இது திருடன் போலிஸ் விளையாட்டு!



யாருப்பா இந்தப் பையன்? அலட்டல் இல்லாத நடிப்பில் அசத்துறானே...’’ என ‘அட்டகத்தி’யில் கவனம் ஈர்த்த தினேஷ் ஹீரோ; தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் 150 படங்களுக்கு கிராஃபிக்ஸ் கைவண்ணம் காட்டிய கார்த்திக் இயக்குனர்... இப்படி செம ஃபிரஷ் காம்பினேஷனை இணைத்து தயாராகிறது ‘திருடன் - போலீஸ்’ படம். இயக்குனர் கார்த்திக் ராஜுவிடம் பேசினோம்... படத்துல வர்றது சிரிப்பு திருடன் - போலீஸா? சீரியஸ் திருடன் - போலீஸா?


‘‘ரெண்டு பேரும்தான். விரக்தியின் உச்சகட்டத்தில் இருக்கும் ஹீரோ, போலீஸுக்கும் திருடனுக்கும் இடையில் புகுந்து நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஜெயிக்கிறானா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன். கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் மட்டும் இந்தத் தலைப்பை வைக்கவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் அந்தந்த வட்டார பழக்க வழக்கங்களைப் பொறுத்து ஒரு தனித்துவமான விளையாட்டு இருக்கும்.

அதை வேற எங்கயும் பார்க்க முடியாது. ஆனா, அமெரிக்காவில் ஆரம்பித்து அம்பா சமுத்திரம் வரை எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும், எல்லாருக்கும் தெரிந்த விளையாட்டு, ‘திருடன் - போலீஸ்’ விளையாட்டுதான். குழந்தைகளுக்கும் பிடிச்ச டைட்டிலா இது இருக்கும்...’’ தினேஷ் இந்தப் படத்துல தில்லாலங்கடி திருடனா?


‘‘ஆமா. சின்னதா திருட்டில் ஈடுபடுபவரின் ஆதியும் அந்தமும்தான் படத்தின் ஜீவனே. அதை இப்பவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் உடைஞ்சிடும். ஆக்ஷனும் அலப்பறையுமாக தினேஷ் அடிக்கும் லூட்டிக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும். ‘அட்டகத்தி’ பார்த்த பிறகு, இந்தக் கதைக்கு சரியான ஆள் தினேஷ்தான் என்று முடிவு செஞ்சேன். போலீஸ் வேலையில் புதுசா சேர்ந்து, தனக்கு தண்ணி காட்டும் ஹீரோகிட்ட மாட்டிக்கிட்டு தத்தளிக்கும் கேரக்டரில் பாலசரவணன் பண்ணும் காமெடிக்கு ஆடியன்ஸ் கண்டிப்பா உருண்டு புரண்டு சிரிக்கப் போறாங்க...’’
ஹீரோயின்?

‘‘ ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களில் நடிக்கற ஐஸ்வர்யாதான் ஹீரோயின். போலீஸ் இன்ஸ்பெக்டரோட மகளான இவர், ஹீரோகிட்ட மனசை எப்படி திருட்டு கொடுக்கிறார் என்பதும் படு சுவாரஸ்யமா இருக்கும். ஏற்கனவே நடிச்ச படங்களில் அவருக்கு கிராமத்து கேரக்டர்தான். டான்ஸ் ஆட சந்தர்ப்பம் அமையல. டான்ஸ் பிரமாதமா பண்ணத் தெரிஞ்ச ஐஸ்வர்யா, இந்தப் படத்தில் செமத்தியா ஆட்டம் போடப் போறார். அந்தப் பாடலை வாலி சார் ஏற்கனவே எழுதிக் கொடுத்திருந்தார். யுவன்ஷங்கர் ராஜா இசை, சித்தார்த் ஒளிப்பதிவுன்னு டெக்னிகலாகவும் நல்ல டீம் அமைஞ்சிருக்கு...’’

உங்களோட நதிமூலம்?
‘‘பதினைந்து வருஷங்களா சினிமாவில் இருக்கேன். ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’ தொடங்கி, இந்தியில் ‘வான்டட்’, ‘நாயக்’ என்று பல பெரிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் பன்ணிருக்கேன். கிராஃபிக்ஸ் காட்சி தொடர்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி போவேன். அந்த அனுபவம் நாளடைவில் இயக்குனர் ஆசையை உண்டு பண்ணியது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எனக்கு அண்ணன் மாதிரி. என் இயக்குனர் ஆசைக்கு சரியான அடிப்படையை அமைத்துக்கொடுத்தது அவர்தான். என்னுடன் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றிய நண்பர் செல்வக்குமாரும் என் கனவுகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கினார். ‘ஆரண்ய காண்டம்’, ‘மழை’ என்று எஸ்.பி.பி.சரண் தயாரித்த படங்களுக்கு கிராஃபிக்ஸ் அமைத்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

செல்வகுமாரும் அவருக்கு மிக நெருக்கமான பழக்கம். அந்தப் பழக்கத்தில் ஒருநாள் என்னிடம் இருக்கும் கதையை சொன்னேன். அது பிடித்துப்போகவே இப்போது இயக்குனர் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். எஸ்.பி.பி.சரணும் செல்வகுமாரும்,  சேர்ந்துதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். அவர்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வெற்றியைப் பரிசாகத் தருவேன்!’’
- அமலன்