இமான் அண்ணாச்சி





கிராமங்கள்ல பொங்கல்தான் விசேஷம்; தீவாளியத் தெரியாதுன்னு சொல்லுவாங்கண்ணே. ஆனா, ஒரு பண்டிகையில சின்ன பிள்ளைகள இழுக்குற விஷயம் இருந்துச்சின்னு வைங்க... அது கேஷ்மீரு பக்கம் ஒரு குக்கிராமத்துல கொண்டாடுற பண்டிகையா இருந்தாலும் இந்தியா பூரா பரவிரும். தீவாளி அப்படித்தான்ணே... எதுக்கு, என்ன, ஏதுன்னு வெவரம் தெரியலன்னாலும், வெடியப் போடுறது மட்டும்

நண்டு சிண்டு வயசுலயே நமக்கு நல்லா தெரியும்.

நம்ம ஊருப்பக்கம் ஓலவெடி, நியூஸ் பேப்பரு சுத்தி வர்ற நாட்டு வெடி, பனைமரத்துல கட்டி விடுற ரயில் பட்டாசு இதெல்லாம்தான் ஃபேமஸு. காசு கொடுத்து வாங்கி வெடியப் போடுற அளவுக்கெல்லாம்

நமக்கு வசதி இல்லண்ணே. பாக்குறதோட சரி! நம்ம சேத்திக்காரனுங்க எவனாச்சும் வாங்குவானுங்க... நாம வெடிக்கலாம்னு பாத்தா, அந்த குரூப்பு நம்மளை விட கேவலம். ‘‘இந்த தீவாளிக்கு

எப்பிடியாச்சும் சுடச்சுட இட்டிலி சாப்பிட்டுறணும்லே’’ன்னு கூச்சப்படாம ப்ளான் போடுற கூட்டம் அது. நம்ம செட்டு, நம்மள மாதிரிதானே இருக்கும்? சேட்டு விட்டுப் பிள்ளையா நம்மட்ட சேரப் போவுது?
நம்ம ஊருப்பக்கம் தீவாளி கொண்டாட எந்த ஜாதி, எந்த மதம்ங்கிறதெல்லாம் முக்கியமில்லண்ணே, காசு இருக்கணும்... அவ்வளவுதான்! எங்கூருல இப்பவும் எவனாச்சும் பணத்தை ஏமாத்துறான்னு

வச்சிக்கிடுங்க... ‘ஏன்யா, என் துட்டுல தீவாளி கொண்டாடப் பாக்கீயா?’ன்னு கேப்பாங்க. காரணம், காசுன்னாலே தீவாளிதான். அன்னிக்கி வெடியப் போட்டாலே, அவங்க வசதியான குடும்பம்னு அர்த்தம்.

‘அப்ப நீ எப்படிலே வெடி போட்டே?’ன்னு கேக்கீயளா? பொதுவா வசதியான வீட்டுப் பிள்ளைங்க வெடியப் போடப் பயப்படும்ணே. அந்த பயம்தான் நம்ம பலம்.

‘‘ஏ... பிள்ள... புதுத்துணியில நெருப்பு படுது பாரு...’’

‘‘தம்பி... வத்திய இப்படி புடி!’’

 இப்படித்தான்ணே உள்ளே நுழைவோம். கொஞ்ச நேரத்துல பாத்தீயள்னா, வெடி வாங்கிட்டு வந்த பிள்ளைக எங்களுக்கு எடுபுடி வேல பாக்கும்.
‘‘எல... இங்க பாரு... திரிய இப்படி பிக்கணும்... உள்ள இருக்க நூலு தெரியணும்’’னு தலையில குட்டுற லெவலுக்குப் போயிருவோம். இப்படி ஒரு அடிமை சிக்கிட்டா, நம்ம தீவாளி ஓடி

அடைஞ்சிரும்ணே. ஆனா, பல சமயங்கள்ல சிக்காது. அப்ப என்ன செய்ய? அதுக்கும் வச்சிருந்தோம் பிளானு!
‘‘அட, வெடியப் போடுறவன் அதச் சரியா பாக்க முடியாது மக்கா. தூர நின்னு பாக்கையில தான் முழு அழகும் தெரியும். அதனாலதான் நம்ம ஊரு திருவிழாவுல, வேட்டுப் போடுறவனைக் கூப்பிட்டு

போடச் சொல்லுறோம். நாம பாத்து மட்டும் ரசிக்கோம். அட, ஆளு வச்சி செய்யிற வேலல்லே அது!’’ன்னு சும்மா கௌப்பி விடுவோம்.

‘‘அட, ஆமால்ல’’ன்னு எவனுக்காச்சும் தோணும்.

‘‘தம்பி, நம்ம வீட்டு முன்னால இந்த வேட்டப் போடுங்க’’னு அத்திபூத்தாப்ல ஆஃபர் வரும். அப்புறம் என்ன? அந்த வருச தீவாளி அமோகம்தான்!
வெடி போடும்போது நமக்கு என்ன மாதிரி சந்தோசம் கெடைக்குதுன்னு யோசிச்சேன்ணே! இந்த மனுசப் பய இருக்கானே... அவன் தன்னோட அறிவை வச்சி இந்த உலகத்தையே ஆட்டி வைக்கிறான். ஆடு, மாடுன்னு மத்த ஜீவனுக எல்லாம் தலைமுறை தலைமுறையா அதே புண்ணாக்கைத்தான் திங்குது. அப்படியே இருக்கு.



ஆனா, மனுசனோட அறிவு மட்டும் வளந்துக்கிட்டே போவுதுண்ணே. அதுக்கு என்ன காரணம் தெரியுமா? பயம்தான்ணே!
மனுசனுக்கு பயம் ரொம்ப அதிகம். குட்டையில் விழுந்து புரளுற எருமை மாடு, ‘அட்டை கடிக்குமோ... பாம்பு கொத்துமோ...’ன்னு பயப்படுறதில்ல... ஆனா, மனுசன் பயப்படுறான். அதனாலதான் கல்லு,

கில்லு, நடிகை விக்கிற முறுக்கு கம்பியெல்லாம் வச்சி நல்ல ஸ்ட்ராங்கா வீடு கட்டுறான். நோயிக்கு பயந்து அடுப்பு கண்டுபிடிச்சான், இருட்டுக்கு பயந்து லைட்டு கண்டுபிடிச்சான்... அதுதான் இப்ப

சாட்டிலைட்டு வரைக்கும் வந்து நிக்குது. இப்பவும் திடீர்னு புயல் வந்துருமோ, பூகம்பம் வந்துருமோன்னு பயம்... அதான் கண்ணுல வௌக்கெண்ணெய் விட்டு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கான்.

ஆதிகால மனுசன் அளவுக்கு, ‘புலி வந்துரும்... பூச்சி வந்துரும்...’னு இப்ப நமக்கு பயம் இல்லண்ணே. வீட்டைப் பூட்டிக்கிட்டு நிம்மதியாத்தான் படுக்குறோம். அதனாலதான், நம்ம மனசுக்கு அப்பப்ப பயம்

கொஞ்சம் தேவைப்படுது. மலை உச்சிக்குப் போயி கீழ பாக்குறதும், ராட்டினத்துல ஏறி தலை கிறு
கிறுக்க இறங்குறதும் இதுக்காகத்தான். சும்மானாச்சும் கொஞ்ச நேரத்துக்கு ஒரு பயம்... நம்மளை ஒண்ணும் செய்யாதுன்னு தெரிஞ்சு வர்ற சேஃப்டியான பயம். அதுக்கு அலையுதுண்ணே மனசு.



அந்த பயம்தான் வெடி போடயிலயும் வருது. இது எப்ப வெடிக்கும்னு தெரியாது... ஆனா, நிச்சயமா வெடிக்கப் போவுது... அதுக்காக காதைப் பொத்திக்கிட்டு காத்துக் கெடக்குறதுல ஒரு த்ரில்லுண்ணே.

நெருப்பு வச்சாச்சி... வெடிக்கப் போவுது... காதைப் பொளக்குற சத்தம் வரப் போவுது... இந்தா திரி எரிஞ்சிருச்சு... புஸ்ஸு புஸ்ஸுன்னு புகை விடுது... சர்ர்ருனு நெருப்பு பீச்சி அடிக்குது... காதப்

பொத்திக்கிடுங்க... டமார்! மனசை இப்படி பயமுறுத்தி பயமுறுத்தி சந்தோசப்பட்டுக்கிடறதுல ஒரு தனி சொகம்ணே!
இந்த பயம் நமக்கெல்லாம் ஒரு பிராக்டீஸ்தான். நிஜமாவே பயம் வரும்போது அதைத் தாங்கிக்கிடணும்ல! இந்தக் கால மனுசன் எதப் பாத்து பயப்படப் போறான்? இடி, மின்னலைப் பாத்து நாம பயந்த

காலமெல்லாம் போச்சுண்ணே... இப்ப பயமே இன்னொரு மனுசனைப் பாத்துத்தான். இவன் எப்ப காலை வாருவான்... எப்ப முதுகுல குத்துவான்... எப்ப ஏறி மிதிப்பான்... ஒண்ணும் தெரியாது. ஆனா,

கண்டிப்பா இதையெல்லாம் செய்வான். பத்த வச்ச பட்டாசு மாதிரிதான் எல்லா மனுசனும். ரொம்ப நெருங்கிரக் கூடாது... அவன் வெடிக்கிற வரைக்கும் பதக்கு பதக்குனு காத்திருக்கணும்... வெடிச்ச பெறகு

வருத்தமெல்லாம் தேவையில்ல... லேசா சிரிச்சிட்டுப் போயிறணும். அதான் நம்மகிட்ட பாக்கெட் நிறைய வெடி இருக்கே... ஒவ்வொண்ணா வச்சி ஆயிசு முழுக்க வெடிக்க வேண்டியது தான்.

இந்த வருசமாச்சும், தீவாளி சொல்லித்தார பாடத்த கவனமா கேட்டுக்கிடுங்க... அடுத்த வாரம் இதுல நான் வீட்டுப்பாடம் தருவேன்!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்