தீர்ப்பு





சிவகாமி பாட்டியும், சிலரும் அந்த ஓல்ட் ஏஜ் ஹோமில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘அன்பில் சிறந்து நிற்பது தாயா? தாரமா?’ என்ற தலைப்பில் இருதரப்பு விவாதங்களும் முடிந்து, கிட்டத்தட்ட தீர்ப்புக்கு வந்திருந்தார் நடுவர்.

உணர்ச்சிகரமாக நடுவர் பேசினார்... ‘‘தாயா... தாரமா...ன்னு பட்டிமன்றம் பழைய தலைப்புதான். ஆனாலும் புதிய பேச்சாளர்கள், புதிய கருத்துகள் என இந்தப் பட்டிமன்றம் சூடு பிடித்தது. பேச்சாளர்கள்

‘தாயே...’ என பேசியபோதும் கைதட்டினீர்கள். ‘தாரமே...’ என பேசியபோதும் கரகோஷம் ஓங்கி ஒலித்தது. ரெண்டு பக்கமும் கைதட்டல் இருக்கும்போது தீர்ப்பு சொல்ல வேண்டியது பொறுப்பான செயலாகி

விடுகிறது...’’

இப்படியாக நீண்டு கொண்டே போன பேச்சில் இறுதியாக அவர், ‘‘எப்படி நோக்கினும் தாயின் அன்பிற்கு நிகர் உலகில் எவரும் இல்லை. கடவுளே கைதொழும் தெய்வம்தான் நம் தாய். ஆகவே, அவரை

நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்...’’ என்றார்.

தீர்ப்பைக் கேட்டதும் சிவகாமி பாட்டி அழ, ‘‘ஏன் பாட்டி அழறீங்க... தீர்ப்பை சரியாத்தானே சொல்லியிருக்கார்?’’ என பக்கத்தில் இருந்தவள் கேட்டாள்.
‘‘தீர்ப்பு சொன்னது வேறு யாருமில்லை. என் பையன்தாம்மா. பொண்டாட்டி பேச்சைக் கேட்டு என்னை இப்படி அநாதை இல்லத்துல விட்டிருக்கான்’’ என்றாள் சிவகாமி பாட்டி.