நிலம்



‘‘எனக்கு கொஞ்சம் பண முடையா இருக்கு மாமா... மாமண்டூர்ல இருக்கற மனையை நீங்களே வாங்கிக்குங்களேன்...’’ - அக்காள் கணவர் ராஜனிடம் விஜய் கேட்டான்.
அக்கா கமலா புன்னகைத்தாள். அது அவர்கள் சொந்த ஊர் நிலம். சொந்த ஊரிலேயே மனை கிடைக்கிறதே என கொண்டாட்டம் அவளுக்கு.
ஆனால், ராஜன் மறுத்தார்.


‘‘இல்ல விஜய்... இப்ப பட்ஜெட் உதைக்குது. நான் எனக்குத் தெரிஞ்ச புரோக்கரை வரச் சொல்றேன். அவர் அனுபவஸ்தர். நியாயமான விலைக்கு வித்துக் கொடுப்பார். டோன்ட் ஒர்ரி...’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். கமலா புலம்பினாள். ‘‘எவனுக்கோ விக்காம, என் தம்பி நமக்கே விக்க வந்தான்... பணக்கஷ்டம்னு பொய் சொல்லி இப்படி வாங்க முடியாதுன்னுட்டீங்களே..?’’
ராஜன் விளக்கம் சொன்னார்...

‘‘மனை விலையும், மனுஷ மனசும் நிரந்தரம் இல்லடி. நாளைக்கே, அந்த மனையோட விலை உச்சாணி ரேட்டுக்குப் போகலாம். அடி மாட்டு விலைக்கு நம்மகிட்ட வித்துட்டதா அப்ப இவனுக்குத் தோணும். எனக்கும் மனையை திருப்பித் தர மனசு வராது! இப்ப ஹெல்ப்பா இருக்கற விஷயம், அப்ப பெரிய சண்டையா மாறும். உறவும் போகும். ஸோ, உறவுக்குள்ள சொத்து எதுவும் வாங்காம, விற்காம இருக்கறதே பெட்டர். புரியுதா..?’’
கமலா இப்போது கப்சிப் ஆனாள்.               

காயத்ரி