சுற்றுலா



காலை நேர நடைப்பயிற்சியை முடித்து, அந்த ஹோட்டலில் நுழைந்து ‘ஒரு காபி’ என ஆர்டர் செய்து அமர்ந்தேன். டேபிளில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவரிடமிருந்து தினசரியைப் பகிர்ந்துகொண்டேன். ‘‘இன்னிக்கு உலக சுற்றுலா தினம்’’ என்றார் அவர். ‘‘அப்படியா...? எது எதுக்குத்தான் ‘தினம்’ வச்சு கெ £ண்டாடறதுன்னு வெவஸ்தையே இல்லை!’’ என்றேன்.



‘‘என்ன இப்படிச் சொல்றீங்க? வேலைப்பளு அதிகமானவங்க... அடிக்கடி டிராவல் பண்ணணும் சார்! சுற்றுலாவுல கிடைக்கற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லையே! கோவா, கேரளா, கர்நாடகா...  அவ்ளோ ஏன், நம்ம தமிழ்நாட்டுல... சென்னைலயே எவ்ளோ இடம் இருக்கு. குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கிட்டு ஜாலியா போங்க சார்!’’ என்றார்.  எனக்கு உள்ளூர கோபம். இவர் யார் இதைச் சொல்ல? அறிவுரை சொல்லும் தகுதி இவருக்கு இருக்கிறதா?

‘‘நீங்க என்ன சார் பண்றீங்க? எத்தனை ‘டூர்’ போயிருக்கீங்க? ஏதாவது டிராவல் ஏஜென்சி நடத்தறீங்களா..?’’ என்றேன் எள்ளலாக.
‘‘சாரி சார்... அறுவது வயசாச்சு. நான் இந்த ஊரை விட்டு எங்கேயுமே போனதில்லை. போக நினைச்சாலும் முடியாது!’’ என்றபடியே டேபிளுக்குக் கீழே கிடந்த ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு  கிளம்பியவர், ‘‘பிறவியிலயே ஊனம். அதான் மத்தவங்களுக்கு சொல்றேன்’’ என்று சொல்லிச் சிரிக்க, நான் பேச்சற்றுப் போனேன்.    

சி.பிரகாஷ் ஷர்மா