எத்தனை ஔவையார்கள்? ஆறாம் வகுப்புப் பாடத்தில் சர்ச்சை



ஔவையார் என்றாலே, தி ஒன் அண்ட் ஒன்லி... கே.பி.சுந்தராம்பாள் முகம்தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஔவையார் எழுதிய பாடல் ஒன்றைக் கேள்வியாகக் கேட்டால், ‘பழம் நீயப்பா...’ எனத் தேர்வில் எழுதி வைக்கும் அளவுக்கு அந்த ஔவையார் நமக்கு பசுமரத்து ஆணி. அந்த ஆணியைத்தான் அசைத்துப் பார்த்திருப்பதாக சமீபத்தில் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ஔவையார் எழுதிய பாடல்
ஒன்றின் கீழ்,

 ‘சங்க காலத்து ஔவையாரும் ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒரே நபர் அல்ல’ என ஆசிரியர் குறிப்பு இருக்கிறது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பள்ளிக் கல்வித் துறையும் இதைப்பற்றி விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது. உண்மையில் ஔவையார்கள் எத்தனை பேர்? சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் வீ.அரசுவிடம் விளக்கம் கேட்டோம்...

‘‘ஒன்றிரண்டல்ல... பல ஔவைகளை தமிழ் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது’’ என்றவர், ‘‘அதிலும் குறிப்பாக ஐந்து ஔவைகளை மிகத் தெளிவாகவே வேறுபடுத்திப் பார்க்க முடியும்’’ என்று பட்டியலிடத் துவங்கினார்... ‘‘முதல் ஔவை என்று, சங்க கால ஔவையைச் சொல்லலாம். சங்க காலம் என்பது கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முன்பானது. இரண்டாவது ஔவை, சங்க காலத்துக்குப் பிறகு சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள புராண கட்டுக்கதைகளில் வரும் ஔவை. இந்தக் காலகட்டத்தில்தான் திருவள்ளுவர்,


ஒட்டக்கூத்தர் போன்றவர்களின் தங்கையாக ஔவை சித்தரிக்கப்பட்ட கதைகள் உலாவின. மூன்றாவதாக 12 முதல் 14ம் நூற்றாண்டுகளில் எழுந்த நீதி இலக்கிய காலத்து ஔவை. திருவிளையாடல் புராணத்தில் ‘சுட்ட பழம் வேண்டுமா’ என முருகனிடம் கேட்பதாக இவர் சித்தரிக்கப்பட்டதைப் பார்க்க முடியும். நான்காவதாக, 14-15ம் நூற்றாண்டு காலத்தில் ‘விநாயகர் அகவல்’, ‘ஔவை குறள்’ போன்றவற்றை எழுதிய சமய இலக்கிய ஔவை. கடைசியாக 17-18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஔவையாரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இவர் பாடியதாக ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் உலவுகின்றன. ‘பந்தன் அந்தாதி’ எனும் நூலும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது’’ என்றார் அவர்.

ஔவையார் என்ற சொல் நம்மிடையே ஏற்படுத்தும் வழக்கமான பிம்பத்தைக் கட்டுடைப்பதாக அவரின் அடுத்தடுத்த கருத்துகள் விரிந்தன.
‘‘அன்றைய காலங்களில் ஒரே பெயரைப் பயன்படுத்தி பாடும் ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். உதாரணமாக புகழேந்திப் புலவரின் பெயரைப் பயன்படுத்தி பாடியவர்கள் பலபேர். அன்று பெயர் ஒரு சிக்கலாக இருக்கவில்லை. சங்க கால ஔவை, அதியமான் என்னும் மன்னனுடன் அதிகம் பழகியவர்களில் ஒருத்தியாக வருகிறாள். நமது ‘ஔவையார்’ சினிமாவில் காட்டப்பட்ட ஔவைப் பாட்டியை விட இந்த ஔவை மிகவும் இளமையானவள். சுமார் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும். அதோடு பேரழகும், பேரறிவும் மிக்கவள். இன்னும் சொல்லப் போனால் கள் குடித்து, கறி சாப்பிட்டு அதியமானோடு புரட்சிகரமான நெருக்கத்தோடு அவள் பழகியிருக்கிறாள். கவிஞர் இன்குலாப் இப்படிப்பட்ட ஔவையை தனது ‘ஔவை’ எனும் நாடகத்தில் சித்தரித்ததால், அந்தப் புத்தகத்தை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைப்பதற்குக்கூட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கெல்லாம் காரணம், நம் மனதில் ஆழப் பதிந்துவிட்ட ‘ஔவையார்’ உருவம்தான். கடற்கரையில் சிலை வடிக்கப்பட்டிருக்கும் கோல் ஊன்றிய மூதாட்டிதான் ஔவை என நம் பொது புத்தி பிடிவாதம் பிடிக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்துகள் உண்மையாகவே இருந்தாலும், மனம் ஏற்க மறுக்கிறது. அந்தக் கால ‘ஔவையார்’ திரைப்படம் பிரமாண்டமான படைப்புதான். ஆனால், அது ஔவையாரின் வரலாறு பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஔவையார் பற்றிய அனைத்து செய்திகளையும் ஒரே கதையாக்கித் தொகுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

அந்த சினிமா ஔவையையும், நீதிநெறி போதிக்கும் ஔவையையும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் தமிழ்ச் சமூகம், காதல், அழகு, புத்திக்கூர்மை போன்ற எதிரும் புதிருமான குணாம்சங்களைக் கொண்டிருந்த சங்க கால ஔவையை மறந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான். ஔவை என்ற சொல்லுக்கு ‘தாய்’ என்றுதான் அர்த்தம். ஆனால், இளம் வயதுக்குரிய பெயர் அது. மரியாதைக்காக ‘ஆர்’ விகுதி போட்டு அதை

ஔவையார் ஆக்கி, தமிழ்ச் சமூகம் பெருமை கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஔவை உண்டு என்ற அடிப்படை உண்மையைக் கூட அது ஏற்கத் தயங்குகிறது’’ என்று முடித்தார் அவர்.
நல்லவேளை... இதில் ‘அவ்வை சண்முகி’யை சேர்க்கவில்லை!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்