வேலைக்குப் போகாதீர்கள்! ஷங்கர்பாபு



ஓய்வை நேசிப்பவனுக்கு வெறுமையே மிஞ்சும்; வேலையை நேசிப்பவனுக்கே ஓய்வு கிடைக்கும்!

டைலான் தாமஸ்

வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மனம் பற்பல உலகங்களில் சஞ்சரித்து உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதைக் கவனித்திருக்கிறீர்களா?
அதாவது... இந்த வேலையில் இவ்வளவு நாள் இருக்கிறோமே, என்ன சாதித்து விட்டோம்? ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லையே! ஏதோ வருகிறோம்... விதிக்கப்பட்ட வேலையைச் செய்கிறே £ம்... வீடு போய்ச் சேர்கிறோம். ஆயுளில் ஒரு நாள் ஒழிந்தது. இந்தச் சம்பளத்தில் இடம் வாங்கி, வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து... இதெல்லாம் எப்படி சாத்தியம்?




கூடப் படித்தவர்கள் எல்லாம் வெவ்வேறு வேலைகளில் கை நிறைய சம்பாதித்து ராஜா போல் வாழ்கிறார்கள். நாமோ இங்கு ஆசைப்பட்ட எதையுமே வாங்க முடியாமல், ‘ஏதோ’ வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். குழந்தைகளுக்காக வாழ்கிறோம்... அவர்கள் ஆசைப்பட்ட படிப்பைக் கூட நம்மால் கொடுக்க முடியுமா தெரியவில்லையே..! கடவுளே... உடன் பணி புரியும் குப்புசாமி லீவில் போகிறான்.  அவனது வேலையையும் நம்மைப் பார்க்கச் சொல்லி விடுவார்களோ? புதிதாய் ஒரு மேனேஜர் வேறு வரப் போவதாகச் சொல்கிறார்கள்... அவன் எப்படிப்பட்டவனோ? இப்படிப் புதுப்புது ஆட்களாய்  நிர்வாகம் எடுத்துக் கொண்டே இருக்கிறதே... அப்படியானால் நமக்கு ப்ரமோஷன் வருமோ, வராதோ... ஒருவேளை வரவே இல்லை என்றால்..?

நமக்கு ஒரு புகலிடம் இல்லாமல் போய் விட்டதே... நாம் பார்க்கிற - கேள்விப்படுகிற எதுவும் நம்பிக்கை தரும் செய்தியாக இல்லையே... நிம்மதி தருகிற நல்ல செய்தி கேட்டு எத்தனை தினங்களாகி
விட்டன! இந்த ரீதியில் மனதுக்குள் புலம்புவீர்கள். இப்படி எல்லாம் சிந்தித்து அவநம்பிக்கை அடைவீர்கள். எதையோ பறி கொடுத்த மாதிரி காணப்படுவீர்கள். யார் உங்களைப் பார்த்தாலும், ‘‘ஏன் டல்லா இருக்கீங்க?’’ என்று கேட்க வைக்கிற தோற்றத்துடன் இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக பீதியில் உறைந்து போவீர்கள்.

இது மாதிரி நினைப்பு சம்பந்தமே இல்லாத நேரத்தில் உங்களுக்கு ஏற்படுகிறது என்றால், எளிதில் எழ முடியாதபடி அடிக்கடி சோர்வு ஏற்படுகிறது என்றால், உலகின் மீது காரணமற்ற வெறுப்பு ஏற்ப டுகிறது என்றால், மேலே சொல்லப்பட்ட புலம்பல்களில் ஏதேனும் ஒன்றையாவது வாரத்தில் ஒரு நாளாவது சொல்லி சலித்துக்கொண்டீர்கள் என்றால், இந்த அவநம்பிக்கையிலிருந்து விடுபட உங்களு க்கு உண்மையிலேயே விருப்பம் இருக்கிறது என்றால், நீங்கள் நினைக்கிற நான்கு பேர் மாதிரி நீங்களும் வாழ உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றால்... இதோ ஒரு எளிய உபாயம். இதைப்  பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் நிம்மதி அடைவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

அது வேறு ஒன்றும் இல்லை... முன்னை விட பணி இடத்தில் அதிக வேலையில் ஈடுபடுங்கள்! ஆம், உங்கள் வேலை எளிதாக இருக்கிறது. அதில் நன்றாகப் பழகிவிட்டதால் நீங்கள் சொகுசாகி விட் டீர்கள்! எனவே அந்த சொகுசான வாழ்வில் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அந்த உபரி நேரத்தில் அடிக்கடி நீங்கள் செயற்கையான சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வேலையைத்  தேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வேலையை செய்வதை இழுக்கும்போதுதான் பெரும்பாலும் உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றும்.

வெட்டி நேரத்தில்தான் உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனைகளும் சோகங்களும் புகுந்து விடுகின்றன. சும்மா இருக்கிற மனதில்தான் அவநம்பிக்கைகள் உருவாகும். கவனிப்பாரற்ற நிலத்தில்தான்  களைகள் உருவாகும். ஒரு மாணவி தன் மதிப்பெண் பற்றிக் கவலைப்படுகிறாள். இது ஆழ்ந்து படித்தல் என்னும் செயலில் முடியக்கூடும். தன் முன்னேற்றத்தைப் பற்றி கவலைப்படும் ஒருவன் அல்லது ஒருத்தியே நல்ல வேலையை அடைகிறார்கள். இவை இலக்கு உள்ள கவலைகள். என்ன செய்யலாம் என்று வழி தெரிகிற கவலைகள். பாஸிட்டிவ்வான கவலைகள். ஆனால், நாம் மேலே பார்த்தது இலக்கில்லாத கவலைகள்.

எதையாவது செய்து இந்தக் கவலையிலிருந்து விடுபட முடிந்தால், நீங்கள் அதை உடனே செய்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் கொண்டிருப்பவை இலக்கில்லாத, அர்த்தமற்ற கவலைகள். எங்கு போக  வேண்டும் என்று தெரியாத ஒருவன் பஸ் ஸ்டாண்டைத்தான் சுற்றி வருவான். இவை பொழுதுபோக்குக் கவலைகள் என்பதால், நீங்கள் களைப்படையாமல் இருந்து விட முடியுமா? சொல்லப் போன £ல் உங்கள் மனம் திசை தெரியாமல் சுற்றுவதால் நீங்கள் கூடுதலாகவே வேதனைக்கு உள்ளாவீர்கள்!

இதற்குக் காரணம் வேறு என்ன? உங்கள் மனம் உங்களை சோகத்தில் வைத்திருப்பதையே விரும்பும். அதாவது, நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள்... ஆனால், அடுத்தவர் வாயால் அது சொல் லப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள்: ‘‘வேலையே சரி இல்லப்பா... போற போக்கை பாத்தா விட்ரலாம்னு தோணுது!’’ நண்பர்: ‘‘உனக்கென்னப்பா குறை? அழகான வேலை, அவனவனுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பாத்தா... நீயெல்லாம் கொடுத்து வச்சவன்பா...’’

இதில் உங்களுக்கு ஒரு ஆனந்தம். ஒரு விதத்தில் இது நோய். சொறிந்து விடுதலில் சுகம் காணும் இயல்பு.
என்னதான் தினமும் எதிர்பார்க்கிறீர்கள்? அதாவது, நன்றாக இருப்பது என்றால் என்ன? தினமும் ஒரு செக் உங்கள் பெயருக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மோசமாக ஏதாவது நடக்க £மல் இருப்பதே நீங்கள் நன்றாக இருப்பதற்கு சமம்தான் என்பதை உணருங்கள்.

தான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நம்பவே பொதுவாக மனிதர்கள் தயாராக இல்லை..! ஏதேதோ ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்திருப்பது மாதிரியும், இன்னும் பல அணிவகுத்து வர  இருப்பது மாதிரியும் கவலைப்படத் துவங்குகிறோம். உண்மையான கவலைகளுக்குக் கூட நாம் இவ்வளவு துயர் கொள்ள மாட்டோம். காரணம்... உங்களுக்கு வந்திருப்பது காய்ச்சல் என்றால், நீங் கள் அதற்கு மட்டும் மருந்து சாப்பிடுவீர்கள். இல்லாத மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு, நிமோனியா, டைபாய்டு வகையறாக்களுக்கு நீங்கள் எந்த மருந்துகளை உட்கொள்ள முடியும்? கற்பனை  கஷ்டங்களுக்கு மருந்தும், விடையும் யதார்த்த உலகில் எங்கிருந்து கிடைக்கும்?

மனிதன் இன்று நிறையத் தெரிந்து வைத்திருக்கிறான். அந்த அறிவு அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். 
உளவியல் நோக்கில் பார்த்தால் மனிதன் ஆதிகாலத்திலிருந்தே தன்னைப் போன்ற சக மனிதர்களின் தாக்குதல், போட்டி, இதர மிருகங்களின் தாக்குதல் மற்றும் மழை, பனி, வெயில், குளிர் போன்ற  இயற்கை இன்னல்களையும் பார்த்து வந்திருக்கிறான். இவற்றில் இருந்து தோன்றிய பாதுகாப்பின்மையும், பயமும் இன்று வரை அவனது செல்களில் கலந்து இருக்கிறது. ஆபத்து ஏற்பட்டு விடும்  என்ற பயம் அவனை கற்பனைக் குதிரையில் ஏற்றிவிட்டு, கவலைக் காடுகளின் சாத்தியமற்ற சந்து பொந்துகளில் எல்லாம் சுற்றிக் காட்டுகிறது. 

ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கும் உங்களது பணி வாழ்க்கையை இவை நிச்சயமாகப் பாதிக்கும். இந்த திருப்தியற்ற மனநிலை, நிச்சயம் உங்களது பிற வாழ்க்கைகளிலும் எதிரொலிக்கும்.

உண்மையில் நண்பர்களே, நாம் நினைக்கிற கற்பனைக் கவலைகளில் பாதிக்கு மேல் நடக்கவே போவதில்லை; மீதிப் பாதியும் நீங்கள் நினைத்த அளவில், நினைத்த நேரத்தில் அல்லது ஒரே  நேரத்தில் நிகழப் போவதில்லை. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை நாம் நம்பவே தயாராக இல்லை..! நம்புங்கள்! நாம் எதிர்பார்ப்பதை விட நன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை நம்புங்கள்! உற்சாகமாக உங்கள் பணிகளில் ஈடுபடுங்கள். அதை ஒழுங்காகத்தான் செய்கிறீர்கள் என்றால், அந்த உபரி நேரத்தை ஏதேனும் நல்ல பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்துங்கள்..!
(வேலை வரும்...)