சாயி ஷீரடி பாபாவின் புனித சரிதம்





என்றைக்கு என் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தீர்களோ, அன்றே உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டன; கெட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
 பாபா மொழி

‘‘காசி... காசி...’’ என்று அடித் தொண்டையில் உறுமியபடி அந்த மாலை வேளையில் எழுந்தார் பாபா. ஒரு புயல் சுழன்றடித்தது போல எழுந்து அமர்ந்தார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்தது.

அவரது நெடிய உடல் படபடத்தது. கை, கால்களை உதறியபடி, தனக்குள்ளே பேசிக்கொண்டு, நிலைகொள்ளாமல் மசூதிக்குள் அங்குமிங்கும் அலைந்தார்.
‘‘அடேய், விடப்பா அந்தச் சர்க்கரைச் சுருக்குப் பையை! மூர்க்கா, பணத்தைப் பிடுங்கினாலும் கவலையில்லை உனக்கு... ஆனால் ஒரு பிடி சர்க்கரைக்காக உயிரையே விடுகிறாயே, முதலில் அதை

விட்டொழி...’’
‘‘பயப்படாதே, எடு கத்தியை... சண்டையிடு... நானிருக்கிறேன்!’’
‘‘கவலைப்படாதே! உன்னை சாக விடமாட்டேன். வாவ்... வாவ்... சபாஷ்... அப்படி அடி...’’
‘‘அடேய்... கை... கை... கையைச் சமாளி... அல்லா... அவனைக் காப்பாற்று...’’
‘‘அடேய் திருடன்களா... நிறுத்துங்கள்!’’
பாபாவின் கதறல் எங்கும் கேட்டது. அவருடைய தொண்டை கிழிந்தது. அவர் அருகில் இருந்தவர்கள், பாபாவின் கோர தாண்டவத்தைப் பார்த்து பயந்து போனார்கள். காசிராம் ஏதோ சங்கடத்தில்

மாட்டியிருக்கிறான் என்பது புரிந்தது. உயிருக்காகப் போராடும் அவனை, பாபா இங்கிருந்தபடியே காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து பாபா அமைதியானார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். இப்பொழுது அவர் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது!
அங்கே...
‘‘என்னிடம் கொள்ளையடிக்கவா வந்தீர்கள், பாவிகளா?’’  இப்படிப் பெரிதாகக் கத்திக்கொண்டே காசிராம் திருடர்கள் மேல் பாய்ந்தான். தன் பலத்தையெல்லாம் திரட்டி, ஒரு திருடனை கத்தியால்

குத்தினான். அவன் அலறியபடியே செத்தான். இன்னொரு திருடனையும் கத்தியால் பதம் பார்த்தான். தங்களின் இரண்டு கூட்டாளிகளும் சரிந்து விழுந்ததைக் கண்ட மற்ற திருடர்கள், ‘இவனை உயிரோடு

விட்டால் மற்றவர்களையும் தீர்த்து விடுவான்’ என்று பயந்து காசிராமை பின்பக்கமிருந்து தாக்க வந்தார்கள். காசிராம் மூன்றாவது திருடனைக் கத்தியால் தாக்கினான். அவனைக் கொல்ல முயல்வதற்குள்,

பின்னாலிருந்து கத்தியினால் காசிராமின் மண்டையில் ஓங்கி அடித்தார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத காசிராம், ரத்தம் கசியக் கீழே விழுந்தான். கண்கள் இருண்டன. அடுத்த வினாடி மூர்ச்சையாகி

விட்டான். காசிராம் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு, ஆள் செத்தான் என்று சந்தோஷப்பட்டார்கள் அவர்கள். அதற்குள் ஆட்கள் ஓடி வர, கொள்ளையடித்தவற்றை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தார்கள் திருடர்கள்.



வந்த மக்கள், காசிராமின் நிலையைக் கண்டு திடுக்கிட்டார்கள். அவன் சாகவில்லை என்பதைப் புரிந்துகொண்டு முகத்தில் நீர் தெளித்தார்கள். சற்றே நிலைக்கு வந்தான் காசிராம். நாக்கு வறண்டதால், ‘‘தண்ணீர் வேண்டும்’’ என்றான். யாரோ ஓடிப் போய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து பருகக் கொடுத்தார்கள். தண்ணீர் குடித்ததும் தெளிவடைந்து, எழுந்து உட்கார்ந்தான் காசி. தலையில் ரத்தம்

வடிவது நின்றிருந்தது.
‘‘உனக்கு தலையில் நல்ல காயம். பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறோம், வா...’’ என்றார்கள் சிலர்.
‘‘வேண்டாம்... என்னை ஷீரடிக்கு அழைத்துச் செல்லுங்கள்!’’
‘‘இந்நிலையில் உன்னை அனுப்ப முடியாது. இரண்டு நாள் மருந்து சாப்பிட்டு, எங்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு செல்...’’
‘‘வேண்டாம். என் காயத்திற்கு மருந்து பாபாதான். தயவுசெய்து அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’’ என்று காசிராம் மன்றாடினான்.
‘‘சரிப்பா, கவலைப்படாதே! இன்றிரவு தங்கு. நாளை நானே உன்னை பாபாவிடம் கொண்டுபோய் விடுகிறேன்’’ என்று பெரியவர் ஒருவர் சொன்னார்.
காலையில் ஒரு மாட்டு வண்டியில் அவனைத் தூங்க வைத்து ஷீரடிக்கு அழைத்துச் சென்றார் அந்த நல்லவர்.
காசிராமின் வரவை எதிர்பார்த்திருந்தார் பாபா. மசூதிக்கு வெளியே மாட்டு வண்டி வந்து நின்றதும், அருகில் போய் காசிராமை கைத்தாங்கலாக அவரே நடத்தி வந்து உட்கார வைத்தார். இரவு முழுதும் ஓய்வு எடுத்ததால் காசிராம் தன் நிலைக்குத் திரும்பியிருந்தான். காயத்துக்கு மருந்து போட்டிருந்ததால், வேதனை குறைந்திருந்தது.
‘‘காசீ, இப்பொழுது எப்படிப்பா இருக்கு?’’
‘‘உங்களுடைய ஆசீர்வாதத்தால் நான் பிழைத்தேன் பாபா!’’
‘‘நீ பெரிய சூரப்புலி. இரண்டு கொள்ளையர்களை யமலோகத்திற்கு அனுப்பிவிட்டாயே. மகல்சாபதி, இதை எதற்காகச் செய்தான் என்று சொல்...’’
‘‘திருடர்கள் இவனுடைய துணி மூட்டை, பணத்தைக் கொள்ளை அடித்ததால்’’ என்றார் மாதவராவ் தேஷ்பாண்டே.
‘‘இல்லை... இவனிடம் அந்தச் சர்க்கரைச் சுருக்குப்பை இருந்தது. அதற்காக!’’  சிரித்தவாறே பாபா சொன்னார். ‘‘காசீ! முன்பே சொல்லியிருந்தேன். எறும்பிற்கு சர்க்கரை போடுவது நல்லதுதான், அதற்காக சர்க்கரைப் பைத்தியம் பிடித்து அலைவது நல்லதல்ல என்று! திருடர்கள் உன்னுடைய பணம், துணிமணிகளைக் கொள்ளையடித்தபோது நீ கவலைப்படவில்லை. ஆனால், சர்க்கரைப்பை... அது போனால் என்ன, வேறு வாங்கிக்கொள்ளலாம் அல்லவா. இது ஏன் உனக்குப் புரியவில்லை? எப்பொழுதுதான் உனக்கு புத்தி வருமோ? அடேய், விரதத்தைக் கண்ணை மூடிக்கொண்டு குருடனைப் போல கடைப்பிடித்தால் பலன் ஒன்றுமில்லை. அது, பார்வை இழந்தவன் கையில் கொடுத்த விளக்குப் போன்றது! எரிகிறதா, அணைந்ததா என அவனுக்குத் தெரியாது. அணைந்திருந்தாலும், அது எரிகிறது என்று நினைத்து பத்திரமாக வைத்துக்கொள்வான். மாறாக அணைந்திருக்கிறதா என்பது தெரியாமல் எரியும் விளக்கைத் துணி அருகில் வைத்தால், வீடே பற்றி எரியலாம்! எனவே இந்த விளக்கினால் அவனுக்கு என்ன உபயோகம்? ஒன்றை ஞாபகத்தில் வை. விரதங்களை உணர்வுடன் செய்யணும். மிகுந்த எச்சரிக்கை தேவை’’  சற்று பேச்சை நிறுத்திவிட்டு, ‘‘காசீ, அந்த திருடர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது’’ என்றார் பாபா புன்சிரிப்புடன்.



‘‘ஏன்?’’
‘‘இவ்வளவு சின்ன சர்க்கரைப் பைக்காக இரண்டு கொள்ளையர்களை சாகடித்திருக்கிறாய்! அவர்களும் இந்த சர்க்கரைப் பையை ஏதோ வைரம், வைடூரியம் என்று ஆவலாகப் பிரித்துப் பார்த்து, ‘ப்பூ...

வெறும் சர்க்கரைதானா’ என்று வெறுத்துப் போனார்கள். சர்க்கரை அவர்களுக்குக் கசந்தது’’ என்று சொல்லி பாபா பெரிதாகச் சிரித்தார். எல்லோரும் அந்த நகைச்சுவையில் கலந்துகொண்டார்கள்.

காசிராமுக்கும் சற்று நிம்மதி ஏற்பட்டது. அவன் மன பாரம் குறைந்தது.
‘‘பாபா’’  காசிராம், தனக்குத் துணையாக வந்தவரைக் காட்டி, ‘‘இவர் ஆனந்தராவ். இவர்தான் எனக்கு உதவி புரிந்தார். இவ்வளவு தூரம் துணையாக வந்தவர்’’ என்றான்.
ஆனந்தராவ் முன்னால் சென்று, பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அவரை ஆசீர்வதித்துக்கொண்டே பாபா சொன்னார்... ‘‘இப்படித்தான் உதவி செய்யணும் ஆனந்தராவ். நீ என் வேலையைச்

செய்தாய். நான் உனக்கு உதவுகிறேன். கவலைப்படாதே. இதே தொண்டை கடைசிவரை தொடர்ந்து செய். அல்லா உடம்பைக் கொடுத்தது பிறருக்கு உதவத்தான். சாப்பிடும் வரைதான் இந்தக் கை நமக்கு.

சாப்பிட்டு முடிந்தவுடன், இந்தக் கை பிறருக்கு சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும். உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாவதாக!’’
அவர் பாபாவை வணங்கி விடைபெற்றார்.
சில நாட்களில் காசிராம் பூரண குணமடைந்தான். இரண்டு கொள்ளைக்காரர்களை தைரியத்துடன் சண்டையிட்டு அவன் கொன்ற விஷயம் மும்பை அரசாங்கத்தால் பெரிதும் பாராட்டப்பட்டது. அரசின் உயர்

அதிகாரி ஒருவர் இதில் சந்தோஷமடைந்து, காசிராமை கௌரவித்து, பரிசாக ஒரு கத்தியைக் கொடுத்தார்.
ஷீரடியில் இருந்தவர்கள் இதைக் கேட்டு மனம் குளிர்ந்தார்கள். காசிராம் தனக்குப் பரிசாகக் கிடைத்த கத்தியை பாபாவிடம் காட்டினான். பாபா ஒரு கணம் பேசாமல் இருந்தார். பிறகு கத்தியை எடுத்து,

இரண்டு சுழற்று சுழற்றினார். பிறகு காசிராமிடம் கொடுத்தார். எதிர்காலத்தை நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்.
‘‘என்னவாயிற்று பாபா?’’
‘‘ஒன்றுமில்லை காசி. இப்பொழுது உனக்கு இந்தக் கத்தியின் அவசியம் இல்லை. நீ பயப்படாமல் இரு!’’
சிறிது நேரம் கழித்து, சிரித்துக்கொண்டே பாபா சொன்னார்... ‘‘துணி வியாபாரத்தைத் தொடர்ந்து செய். இல்லையெனில் அரசாங்கம் இனாமாகக் கொடுத்ததால், நீ கத்தியை எடுத்துக்கொண்டு ஊர்

சுற்றுவாய்!’’
பாபாவின் இந்த கிண்டல் பேச்சைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். காசிராமும் பயத்தை விட்டொழித்தான்.
நாநா சாகேப் சாந்தோர்கர் என்பவர் உதவி கலெக்டராக இருந்தார். பரம சாயி பக்தர். வாரா வாரம் ஷீரடிக்கு வருவார். ஒரு ஆங்கிலேய அதிகாரி அவருக்கு நண்பர். பெயர் ராபர்ட். இருவரும் பேசிக்

கொண்டிருந்தபோது, நாநா சகஜமான முறையில் சாயிபாபாவைப் பற்றிச் சொன்னார்.
‘‘ஹூ இஸ் சாய்பாபா?’’ என்று அவர் கேட்டார்.
‘‘சாயிபாபா ஒரு பெரிய யோகி. பெரிய தத்துவஞானியும் கூட!’’ என்று ஆங்கிலத்தில் சொன்னார் நாநா.
‘‘எனக்கு இந்தியத் துறவிகளைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்’’  மிகுந்த உற்சாகத்துடன் சொன்ன அவர், ‘‘நான் இந்த சாதுவைப் பார்க்கணும். அவர் எங்கே இருக்கிறார்?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
‘‘ஷீரடியில்!’’
‘‘ஷீரடி எங்கே இருக்கிறது? நான் அங்கு போய் அவரைப் பார்க்க முடியுமா? அதற்கான ஏற்பாட்டை நீங்கள் செய்வீர்களா?’’
‘‘நிச்சயமாக செய்கிறேன்!’’
‘‘எப்படிச் செய்வீர்கள்?’’
‘‘அங்கு என் நண்பரும் பாபாவின் பரமபக்தனுமான மாதவராவ் தேஷ்பாண்டே இருக்கிறார். அவரை ஷாமா என்பார்கள்...’’
‘‘சரி!’’
‘‘அவருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்!’’
‘‘அப்புறம் சாய்பாபாவைப் பார்க்கவும் அவரே உதவுவாரா?’’
‘‘நிச்சயமாக!’’
‘‘அப்படியென்றால் இப்போதே கடிதம் எழுதுங்கள்!’’
‘‘சரி’’ என்ற நாநா, அவருக்கு மேலும் பல விவரங்களைச் சொன்னார்.
ஆங்கிலேய அதிகாரியின் பச்சை நிறக் கண்கள் பளபளத்தன. அவரின் பார்வை, நாநாவிற்குப் பிடிக்கவில்லை. அவர் பாபாவைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தாரே தவிர, அதில் ஒரு சிரத்தையோ

பக்தியோ காணப்படவில்லை. ‘இந்தியர்களான நாம் எப்படி பய பக்தியுடன் தரிசனம் செய்கிறோமோ, அதே மாதிரி வெள்ளையர்களிடம் எதிர்பார்க்க முடியாது’ என அவர் மனதுக்குள் சமாதானம்

செய்துகொண்டார்.
மாதவராவிற்கு அவர் கடிதம் எழுதிப் போட்டார். அதன்பின் ராபர்ட், மும்பையிலிருந்து ஷீரடிக்கு சரியான நேரத்திற்குப் போய்ச் சேர்ந்தார். மாதவராவ் தேஷ்பாண்டே அவருடைய வருகையை

எதிர்பார்த்திருந்தார். ராபர்ட்டிற்கு கொஞ்சம் கொஞ்சம் மராட்டி தெரியும்; மாதவராவ்ஜிக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்.
‘‘வாருங்கள்... ஷீரடி உங்களை வரவேற்கிறது!’’  அவர் கையைக் குலுக்கி ஆங்கிலத்தில் வரவேற்றார் மாதவராவ்.
‘‘நாநா எழுதிய கடிதம் கிடைத்ததா?’’
‘‘கிடைத்தது...’’
‘‘இங்கே நான் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்களா?’’
‘‘என்னுடைய வீடு இருக்கிறது. அதை சுத்தம் செய்து தருகிறோம். நீங்கள் அங்கேயே தங்கலாம்!’’
‘‘வேண்டாம், வேண்டாம். நான் தங்குவதற்கு ஒரு டென்ட் ஏற்பாடு செய்யுங்களேன்!’’
‘‘சரி, முயற்சிக்கிறேன். அதுவரைக்கும் என் வீட்டிற்கு வாருங்கள். கொடுங்கள் ஒரு பெட்டியை என்னிடம்...’’
இருவரும் மாதவராவின் வீட்டிற்கு வந்தார்கள். ஆங்கிலேய விருந்தாளிக்கு வெல்லம் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டது. அவர் சந்தோஷமடைந்தார். வேர்க்கடலையை பிரியமுடன் வாங்கிச் சாப்பிட்டார்.

அவர் தங்குவதற்கான டென்ட் மாலையில் கிடைத்தது. தன்னுடைய சாமான்களை டென்ட்டின் உள்ளே வைத்து விட்டு, அங்கிருந்த கட்டிலில் படுக்கையை விரித்தார். பிரயாணக் களைப்பினால் அன்றிரவு

சாயியின் தரிசனத்திற்குச் செல்லவில்லை.
‘‘இன்று பாபாவின் தரிசனத்திற்கு வருகிறீர்களா?’’  மாதவராவ் ராபர்ட்டை வினவினார்.
‘‘எனக்கு இன்று ஓய்வு வேண்டும். நாளை பார்க்கலாமா?’’
‘‘சரி, குட் நைட்!’’
‘‘குட் நைட்’’
(தொடரும்...)

‘‘விரதத்தைக் கண்ணை மூடிக்கொண்டு குருடனைப் போல கடைப்பிடித்தால் பலன் ஒன்றுமில்லை. அது, பார்வை இழந்தவன் கையில் கொடுத்த விளக்கு போன்றது!’’

‘‘சாப்பிடும் வரைதான் இந்தக் கை நமக்கு. சாப்பிட்டு முடிந்தவுடன், இந்தக் கை பிறருக்கு சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’’