மகளிர் வங்கி கலக்கல் ஆரம்பம்!



பெண்களுக்கு தனி க்யூ, தனி ரயில், தனி பஸ், போலீஸ் ஸ்டேஷன் என்கிற வரிசையில் இப்போது வங்கியும் சேர்ந்திருக்கிறது. யெஸ்... இந்தியாவில் முதல்முறையாக பெண்களுக்கே பெண்களுக்கான வங்கி வந்தாச்சு... அதுவும் நம் சென்னையில். ‘இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சின்ன முயற்சி’ எனும் முன்னுரையோடு, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் இந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ வங்கி சேவையைத் துவங்கியுள்ளது மத்திய அரசு. 


‘பாரதிய மகிளா பேங்க்’ (ஙிவிஙி) என்றழைக்கப்படும் இந்த வங்கி, வந்து அமர்ந்திருப்பது நம் அண்ணா சாலையில். ஆறு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ஏழு பேர் கொண்ட அந்த பி.எம்.பி வங்கிக்கு திடீர் விசிட் அடித்தோம்... பணியாளர்கள் காயத்ரியும், வேதலட்சுமியும் விண்ணப்பங்களை நிரப்புவதில் வாடிக்கையாளர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர். கடன் பற்றி மாலா விளக்க, டிண்டு என்பவர் அக்கவுன்ட்டில் கருத்தாக இருந்தார். இந்த வங்கியிலிருக்கும் ஒரே ஆணான அவினாஷ் சர்மா சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வந்திருக்கிறார்.

‘‘முதல் நாள்லயே நிறைய பெண்கள் ஆர்வமா வந்து சேமிப்புக் கணக்கு தொடங்கியிருக்காங்க’’ என உற்சாகமாகத் தொடங்கினார் மேனேஜர் நிஜசுந்தரி.
‘‘பெண்கள் முன்னேற்றத்துக்காக இங்கே நிறைய ஸ்பெஷல் அம்சங்கள் இருக்கு. இங்க பெண்களுக்கு சுலபமா லோன் கிடைக்கும். கேட்டரிங், ப்ளே ஸ்கூல், ஏதாவது டிரெயினிங் சென்டர்ஸ்... இப்படி எல்லா லெவல் பிசினஸுக்கும் லோன் உண்டு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி சலுகையே இருக்கு. இங்க ஆர்.டி கணக்கு துவங்கும்போது அதில் இன்சூரன்ஸ் கவரேஜும் தர்றோம்’’ என்றவரைத் தொடர்ந்தார் துணை மேலாளர் கவிதா...

‘‘பிசினஸ் மட்டுமில்ல சார்... பெண்கள் அவங்க வீட்டு கிச்சனை புதுசாக்க நினைச்சா, அதுக்கும் நாங்க லோன் தர்றோம். இது வேற எந்த வங்கியிலயும் கிடையாது. மற்ற வங்கிகளை விட இங்க டெபாசிட் வட்டி .5 சதவீதம் அதிகம். லேடீஸ் ஸ்பெஷல் பஸ் மாதிரி இங்கே ஆண்களுக்கு தடா கிடையாது. ஆண்களும் அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். எல்லா விதத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவங்களை முன்னேத்துறதுதான் பெண்கள் வங்கியின் நோக்கம்!’’ என்று முடித்தார் அவர்.

இந்தியாவில் வெறும் 26 சதவீத பெண்களே வங்கி அக்கவுன்ட் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். வங்கிக் கடன் பெறுவதிலும் ஆண்களே அதிகம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் 80 சதவீதம் குறைவாகவே கடன் வாங்குகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை தரும் இந்த வங்கியால், நிறைய பெண் தொழிலதிபர்கள் உருவானால் மகிழ்ச்சி! 

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்