

‘சிப்பாய்க் கலகம்’ எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின்போது 1857ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அலகாபாத் கோட்டை இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கோட்டையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த பெரும் தங்கப் பொக்கிஷத்தை அவர்கள் கவர்ந்து வந்தனர். சுதந்திரப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான நானா சாகிப் வசம் இது வந்ததாகத் தகவல். போரில் தோற்று பின்வாங்கும்போது, ஒரு படகு நிறைய தங்கத்தை நானா சாகிப் எடுத்துச் சென்றதாகவும், அதை நம்பிக்கைக்குரிய நண்பரான ராம் பக்ஷ் கட்டுப்பாட்டில் கொடுத்து வைத்ததாகவும் தகவல். நானா சாகிப் மறைந்தபிறகு ராம் பக்ஷை பிரிட்டிஷ் படை கைது செய்தது. சுதந்திரப் போராளியான அவர், 1872ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது கோட்டையில் பிரிட்டிஷ் படைகள் தங்கப் புதையலைத் தேடியது பற்றி சில ஆவணங்கள் இருக்கின்றன. நானா கொடுத்த தங்கத்தை கோட்டையில் எங்கோ ராம் பக்ஷ் புதைத்து வைத்திருக்கிறார் என சாமியார் இப்போது சொல்கிறார்.



இந்த ஆயிரம் டன் மேட்டரோடு அவர் நிற்கவில்லை; ஆதம்பூரில் 2500 டன் தங்கப் புதையல் இருப்பதாகவும் அவருக்குக் கனவு வந்ததாம். இந்தச் செய்தி வெளியான அடுத்த நிமிஷமே, ஆதம்பூர் சிவன்

கோயில் அர்ச்சகர்கள் இருவரை துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு, அங்கே தோண்டிப் பார்த்திருக்கிறார்கள் சில விஷமிகள். பிபர்ஹரி சிவன் கோயிலுக்கும் இப்படி ஆபத்து வர, ‘இங்கு புதையல்

இருப்பதாக எந்த சாமியாருக்கும் கனவு வரவில்லை’ என உள்ளூர் மக்கள் போர்டு மாட்டாத குறையாக பதில் சொல்லி விஷமிகளைத் துரத்துகின்றனர்.

ஒரு கனவு, இந்தியாவின் அத்தனை பாரம்பரிய கட்டிடங்களுக்கும் வேட்டு வைத்துவிடும் போலிருக்கிறது!
 அகஸ்டஸ்