பொலிட்டிகல் பீட்





நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி அலட்சியம் செய்தாலும், அதன் கூட்டணியில் இருப்பவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். குறிப்பாக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. ‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு என்னைக் கேட்டிருந்தால்கூட ‘நரேந்திர மோடியால் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது’ என்று சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது அப்படி நான் சொன்னால், அது

முட்டாள்தனம். பா.ஜ.க தொண்டர்களிடம் மோடி எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். எழுச்சி பெற்ற தொண்டர்கள் ஒரு தேர்தலை தங்கள் வசப்படுத்த எப்படி உழைப்பார்கள் என்பது எல்லா

அரசியல்வாதிகளுக்கும் தெரியும்’’ என்கிறார் அவர். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஒரு பக்கம் ரவுண்டு கட்டுகிறது; எதிர்க்கட்சியான சிவசேனா இன்னொரு பக்கம் வறுத்து எடுக்கிறது.



‘‘முட்டைகள் மீது கோழி உட்கார்ந்து அடை காப்பது போல, முக்கியமான ஃபைல்கள் மீது முதல்வர் எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஃபைல்கள் குட்டி போடாது என்பது அவருக்குத் தெரியுமா?’’ என்று கேட்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகளில் சரத் பவார் கட்சியும் ஒன்று. பி.ஜே.பியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் தொழில் நிறுவனம், எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்காரியை புகழ்ந்த சரத் பவார், ‘‘அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை’’ என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இந்துத்வ கட்சிகளோடு கைகோர்த்த அனுபவம் பவாருக்கு உண்டு என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பலத்த யோசனைகள்!

உத்தரப் பிரதேசத்தில் தன் கட்சி ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் பதவி கனவில் இருந்தார் முலாயம் சிங் யாதவ். அடுத்தடுத்து சர்ச்சைகளில் அவரது மகன் அகிலேஷ் யாதவின் அரசு சிக்கியதால், இப்போது கனவு கலைந்து படபடக்கிறார். ‘‘எச்சரிக்கிறேன்! அகிலேஷும் அவரது அமைச்சர்களும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்துக்கு நான் மட்டும்தான் தனியாகப் போக வேண்டி யிருக்கும்’’ என கட்சி நிகழ்ச்சி ஒன்றில் முலாயம் பேசியது, எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

டெல்லி தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. ‘பதவிக்கு வந்தால் சிவப்பு விளக்கு சைரன் கார் கேட்க மாட்டேன்; பாதுகாப்புக்கு போலீஸ் படை கேட்க மாட்டேன்; பெரிய பங்களா வேண்டாம்; மக்களைக் கேட்டே எதையும் செய்வேன்’ என்பவை உள்ளிட்ட ஏழு உறுதிமொழிகளை வேட்பாளர்களிடம் வாங்குகிறார் கெஜ்ரிவால்.