ஸ்வீட்





‘‘என்னங்க... தீபிகா வீடு வரைக்கும் போய் தீபாவளி பலகாரம் கொடுத்துட்டு வந்துடறேன்...’’ என்றாள் என் மனைவி ரம்யா. தீபிகா அவள் தோழி.
‘‘சரி...’’ என்றேன் நான்.

தீபாவளி புதுச்சேலையில், ஒரு புதுவித நாணத்தோடு அவள் நடந்து சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒயிலாக இருந்தாள். என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. அவளுடன் இன்னொரு

ஹனிமூன் போகலாம் என்று கூட ஆசை பிறந்தது. அவ்வளவு அழகு.
போனவள் அரை மணி நேரம் கழித்துத் திரும்பினாள். மறுபடியும் என்னருகில் வந்து, ‘‘என்னங்க... அனுஷா வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்...’’ என்றாள்.

‘‘என்ன... மறுபடியும் தீபாவளி பலகாரமா?’’

‘‘ஆமா...’’ என்றாள்.

‘‘என்ன ரம்யா நீ... ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் நீயேதான் தீபாவளி ஸ்வீட் கொண்டு போகணுமா? பிள்ளைங்களை அனுப்பக் கூடாதா?’’ - கேட்டேன்.

‘‘அதெல்லாம் எனக்கும் தெரியும். இப்படி போனாத்தான் நாலு பேர் பார்வையில நான் வாங்கின புது சேலை படும். ‘நல்லா இருக்கு... இதுல நீ அழகா இருக்கே’னு சொல்வாங்க. கல்யாணமாகி இத்தனை

வருஷத்துல என்னிக்காவது இப்படியெல்லாம் நீங்க பேசியிருக்கீங்களா? தோழிங்க பாராட்டுலதான் நான் சந்தோஷப்பட்டுக்க வேண்டியிருக்கு!’’ என்று சொல்லிப் போனாள் அலுப்புடன்.