இரவல் : ஒரு பக்கக் கதை





‘‘ஆன்ட்டி... எங்க அம்மா ஒரு டம்ளர் சர்க்கரை வாங்கி வரச் சொன்னாங்க!’’
பக்கத்து வீட்டுச் சிறுமி வந்து கேட்டாள். கூடத்தில் இருந்த மாமியார் பார்வதி இடைமறித்துப் பேசினாள்.

‘‘தீபாவளி அன்னைக்குக்கூட சர்க்கரை இரவல் கேப்பாங்களா? என்ன குடித்தனம் நடத்தறா உங்க அம்மா! அதெல்லாம் எதுவும் இல்லை... போ!’’ என்றாள். உள்ளே இருந்து வந்த மருமகள் உமா,

சிறுமியை தன் பக்கம் அழைத்தாள். ‘‘நீ இங்கே வா, நான் தர்றேன்!’’
சிறுமி சர்க்கரை வாங்கிச் சென்றாள். உமா உள்ளே சென்றுவிட்டாள். அப்போது வந்த தினேஷ், ‘‘என்னம்மா இது! அக்கம்பக்கத்துல ஏதும் கேட்டா கொடுத்து உதவணும். அப்பதான் அவங்களும்

அவசரத்துக்கு நமக்கு உதவுவாங்க. பழக்கத்தை கெடுத்துடாதீங்க’’ என்றான்.

‘தினேஷ்! உன் பொண்டாட்டி மனசு எனக்குத் தெரியும். நான் கொடுன்னா அவ கொடுக்க மாட்டா; நான் கொடுக்காதேன்னா அவ கொடுப்பா! அதனாலதான் அப்படி சொன்னேன். இப்படி நான் சொல்லிச் சொல்லியேதான் அவளை இப்படி எல்லாருக்கும் உதவறவளா மாத்தி இருக்கேன். உனக்கு எங்கே இது புரியப் போகிறது’ என்று மனசுக்குள் நினைத்தபடி அமைதியாக இருந்தாள் அம்மா.