கோமாரிக்கு பலியாகும் ஆடு மாடுகள்!



மனிதர்களுக்கும் பாதிப்பு வருமா?

விவசாயம் பொய்த்துப்போன நிலையில், ஜீவனம் அளித்துக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச ஆடு, மாடுகளும் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்றன. காரணம், கோமாரி நோய். திருவாரூர் மாவட்டத்தில் பற்றத் தொடங்கிய கோமாரி, தமிழகத்தின் எல்லாப் பரப்பையும் ஆக்கிரமித்து விட்டது. வழக்கத்தை விட வீரியம் மிகுந்த இந்நோயை தடுக்கவும் முடியாமல், குணப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள்.

*கோமாரி என்பது என்ன?

இது ஒரு நச்சுயிரி நோய். ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட பிளவுபட்ட (குளம்பு) பாதங்களைக் கொண்ட கால் நடைகளைத் தாக்கும். சுவாசம், உணவு மூலமாகப் பரவுகிற இந்நோய் உலகத்தையே அச்சுறுத்துகிற பழமையான நோய்களில் ஒன்று. ஒரு கால்நடைக்கு வந்து விட்டால் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற அத்தனை கால்நடைகளுக்கும் அதிவேகத்தில் பரவும். பெரும்பாலும் பசுமாடுகளே அதிகம் பாதிக்கப்படும்.



நோய் தாக்கிய கால்நடைகளுக்கு வாயில் இருந்து கம்பி போல நுரை ஒழுகும். வாயில் கொப்புளங்கள் உண்டாகும். கடும் காய்ச்சல் இருக்கும். தாங்கித் தாங்கி நடக்கும். பால்மடியில் கொப்புளங்கள் உருவாகும். பால் சுரப்பு குறையும். பாலைக் குடிக்கும் கன்று இறந்துவிடும். தகுந்தநேரத்தில் சிகிச்சை அளிக்காத பட்சத்தில் பசுவும் இறந்துவிடும்.

*என்ன சிகிச்சை?

குணப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை. நோய் எதிர்ப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உண்டு. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். மழையும், வெயிலும் இணைந்து வரும் காலங்களிலும், கோடையிலும் இந்நோய் வருவதுண்டு. ஆனாலும் பாதிப்பின் அளவு குறைவாகவே இருக்கும். 

‘‘இப்போது வந்துள்ள கோமாரி பயங்கரமானது’’ என்கிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம். ‘‘முன்பெல்லாம் கோமாரி வந்தால், முன்னெச்சரிக்கையாக கால்நடைகளுக்கு பன்றி நெய்யை வாழைப்பழத்துக்குள் வைத்துக் கொடுப்பார்கள். அதையும் தாண்டி நோய் வந்தாலும் கால்நடைகள் தாக்குப் பிடித்து
விடும். இன்றைக்கு கால்நடை வளர்ப்பு முறையே மாறிவிட்டது. அன்று மாட்டுக்கு வெளி மேய்ச்சல் இருந்தது.


பல வகையான இலை, தழைகளைத் தின்றதால் இயல்பாகவே எதிர்ப்பு சக்தி இருக்கும். இன்று தீவனங்களிலேயே வளர்ப்பதால், கால்நடைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது. அதனால் வழக்கமான சீசன் நோய்களைக் கூட தாங்க இயலவில்லை.

இப்போது கோமாரியோடு, ரத்த நாளங்களை உறையச் செய்யும் புதுவிதமான பாக்டீரியா நோயும் சேர்ந்து பரவுகிறது. அதனால் கால்நடைகளைக் காப்பாற்ற முடியவில்லை. இதை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் மக்கள் பேரிழப்பை எதிர்கொள்வார்கள்’’ என எச்சரிக்கிறார் செல்வம்.

*எப்படிப் பரவியது?

‘‘விலையில்லா கறவை மாடுகள் திட்டத்துக்காக ஆந்திராவிலிருந்து வாங்கிய மாடுகள் மூலமாகவே கோமாரி பரவியது’’ என்கிறார் நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் குரு.கோபி கணேசன். ‘‘ஆந்திராவில் இந்த நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவே இல்லை. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை பகுதியில் பல கிராமங்களில் விலையில்லா மாடுகள் வழங்கப்பட்டன. இங்கிருந்துதான் நோயே தொடங்கியது.

முன்பெல்லாம் கோமாரி வந்தால் மாடுகளை குளத்துக்குள் கொண்டுபோய் கட்டிவிடுவோம். மீன்களும், பறவைகளும் புண்களை சுத்தம் செய்துவிடும். பனை வெல்லம், வெந்தயம் சாப்பிடக் கொடுப்போம். சில நாட்களில் குணமாகிவிடும். நூற்றில் 2 மாடுகள் இறக்கலாம். ஆனால் இப்போது நோய் இருப்பதை அறிந்து கொள்வதற்குள்ளாகவே மாடுகள் இறந்து விடுகின்றன’’ என்று வருந்துகிறார் கோபிகணேசன்.

*இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு வருமா?


‘‘வாய்ப்பில்லை’’ என்கிறார் தஞ்சாவூர் கால்நடைகளுக்கான மருந்துசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் புண்ணியமூர்த்தி. ‘‘கோமாரி பாதித்த பசுவுக்கு கறவை குறைந்து விடும். கறக்கும்போதே பால் நூலாகத் திரிந்து விடும். வீச்சமும் அடிக்கும். அதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. நோயின் தாக்கம் குறைந்து பால் திரியாமல் இருந்தால், நன்றாகக் காய்ச்சிக் குடிக்கலாம். அதனால் பிரச்னையில்லை.

 ஒருவேளை கால்நடைகள் இறந்தால் அதை ஆழமாகக் குழி தோண்டி உப்பு போட்டு புதைக்க வேண்டும்’’ என்கிறார் அவர். கோமாரி தாக்கி இறந்த ஆடு, மாடுகளை சிலர் குறைந்த விலை கொடுத்து வாங்கி இறைச்சியோடு கலந்து விற்பதாகச் சொல்கிறார்கள் சேலம், திருப்பூர் மக்கள். சாலையோர உணவகம் நடத்துபவர்கள் இந்த இறைச்சியைப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. எச்சரிக்கையாக இருங்கள்!

* மூலிகை வைத்தியம்!


இப்போது வந்துள்ள கோமாரி மிகவும் வீரியமானது. ஆனாலும் இதை எளிமையான மூலிகை மருத்துவம் மூலம் கட்டுப்படுத்தலாம்; வராமலும் தடுக்கலாம். டாக்டர் புண்ணியமூர்த்தி தரும் சிகிச்சை முறை கீழே... ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். சீரகம், வெந்தயம், மிளகு மூன்றிலும் தலா பத்து கிராம் எடுத்து,

1 மணி நேரம் ஊற வைத்து, அதில் பூண்டு 4 பல், மஞ்சள் பத்து கிராம், நாட்டு சர்க்கரை 100 கிராம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய்ப்பூவை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கால்நடைகள் சப்பிச் சாப்பிட ஏதுவாக கடைவாய்ப் பகுதியில் கொடுக்க வேண்டும். இந்த அளவு ஒரு மாட்டுக்கானது. ஆடுகள் என்றால் இதை 5 ஆடுகளுக்குக் கொடுக்கலாம்.

நோய் பாதித்த மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 3 வேளையும், பாதிக்காத மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 1 வேளையும் 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மருந்தை புதிதாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். உடம்பு மற்றும் கால் குளம்பு பகுதியில் உள்ள புண்களுக்கும் ஒரு சிகிச்சை இருக்கிறது...

வேப்பிலை, துளசி, குப்பைமேனி, மருதாணி - தலா 10 இலைகள் எடுத்துக் கொண்டு, பூண்டு 4 பல் சேர்த்து அரைத்து, இதில் மஞ்சள் தூள் 10 கிராம் கலந்து கொள்ளவும். இதை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்து சூடுபடுத்தி, ஆறியபின் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை புண்களை நன்கு துடைத்துவிட்டு இந்த எண்ணெயைப் போட வேண்டும். 5 முதல் 7 நாட்களுக்குள் வீக்கங்கள் குறைந்து புண்கள் ஆறிவிடும்.

*பரவாமல் தடுக்க...

நோய் பாதித்த கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும். காலை, மாலை இருவேளை தண்ணீரில் உப்பைக் கலந்து கட்டுத்தறிகளில் தெளிக்க வேண்டும். நோய் பாதித்த மாடுகளுக்குப் போட்ட வைக்கோலை பிற மாடுகளுக்குப் போடக்கூடாது. நோய் பாதித்த மாடுகளைத் தொட்டுவிட்டு பிறமாடுகளைத் தொடவும் கூடாது.
- வெ.நீலகண்டன்