மாத்தி யோசி




நடத்தி வந்த ஓட்டல் பெரும் நஷ்டத்தில் போவது தெரிந்து, அதை யார் தலையிலாவது கட்டிவிட முடிவு செய்தார் ராஜசேகர். அந்த நேரம் அவர் கண்ணில் பட்டான், அவரது நெருங்கிய நண்பர்  கேசவனின் மகன் ராம்குமார். கேட்டரிங் கோர்ஸ் படித்துவிட்டு அவன் வேலைக்கு அலைந்து கொண்டிருந்தான்.

ராஜசேகர் அவனைக் கூப்பிட்டு ஆசை காட்டவும், அங்கே இங்கே பணத்தைப் புரட்டி ஓட்டலை தனதாக்கிக் கொண்டான் ராம்குமார். நஷ்டத்தில் இயங்கிய அந்த ஓட்டலில், ஒரு சில மாதங்களில்  ஜேஜே என்று வியாபாரம். அதைக் கேள்விப்பட்டு ஓட்டலுக்கு வந்தார் ராஜசேகர். 

‘‘ஏண்டா, நான் ஈ ஓட்டிட்டிருந்த ஓட்டல்ல எப்படிடா இப்படி கூட்டம்?’’ - பதில் சொல்லமுடியாத அளவுக்கு பிஸியாக இருந்த ராம்குமாரிடம் கேட்டார்.
‘‘அங்கிள், இந்த ஏரியாவுல மலையாளிங்க அதிகமா இருக்கறாங்க. அவங்க ஊர் உணவு வகைகள் இந்தப் பக்கம் எந்த ஓட்டல்லயும் கிடையாது. அதைத் தெரிஞ்சுக்கிட்ட நான் புட்டு, கடலைக்  குழம்பு, ஆப்பம், முட்டைக்கறின்னு அவங்க சாப்பிடுற அயிட்டங்களை போட்டுத் தாக்கினேன். வியாபாரம் பிச்சுக்கிச்சு. ஜனங்க தேவை அறிஞ்சு வியாபாரம் செஞ்சா கண்டிப்பா வெற்றிதான்!’’ என்ற £ன் ராம்குமார். திறமை இருப்பவன் தலையில் எதைக் கட்டினாலும் அதை கிரீடமாக்கிக் கொள்வான் எனத் தெரிந்தது ராஜசேகருக்கு.       

வி.சகிதா முருகன்