பத்மா வுக்கு பிடிக்கலையாம்! : சிறுகதை





‘‘ஏங்க, தீபாவளி வருதே... நாளைக்கு எனக்கு புடவை எடுக்க கடைக்குப் போறோம். நாளைக்குத்தான் சண்டே ஆச்சே...’’  என் சகதர்மிணி விமலா சொன்னதும் என் வயிற்றில் பூச்சி பறந்தது. அவளுடன் துணியெடுக்கப் போனால் ‘போதும்டா சாமி இந்த ஜென்மம்’ என்று ஆகிவிடும். பயத்துடனும், நடுக்கத்துடனும் தலையை ஆட்டி வைத்தேன்.

மறுநாள் காலையே கிளம்பினோம். போகும்போதே சொன்னாள்... ‘‘பாருங்க... எதிர் வீட்டு சுதா பத்தாயிரம் ரூபாய்ல புடவை எடுத்திருக்காளாம்! ஜம்பமா எல்லார்கிட்டயும் காட்டி அலட்டிக்கறா. நல்ல கலர், நல்ல டிசைன், லேட்டஸ்ட் மாடல்னு நல்லாத்தான் இருக்கு. என்ன? நம்மால அது மாதிரி இருக்க முடியாதா என்ன..?’’
நான் தலையைக் கையில் வைத்துக்கொண்டேன். ‘தேவுடா... இது வேறயா..?’
நகரின் முன்னணி கடை முன் வண்டியை நிறுத்தி உள்ளே போனோம். போனதும் வாய் நிறைய ‘‘வாங்க... வாங்க...’’ என்று வரவேற்றார் கடையின் உரிமையாளர். எனக்கு அவரின் அறியாமையை

நினைத்து சிரிப்பு சிரிப்பாக வந்தது. ‘அடப்பாவி மனுஷா... உனக்கு இன்னைக்கு உண்மையிலேயே நேரம் சரியில்லைய்யா... யார் முகத்துல முழிச்சயோ...’ என்று மைண்ட் வாய்ஸ் ஓடியது.



உள்ளே போனோம். எங்களிடம் மாட்டப் போகிற பலியாடு சேல்ஸ்மேன் யாரோ..? அவனுக்காக பரிதாபப்பட்டபடியே பார்த்தேன். என் மனைவி ஒரு இடத்தை செலக்ட் செய்து, அதை நோக்கிப் போனாள்.
‘‘வாங்கம்மா... வாங்க! என்ன, புடவையா?’’
‘‘ஆமா...’’
‘‘எந்த ரேஞ்சுல வேணும்...’’
‘‘எடுங்க... ஒரு பத்தாயிரம். பதினைஞ்சாயிரத்துல...’’  அவளே பட்ஜெட்டை ஏற்ற, எனக்கு பகீரென்றது. ‘பத்தாயிரத்துக்கும் பதினஞ்சாயிரத்துக்கும் இடையில அஞ்சாயிரம் இருக்கே... எனக்கெல்லாம் பத்து

வருஷ தீபாவளிக்கும் சேர்த்தே அவ்வளவு பட்ஜெட்ல துணி எடுக்கலையே’  மைண்ட் வாய்ஸ் மீண்டும் குறுக்கிட, பர்ஸைத் தொட்டுப் பார்த்து, ‘ஆல் இஸ் வெல்’ சொல்லிக்கொண்டேன்.
‘‘எடுத்துடலாம்மா...’’ என்றவர், அவரசமாக ரேக்கின் மேல் இருந்து எல்லா புடவைகளையும் இழுத்துப் போட்டார்.
‘‘பாருங்கம்மா... இது எல்லாம் நீங்க கேட்ட ரேஞ்ச்தான்...’’
எதிர்க்கட்சி எம்.எல்.ஏவை புறந்தள்ளும் சபாநாயகர் மாதிரி, அதையெல்லாம் தொட்டுக்கூட பார்க்காமல் அப்படியே ரிஜெக்ட் செய்தாள் விமலா.
‘‘இதெல்லாம் வேணாம்... அதோ அதைக் காட்டுங்க...’’
சேல்ஸ்மேன் அதைக் காட்டினார்.
‘‘ப்பூ... நல்லாதான் இருக்கு... ஆனா கலர் சரியா இல்லை!’’
‘‘சரிம்மா... இதைப் பாருங்க...’’
‘‘பார்டர் சின்னதா இருக்கே...’’
‘‘பார்டர் பெரிசா வேணுமா? காட்டறேன்’’  அவரும் சளைக்கவில்லை.
‘‘பெரிசாதான் தெரியுது! ஆனா இது அடிக்கற கலர்ல இருக்குங்க... பிடிக்கலை...’’
‘‘ம்...நல்லாதான் இருக்கு... ஆனா டிசைன் பழசு...’’
அவர் எடுத்துப் போட்ட ஒவ்வொரு புடவையையும் அவள் ஏதோ காரணம் சொல்லி நிராகரிக்க, விமலாவின் உண்மையான சுயரூபம் அப்போதுதான் அந்த சேல்ஸ்மேனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

‘ஆஹா... மாட்டிக்கிட்டோமே...’ எனும் உணர்வை அவர் முகத்தில் பார்த்தேன்.
கடைசியில், எடுத்துப் போட்ட புடவைகள் அம்பாரியாய் அவரையே மறைக்கும் அளவு சேர்ந்து விட்டது. எட்டி எட்டிப் பார்த்தால்தான் அவர் முகமே தெரியும் போலிருந்தது.
‘‘பாருங்கம்மா... நீங்க கேட்ட ரேஞ்சுல இதான் கடைசி புடவை... இதைப் பாருங்க...’’ என்றபடி சுரத்தே இல்லாமல் எடுத்துப் போட, இதாவது செலக்ட் ஆகுமா என்று நான் மிக ஆர்வமாய் அவள்

முகத்தைப் பார்க்க...
‘‘எல்லாம் நல்லா இருக்கு... ப்ச், ஆனா என்னவோ எனக்குப் பிடிக்கலைங்க!’’  எனக்கே கொலை வெறி வந்தது என்றால், சேல்ஸ்மேனுக்கு எப்படி இருந்திருக்க வேண்டும்.
‘‘அம்மா... இதுக்கு மேல இல்லை...’’  கையெடுத்து கும்பிட்டு அழாத குறையாக அவர் சொல்ல, நகர்ந்தாள் விமலா. ‘அப்பாடா... தப்பிச்சேன்டா சாமி...’ என்ற நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஒருங்கே

அவர் முகத்தில் கண்டேன்.
வெளியே வந்ததும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ‘‘ஏம்மா இப்படி பண்றே? அவர் எவ்வளவு புடவையை எடுத்துப் போட்டார்... ஒண்ணு கூடவா நல்லா இல்லை..? ஏதாவது ஒண்ணை

எடுத்திருக்கலாமே... பாவம்!’’ என்றேன்.
‘‘சும்மா இருங்க... உங்களுக்குத் தெரியாது... சுதாவோட புடவை புது கலர்ல, புது டிசைன்ல, புது மாடல்ல எப்படி நச்சுன்னு இருந்தது தெரியுமா? அதை வச்சுக்கிட்டு அவ எப்படி அலட்டறா! நானும் அதே

மாதிரி எடுக்கணும். அதான் தேடறேன்...’’ என்றதும், வழக்கம் போல வாயை மூடிக்கொண்டேன்.
அடுத்த கடை ஏறினோம். அதே மாதிரி அப்பாவி வரவேற்பு.
‘‘அதோ... அதை எடுங்க!’’
எடுத்துப் போட்டதும், ‘‘ம்ஹும்... சுதாவோட புடவை கலர் இன்னும் நல்லா இருக்கும்... இது லைட்டா இருக்கு... அதோ அது...’’
எடுத்துப் போட்டதும், ‘‘அடடா... இந்த டிசைனே சகிக்கலை... வேற பார்க்கலாமா?’’
‘‘சே... என்னங்க இது... பழைய டிசைன்ல பார்டர்...’’
‘‘இல்லைங்க... இந்தப் புடவையே எனக்கு பிடிக்கலை...’’
 இப்படியே ஒவ்வொரு புடவையையும் விமலா ரிஜெக்ட் செய்ய, அவர் விவரமானவர் போல,
‘‘பாருங்கம்மா... எனக்கு நிறைய வேலை இருக்கு. சீஸன் டைம். நிறைய கூட்டம் வந்திருக்கு. உங்களுக்கு எந்த மாதிரி வேணும்னு சொல்லுங்க!’’ என்றார் கட் அண்ட் ரைட்டாக.
விமலா விளக்க, ‘‘ஸாரிம்மா... எங்ககிட்ட அந்த மாதிரி புடவை இல்லை!’’ என்று அவர் சொன்னவிதம், ‘நடையைக் கட்டுங்க’ என்பது போலவே இருந்தது. கட்டினோம்.
அடுத்து வந்த ஏழெட்டு கடைகளிலும் அதே டிட்டோ. மணியோ மூன்றை நெருங்க, பசி வயிற்றைப் பிறாண்டியது. நான் விமலாவுக்கு பயப்படலாம். என் வயிறும் பயப்
படுமா என்ன..?
‘‘சாப்பிட்டுட்டு பார்க்கலாமே விமலா...’’ என்றேன்.
‘‘சும்மா இருங்க... நானே நல்ல புடவை கிடைக்கலையேன்னு கவலைல இருக்கேன். உங்களுக்குப் பசி எடுக்குதா? எங்க போனாலும் கொட்டிக்கிறதுதான் முக்கியம். புடவை எடுக்காம போனா சுதா

முகத்துல எப்படி முழிக்கிறது. என் கவலை புரியாம... வண்டியை எடுங்க!’’ சீறினாள். கடவுளே... விதியை நொந்தபடியே வண்டியை எடுத்தேன்.
அது ஒரு மீடியம் சைஸ் ஜவுளிக் கடை... ‘இங்கே கிடைக்குமா?’ என்ற சந்தேகத்துடனேதான் நுழைந்தோம்.
பத்து புடவையை பார்த்துவிட்டு, வேறு புடவையைப் பார்க்கும்
போதுதான் மந்திரி பதவி கிடைத்த எம்.எல்.ஏ மாதிரி விமலா முகம் மலர்ந்தது. ‘‘அதோ... அது... அது... அந்தப் புடவைதான்... அதை எடுங்க’’  ஏறக்குறைய கூவினாள். கடைக்காரர் மிரண்டு போய்

என்னைப் பார்த்தார். என் முகத்தில் தெரிந்த சந்தோஷம், அவருக்கு பல கேள்விகளுக்கு விடை சொல்லி இருக்க வேண்டும். அவரும் குடும்பஸ்தர்தானே!
‘‘இதோ... இதேதாங்க... கிடைச்சுருச்சு... இதுக்கே பில் போடுங்க...’’  புடவையை எடுத்துப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தாள். நான் வானத்தை நோக்கி, ‘நல்லவங்களை கடவுள் மொதல்ல சோதிச்சாலும்

கடைசியில கைவிட மாட்டான்ங்கறதை நிரூபிச்சிட்டே கடவுளே... நீ கிரேட்’ என்றேன் (மனதுக்குள்).
நொந்து நூலாகி நொறுங்கிப் போயிருந்தாலும், ‘போதும்டா சாமி... இனி அடுத்த தீபாவளி வரைக்கும் நிம்மதியாய் இருக்கலாம்’ என்ற சந்தோஷத்தில் பணம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன்.
அடுத்த நாள்...
ஆபீஸ் முடிந்து களைப்பாக வீட்டுக்குள் நுழைந்தேன். எங்கோ கிளம்பத் தயாராய் இருந்தாள் விமலா. கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்தது எனக்கு.
‘‘எங்கே... ரெடியா காத்திருக்கே?’’
‘‘ப்ச்... சுதா முந்தா நாள் எடுத்துட்டு வந்தாளே... அந்தப் புடவை பக்கத்து வீட்டு பத்மாவுக்கு பிடிக்கலையாம். சுதா காலையில போய் மாத்தி வேற எடுத்துட்டு வந்துட்டா. அவ புடவையே பிடிக்காதப்போ,

இந்தப் புடவையைப் பார்த்தாலும் அப்படித்தானே சொல்லுவாங்க? வாங்க, நாமளும் போய் இதை மாத்தி வேற எடுத்துட்டு வருவோம்’’ என்றாள்.
எனக்கு இப்போது முதலுதவி தேவை... ஹெல்ப் மீ ப்ளீஸ்!  

‘‘பட்டாசு வாங்க வந்த அந்த நபர், தன் பையனுக்காக அடிக்கடி பெண் பார்க்க போய்க்கிட்டு இருக்கார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘பட்டாசுகளை எல்லாம் பார்த்துட்டு, ‘போய் லெட்டர் போடுறேன்’னு தன்னையும் அறியாம சொல்றாரே!’’
 எஸ்.ராமன், சென்னை17.