சொல்றேன! சொல்றேன! இமான் அண்ணாச்சி



ஊர் நாட்டுல இன்னிக்கும் 'ஃபாரீன் ரிட்டர்ன்’ அப்படீங்கறது ஒரு அவார்டு மாதிரிண்ணே. ஆளாளுக்கு அத நெத்தியில எழுதி ஒட்டிக்கிடாத குறைதான்.‘ பேன்ட்டு போட்டவன் பொய் சொல்ல மாட்ட £ன்’ங்கிற மாதிரி, ‘ஃபாரீன் போறவனெல்லாம் படிச்சவனாத்தான் இருப்பான்... அறிவாளியாத்தான் இருப்பான்’னு நம்ம ஊரு அறிவாளிங்க முடிவு பண்ணிருவாங்க.


‘‘எல... அண்ணன் யாரு தெரியுமா? துபாய்ல வேலை பார்த்தவரு’’ன்னு சொன்னா, அவருக்கு மட்டும் கடையில கிளாஸைக் கழுவி டீ போடுவான். எங்க ஊருல, ‘மவன் மெட்ராஸ்ஸ வேலை ப க்கான்’னா ஒரு மரியாதை... அதுவே, ‘பாம்பேல இருக்கான்யா’ன்னா மரியாதை ஒரு டோஸ் கூடும். மஸ்கட்ல இருக்கான்னா அவ்வளவுதான்... அந்தக் குடும்பத்த கையில புடிக்க முடியாது.
நேத்து வரைக்கும் கும்பல் குடிகாரனாத்தான் இருந்திருப்பான்... ஆனா இன்னிக்கு ‘‘எல... நம்ம அண்ணாச்சி சொன்னா சரியா இருக்கும்லே... அவரு மவன் ஃபாரீ னெல்லாம் போயி வேலை பாக் கான்’’னு அவனை ஐகோர்ட்டு ஜட்ஜு ரேஞ்சுக்கு ஆக்கி விட்ருவாங்க. ஏற்கனவே, ஊருல நாட்டாம பண்ற நாலு ஃபாரீன் ரிட்டர்னும் அதுக கூட சேர்ந்துரும். ‘‘அந்த ஏர்போர்ட் கார்னர்ல ஒரு  பெட்ரோல் பங்கு வச்சிருந்தானுவளே... இன்னும் இருக்கா, தூக்கிட்டானுவளா?’’ன்னு கிழடு சின்சியரா விசாரிக்கும்.

‘‘ஏன்... தூக்கிட்டா நீரு போய் மறுபடி வைக்கப் போறீரா?’’ன்னு கேட்டு நான் அடி வாங்குவேன். ஊருக்குள்ள படிப்பு வராத மக்கு மண்ணாங்கட்டியெல்லாம் கூட ஃபாரீன் போகும்ணே... ஆனா, வரும்போது என்னவோ அந்த நாட்டுக்கு இவன்தான் வெளியுறவுத் தூதர் மாதிரி கைய ஆட்டிக்கிட்டே  வருவான். இங்கன ஒரு மாசம் தங்கும்போது, அவன் காட்டுற படம் இருக்கே... தாங்க முடியாது! ‘‘வாட்... பீடி குடிக்கிறதா? எனக்கு உடம்புக்கு ஒத்துக்காது. ஒன்லி பஞ்சு வச்ச சிகரெட்தான்’’னு கூசாம புளுகுவான்.

பள்ளிக்கூட காலத்துலயே அந்தக் கேடி சொல்லச் சொல்ல கேக்காம எச்சி பீடி குடிச்சது நமக்குத்தான் தெரியும். நாமெல்லாம் அவன் கிட்டப் போயி பழைய கதையப் பேசிரக் கூடாது பாருங்க... அதுக் காகவே ஏதாச்சும் ஒரு பாஷைய கத்துக்கிட்டு வந்துருவானுங்க. நமக்கெல்லாம் நாலு இங்கிலீசு வார்த்தையக் கேட்டாலே வவுத்தால போவும். இவனுங்க பேசிக்கிட்டிருக்கும்போதே திடீர்னு ‘பக்வாஸ்,  அராம்ஜாதே’ன்னு திட்டுவானுங்க. அதெல்லாம் எந்த கிரகத்துல பேசுற பாஷைன்னு இப்ப வரைக்கும் தெரியாதுண்ணே... பய புள்ளைய கடல் தாண்டி ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சின்னு சிதறி  ஓடிருவோம்.

தெரியாமத்தான் கேக்கேன்... இந்த துபாய், சிங்கப்பூர், மலேசியாவுலல்லாம் சென்ட்டு பாட்டிலத் தவிர வேற ஒண்ணுமே விக்காதா? வாரவன் ஒருத்தன் விடாம அதத்தான் கொண்டு வாரான். ‘‘எல,  அங்கனல்லாம் கஞ்சிக்கு பதில் இந்த சென்ட்டத்தான் காச்சி குடிக்காங்களா?’’ன்னு நான் ஒருத்தன்கிட்ட கேட்டேபுட்டேன். அவன் சிங்கப்பூர் செருப்பைக் கழட்டிக்கிட்டுத் தொரத்தினாலும் எனக்கு அந்த  சந்தேகம் போகவே இல்லண்ணே.

எங்க ஊருல ஒரு தடவை நாங்க இளைஞர் சங்கத்துக்காக உண்டியல் குலுக்கிட்டிருந்த நேரம். ஒரு அண்ணன் அப்பதான் மஸ்கட்ல இருந்து வந்திருந்தாரு. நல்ல சில்லறை தேறும்னு அவர்ட்டயும்  போய் குலுக்கினோம். சும்மா பண்ணையாரு மாதிரி கம்பீரமா ஒரு பார்வையப் பாத்தாரு. உள்ள இருந்து பணப்பைய எடுத்துட்டு வரச் சொல்லி,



அதுல இருந்து முழுசா ஒரு பத்து ரூவா நோட்டு எடுத்தாருண்ணே. நிஜமாவே அப்ப அது பெரிய துட்டு. ஊருல உண்டியல் என்ன... ஒரு டிரம்மையே கொண்டு போயி குலுக்கினாலும் அதிகபட்சமே அஞ்சு ரூவாதான் விழும். அத்தனை பேத்துக்கும் அவ்வளவுதான் ஐவேஜு. ஆனா, நம்ம அண்ணன்

 பத்து ரூவாயோட ஒத்த ரூவாவையும் சேர்த்து போட்டாருண்ணே. ‘அதென்னவோ தெரியல... நம்ம நாட்டைத் தாண்டிட்டாலே, மனுசன் மனசு பெருசாயிருது’ன்னு வாயாரப் புகழ்ந்துகிட்டே நாங்க  வேலையப் பார்த்தோம். பந்தல், சேர்னு மொத்தக் காசையும் செலவு பண்ணி ஒரு மீட்டிங் போட்டு முடிச்சிட்டு நிக்கிறோம். அந்த பதினோரு ரூவா அண்ணன் கையக் கட்டிக்கிட்டு நிக்காரு.

‘‘தம்பி... அன்னைக்கு கொஞ்சம் நெதானம் தவறி அவ்வளவு பெரிய அமவுன்டைப் போட்டுட்டேன். நீங்க ஏதாச்சும் மிச்சம் கிச்சம் வச்சிருந்தீங்கன்னா, அண்ணனுக்கு ஒரு அஞ்சு ரூவாயத் திருப்பிக்  குடுத்துருங்க. ரெண்டு கட்டு பீடிக்கு ஆவும்’’ங்காரு.

ரொம்ப நாளா இந்த விசயத்தை நான் கிண்டலாத்தான் சொல்லிக்கிட்டிருந்தேன்ணே... ஆனா, இப்ப ‘குட்டிச் சுட்டீஸ்’ ஹிட்டான பிறகு எனக்கும் வெளிநாடுகளுக்குப் போய் வர்ற வாய்ப்பு கிடைச்சுது.  அப்படிப் போகும்போது ஒரு நாள் துபாய் ஏர்போர்ட்ல 7 மணி நேரம் காத்துக் கெடக்க வேண்டிய நெலம. அங்கன பாக்குற தமிழ் முகமெல்லாம் ‘‘ஏய்... அண்ணாச்சி... அண்ணாச்சி’’ன்னு வந்து  சுத்தி உக்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க. யப்பா... என்னா கஷ்டம்ணே அவங்களுக்கு! ஒவ்வொருத்தனுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு கதை. ஒருத்தன் சொல்றான்... ‘‘எங்க அப்பா எறந்துட்டாரு  அண்ணாச்சி... ஆனா, இங்க வேலை பாக்குற இடத்துல என் பாஸ்போர்ட்டை வாங்கி வச்சிக்கிட்டு தரமாட்டேன்னுட்டாங்க. யார் யாரையோ புடிச்சி தாஜா பண்ணி இப்பத்தான் லீவு வாங்கிட்டுக்  கிளம்புறேன். அப்பா முகம் பாக்க முடியல... மூணாம் நாள் விசேசத்துக்குத்தான் போக முடியும் போல’’ங்கறான் அவன். கண்ணு கலங்கிருச்சு எனக்கு.

என்னோட ரொம்ப நாள் டவுட்டு இருக்கே... சென்ட்டு பாட்டில் ஏன் வாங்கறாங்கன்னு! அதுக்கும் ஒருத்தன் விளக்கம் சொன்னான். ‘‘அதாவது அண்ணாச்சி... இங்க வந்து சம்பாதிச்சி ஊருக்குள்ள ந £லு சென்டு எடத்த வாங்கி வீடு கட்டிரணும்னுதான் எல்லாரும் கௌம்பி வாரான். ஆனா, இங்கயும் அங்கயும் விக்கிற வெலவாசியில கடனக் கட்டுறதே கஷ்டமா இருக்கு. இதுக்கு மத்தியில ஊருக்குப்  போகையில பையப் பையப் பாக்குற பைத்தியக்காரப் பக்கிகளுக்கு எதையாவது கொண்டு போவணுமே... நாலு சென்டு எடத்த வாங்கலன்னா என்ன, இந்த சென்ட்டை வாங்கி திருப்திப்பட்டுக்குவே £ம்னுதான் வாங்கறோம்...’’

இதக் கேட்டப் பெறவு நான் முடிவெடுத்துட்டேன்ணே... ‘ஃபாரீன் ரிட்டர்ன்’னு சொல்லிக்கிட்டு இங்க எவ்வளவு பந்தா பண்ணினாலும் பண்ணிக்கட்டும்னு விட்டுரணும். ஏன்னா, அங்க அவங்க படுற  பாடு சொல்லி மாளாது. இங்கனயாச்சும் அவங்க மரியாதையா சந்தோசமா மிடுக்கா சலம்பட்டுமே... இப்ப என்ன கெட்டுப் போச்சுங்கறேன்?
(இன்னும் சொல்றேன்...)

தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்