சாயி ஷீரடி பாபாவின் புனித சரிதம்



பொறு; உன்னுடைய கவலைகளைத் தூக்கி எறி. உன் துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன!
- பாபா மொழி

பீமாபாய் மனப்பூர்வமாக சந்திராவிற்கு சேவை செய்தாள். அவளை எல்லோரும் போற்றினார்கள். ஒரு மாதம் கழித்து, சந்திராவிற்கு மரணம் சம்பவித்தது. அவள் மனநிறைவுடன் உயிரை விட்டாள்.  மரணத் தறுவாயில் பீமாபாயைப் பார்த்து, ''அக்கா! நீ எனக்கு நிறைய சேவை செய்தாய்!’’ என்றாள்.


‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை!’’

‘‘அக்கா... பாபாவுக்கு என் கடைசி வணக்கத்தைச் சொல்லி விடு! எங்கோ அனாதைப் பிணமாக, அடிபட்ட நாய் போல அவதிப்பட்டு, இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவதற்குக்கூட ஆளில்லாமல் ச £வேனோ என்று பயந்திருந்தேன். நல்லவேளை, பாபா எனக்கு எல்லாம் கொடுத்தார். உன்னைப் போல தாயாக, சகோதரியாக, தோழியாக சேவை செய்யக் கிடைத்தது புண்ணியம். நீ எனக்கு  நிறைய உபகாரம் செய்தாய். நான் போகிறேன் அக்கா....’’ என்று கூப்பிய கை, உயிர் போனதும் கீழே விழுந்தது.
அந்த நேரத்தில் மசூதியின் சுவரில் சாய்ந்து நின்றிருந்த பாபா, வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 
சந்திராவின் மரணமும் அர்த்தமுள்ளதாக இருந்தது!

பாபா மசூதியில் தூங்கும்போது அவருடன் தாத்யா கோதே பாடீலும் மகல்சாபதியும் தூங்குவார்கள். பாபா எப்போதும் நகைச்சுவையாகப் பேசும் சுபாவம் உள்ளவர். எனவே தூங்கும் வேளையில்கூட  சிரித்துக் கொண்டிருப்பார்.
இரவு நேரத்தில் ஒரு பக்கம் துனி எரிந்துகொண்டிருக்கும். அருகில் மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த மூவர் மட்டும்தான் மசூதியில். பாபாவிற்கு உடனே தூக்கம் வராது. அப்படிப்பட்ட நேரங் களில், கூட இருப்பவர்களிடம் வேடிக்கைக் கதைகளையும் தத்துவ, பக்திக் கதைகளையும் கூறுவார். எப்பொழுது தூங்குவார், தூங்குவாரா இல்லையா என்பதே ரகசியமாக இருந்தது. காரணம், தூக் கத்தின் நடுவே மகல்சாபதியும் தாத்யாவும் எழுந்து பார்த்தால், சாயி விழித்திருப்பார்.

பாபா விழித்திருந்தால் மகல்சாபதி அதன்பின் தூங்க மாட்டார். ஆனால் தாத்யா அப்படியல்ல... பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிக் குறட்டை விடுவான்.
‘‘மகல்சாபதி, தாத்யாவின் உடம்பில் இருக்கும் புலி விழித்துக்கொண்டு கர்ஜனை செய்கிறது, பார்த்தாயா? நிறைய சாப்பிட்டு விட்டு, இங்கே வந்து குறட்டை விடுகிறான் பார். வா, அவனை எழுப் புவோம்’’ என்று பாபா சொல்ல, இருவரும் சேர்ந்து தாத்யாவைத் தூக்கி, தலைகீழாக்கி, மறுபடி படுக்க வைத்துத் தலையையும் முதுகையும் போட்டு மிதிப்பார்கள். இந்த கலாட்டாவினால் நல்ல தூ க்கத்திலிருந்து எழுந்த தாத்யா, பெரிதாகக் கத்துவான். இதைக் கண்டு மகல்சாபதியும் பாபாவும் விழுந்து புரண்டு சிரிப்பார்கள். அவர்களுடைய சிரிப்பலை எல்லா இடத்திலும் எதிரொலிக்கும்!
தூக்கம் கலைந்ததும் பாபாவின் உடலில் ஏறிப் பாய்ந்து, அவர் காலைப் பிடித்து இழுப்பான் தாத்யா. மகல்சாபதி உடனே பாபாவின் உதவிக்கு வருவார். தாத்யா திரும்பி, ஆக்ரோஷத்துடன் மகல்சா பதியின் குடுமியைப் பிடித்து இழுப்பான்.

‘‘ஐயோ, செத்தேன். தாத்யா, விடு என் குடுமியை. பாபா என்னைக் காப்பாற்றுங்கள்’’ என்று மகல்சாபதி கதறுவார்.
‘‘இப்போ எப்படி இருக்கிறது? நன்றாகத் தூங்கக்கூட விடமாட்டேன் என்கிறீர்கள் நீங்கள் இருவரும். குடுமியைப் பிச்சு எறிகிறேன் பார்’’ என்று தாத்யா கத்துவான்.
அதற்குள் பாபா அவனைக் கட்டித் தழுவி இழுத்து, இடையில் விரல் நுழைத்து கிச்சுகிச்சு மூட்டு வார்!

தாத்யா எல்லாவற்றையும் பொறுப்பான். ஆனால், கிச்சுகிச்சு மூட்டுவதை மட்டும் பொறுத்துக்கொள்ள மாட்டான். இதனால் அவன் உடலை அஷ்ட கோணலாக்கி, விழுந்து விழுந்து சிரிப்பான். அச்சம யத்தில் அவன் பிடியிலிருந்து குடுமி நழுவும். மகல்சாபதியும் சேர்ந்து, தாத்யாவை கிச்சுகிச்சு மூட்டுவார். தாத்யா பாம்பு போல நெளிந்தபடி சிரிப்பான். இந்தக் கூத்து, சில சமயம் நடுநிசி வரை தெ £டரும். பிறகு அமைதி திரும்பியவுடன், தாத்யா பழையபடி படுத்து விடுவான். அடுத்த வினாடி, குறட்டை ஒலி கேட்கும். மகல்சாபதியும் தூங்கிவிடுவார்.
ஆனால் பாபா இருளைப் பார்த்தபடி, மனிதர்களின் வாழ்க்கையில் உண்டாகும் இருட்டைப் போக்க என்ன செய்யலாம் என்கிற யோசனையில் மூழ்கியிருப்பார்! சில சமயம் காணாமலும் போய்
விடுவார்!

இச்சமயங்களில், அவர் எங்கு போகிறார், பிறகு எப்போது திரும்புவார் என்று தெரியாது. இது யாருக்கும் தெரியாத பரம ரகசியம்!
அன்று பௌர்ணமி. வழக்கம் போல சபை இன்னும் நிறையவில்லை. மகல்சாபதி, தாத்யா, காசிராம், அப்பா வகையறாக்கள் அங்கு குழுமியிருந்தார்கள். ரம்ஜானும் குளித்து, சுத்தமான வெள்ளை  நிற ஆடைகளை அணிந்து வந்திருந்தான். ஆடை முழுக்க அத்தர் வாசனை தூக்கிற்று. தாடியில் மருதாணி தடவி, அதைச் சிவப்பாக்கியிருந்தான். தலையில் எண்ணெய் தடவி, சுருட்டை முடியை  அழுந்த வாரி

யிருந்தான். கண் இமைகளுக்குக் கீழே மை தடவியிருந்தான். உள்ளங்கைகளிலும் மருதாணி தடவி யிருந்தான். அவனைப் பார்த்தார் பாபா. ‘‘தாத்யா, ரம்ஜானைப் பார், எப்படி வந்திருக்கிறான் என்று? ரம்ஜான், இன்று என்ன விசேஷம்?’’ என சிரித்துக்கொண்டே கேட்டார். பாபாவின் பரிகாசத்தினால் ரம்ஜான் வெட்கப்பட்டான். ‘‘ஒன்றுமில்லை பாபா, இன்று பெண்ணின் கல்யாணத்திற்கு நிச்சயம் செய்யணும். அதற்கு உங்களுடைய ஆசீர்வாதம் பெற வந்திருக்கிறேன்!’’ ‘‘ரொம்ப சந்தோஷம். பெண்ணிற்கு என் ஆசிகள். அல்லா, எல்லா வித நலன்களும் பெற அருளுவார். கவலைப்படாதே!’’

‘‘சரி...’’
பாபா ஒரேயடியாகச் சிரித்தார்.
‘‘இவ்வளவு சிரிப்பதற்கு என்னவாயிற்று?’’ என தாத்யா கேட்டான்.
‘‘நான் உங்களுடைய மதத்தைப் பற்றிக் கவலைப்பட்டேன்!’’
‘‘அப்படியென்றால்? அதில் அப்படியென்ன சிரிப்பதற்கு இருக்கு?’’

‘‘சிரிக்காமல் வேறு எப்படி இருப்பது? இந்த மகல்சாபதி ஒரு இந்து; ரம்ஜான் ஒரு முஸ்லிம். இரண்டு பேரையும் பார்... எப்படி அருகருகில் ஒட்டினாற்போல் உட்கார்ந்திருக்கிறார்கள்! இந்த இருவ ரையும் என்றாவது ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?’’
அதற்குள் ஷாமா வந்தான். அங்கு நடக்கும் விவாதத்தைப் புரிந்துகொண்டான். உற்சாகத்துடன் அவனும் கலந்துகொண்டான்.
‘‘ஷாமா, நீ ஒரு ஆசிரியன். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுச் சொல் பார்க்கலாம்!’’

ஷாமா கொஞ்சம் யோசனை செய்துவிட்டு சொன்னான்... ‘‘பாபா, பல விஷயங்களில் இவர்கள் முரண்பட்டவர்கள், விரோதிகள். இப்படி அருகருகில் உட்கார்ந்திருப்பது வேடிக்கைதான்!’’
‘‘கடைசியில் என்ன சொல்ல வருகிறாய்?’’ - காசிராம் உடனே கேட்டான். விவாதத்தை இழுத்தடிப்பது அவனுக்குப் பிடிக்காது.
‘‘சொல்கிறேன் காசிராம்! அவசரப்படாதே. இது மதப்பிரச்னை. திருடனைச் சுடுவது போல் அல்ல!’’ என்றான் ஷாமா. இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
‘‘ரொம்பவும் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளாதே... சீக்கிரம் சொல்!’’ - ரோஷத்துடன் காசிராம் சொன்னான்.

‘‘சொல்கிறேன். பாபா, இந்துக்கள் தலையில் முடி வைத்திருக்கிறார்கள். அதாவது குடுமி. முஸ்லிம்கள் முகத்தின் கீழே முடியை வளர்க்கிறார்கள். அதாவது தாடி! இந்து சூரியனை பூஜிக்கிறான். முஸ் லிம் சந்திரனை வைத்து தொழுகிறான். இந்து கிழக்கு நோக்கிப் பிரார்த்தனை செய்கிறான். முஸ்லிம் மேற்கில். இந்து மனதளவில் பிரார்த்திக்கிறான்... கடவுள் பெயரை உச்சரிக்கிறான். முஸ்லிம்  வெற்று வெளியை நோக்கி பிரார்த்தனை செய்கிறான். சிவப்பு நிறத்தை இந்து ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக பச்சை நிறத்தை முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். பாபா, இப்படி நிறைய  வித்தியாசங்கள்...’’ என்றான் ஷாமா.

‘‘அடேய் ஷாமா, ரம்ஜானும் மகல்சாபதியும் மற்றும் நீங்கள் எல்லோரும் இப்பொழுது சிநேகத்துடன் இருக்கவில்லையா? இது மசூதி, இதை நான் துவாரகமாயி ஆக்கவில்லையா? துனியைப் பற்ற  வைக்கவில்லையா? நீங்கள் பார்க்கும் வேற்றுமையெல்லாம் வெளித்தோற்றம்தான். உள்ளே இல்லை. இப்பொழுது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று கண்டுபிடியுங்கள். யார் அதைச் செ £ல்லப் போகிறீர்கள்?’’

‘‘நான் சொல்கிறேன்’’ என்றான் காசிராம்.
எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.
‘‘இரண்டு பேருக்கும் பசி எடுக்கிறது... தூக்கம் வருகிறது. சரீரத்தின் எல்லா குணங்களும், எல்லோரையும் போலத்தான் இருக்கின்றன. சிவனாகட்டும்,
அல்லாவாகட்டும்... எல்லோருக்கும் பக்தி மேல் ஈர்ப்பு இருக்கிறது. இறைவன் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. இரண்டு மதங்களிலும் உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன!’’
‘‘அடடா... காசி... மிக நன்றாகச் சொன்னாய்!’’ - அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தார் பாபா.

‘‘பாபா, காசி ஒரு விஷயத்தைச் சொல்லவில்லை... மறந்துவிட்டான் போலிருக்கிறது’’ என்றான் ஷாமா.
‘‘என்னப்பா அது மாஸ்டர்?’’ - காசிராம் வினவினான். ‘‘சொல்கிறேன். இந்து அல்லது முஸ்லிம், யாராக இருந்தாலும், திருடன் கொள்ளையடித்தால் கோபம் வருகிறது. மேலும், கத்தி கிடைத்தால், திருடனை வெட்டுகிறார்கள் இருவரும்... ஹா... ஹா... ஹா...’’

இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். ‘‘இப்போது பார்... ஒரு இந்துவை இன்னொரு இந்து எப்படி அடிக்கிறார் என்பதை உனக்குக் காட்டுகிறேன்’’ என்ற காசிராம், ஷாமாவை அடிக்கப் பாய்ந்த ன். அவன் எழுந்து கீழே ஓடினான். இருவரும் ஓடி விளையாடுவதைப் பார்த்து, பாபா உட்பட எல்லோரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

காசிராம் தன்னைப் பிடித்து விடுவான் என்று தெரிந்ததும், ஷாமா தாவி, மேலேறி, பாபாவின் பின்னால் போய் உட்கார்ந்தான். ஓடியதால், பெருமூச்சு விட்டபடியும் கோபத்தால் சிவந்த மூக்குடனும் காசிராம் மேலேறி வந்து,

 கையை நீட்டி, ‘‘பாபா, அவனை முன்னால் வரச்சொல்லுங்கள். அவனை இன்று ஒரு கை பார்த்துவிடுகிறேன்!’’ என்றான். ‘‘காசீ, பொறுமையாக இரு. முகத்தைப் பார், எப்படி சிவந்திருக்கிறது என்று!’’ - பாபா சிரித்துக்கொண்டே சொன்னார்.‘‘சிவப்புக் குரங்காட்டமா?’’ - தாத்யா இந்தக் கேளிக்கையில் பங்கெடுத்துக்கொண்டவனாகக் கேட்டான்.

மசூதியில் அன்று நிறைய பேர் இருந்தார்கள். அவர்களின் சிரிப்பு எல்லா இடத்திலும் கேட்டது. பாபா அன்று பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்.  சிரித்துச் சிரித்து அவருக்குப் புரை ஏறிற்று. அதனால் இருமினார். உட்கார்ந்தும் எழுந்தும் குனிந்தும் இருமினார். கண்ணிலிருந்து நீர் வழிந்தது. முகம் சிவந்தது. இருந்தும் இருமல் நிற்கவில்லை.

‘‘யாராவது சீக்கிரம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!’’ - மகல்சாபதி கவலையுடன் கத்தினார். அவர் பாபாவைப் பிடித்துக்கொண்டு, மார்பில் தடவிக்கொடுத்தார். யாரோ கொண்டுவந்த தண்ணீரை ப £பா குடித்தார். இருமல் சற்றுக் குறைந்தது. ஆனால் அவருடைய மார்பு மேலும் கீழும் துடித்தது. சுவாசம் இழுத்தது.

‘‘பாபா, மூச்சு வாங்குகிறதா?’’ - மகல்சாபதி உறுதியுடன் கேட்டார்.
‘‘ஆமாம், மகல்சாபதி’’ பாபா மூச்சு இழுத்துக்கொண்டே, சிரமத்துடன் சொன்னார். ‘‘அநேக பக்தர்களின் இன்னல்களை என் சரீரம் ஏற்றுக்கொள்கிறதல்லவா? அவர்களால்தான் எவ்வளவு பொறுத்துக் கொள்ள முடியுமப்பா? மூச்சின் தன்மையே இதுதான். மார்பு துடிக்கிறது. இந்த தேகம் எவ்வளவு காலம்தான் தாக்குப் பிடிக்கும்?’’

பாபாவின் பேச்சைக் கேட்டு, எல்லோரும் கலவரமடைந்தார்கள். பயத்தால் நடுக்கமுற்றார்கள். பிறரின் நோயைக் குணப்படுத்தும் பாபா, தானே நோயால் கஷ்டப்படுவதை யாராலும் பார்க்க முடிய வில்லை.

‘‘நண்பர்களே! மக்களின் நோயை நான் குணப்படுத்துகிறேன். அவர்கள் நோயின் உபாதையால் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, நான் ஏற்றுக்கொண்டு, அந்த அவஸ்தையால் துடிக்கிறேன். இது இப் படித்தான் நடந்துவரும்!’’
‘‘பாபா’’ - மகல்சாபதி பேசலானார். ‘‘இது எந்த மாதிரி சிகிச்சை? எனக்குப் புரியவில்லை. ஒரு கணத்திற்கு முன்பு நீங்கள் விடாமல் சிரித்துக்கொண்டிருந்தீர்கள். இப்போது உடல் வேதனையால்  துடிக்கிறீர்கள். நீங்கள் உலகத்தைக் காப்பவர். நீங்கள் எங்களைக் கரையேற்றுபவர். நீங்கள் இப்படிப் பேசினால் எப்படி? உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை. சும்மா, எங்களுக்கு பயம் காட்டுவதற்காக  இப்படிச் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்!’’

‘‘இல்லை மகல்சாபதி! மாறாக உங்களை பயத்திலிருந்து விடுவிக்க வந்திருக்கிறேன். சரி, என் வேலை முடியவில்லை. இன்னும் நிறைய காலம் உயிரோடு இருக்கணும். எல்லா மனித குலத்திற்கும்  பயிற்சி கொடுக்கணும். சரியான பாதையில் திருப்பிவிடணும். இதற்குள் ஆயாசப்படக் கூடாது. சரீரத்திற்கு ஓய்வு எடுப்பதெல்லாம் கூடாது. நோய் வந்தால்கூட நடக்காது’’ என்றார் பாபா சிரித்துக்கெண்டே.

சற்று முன் சூழ்ந்திருந்த கவலை எனும் மேகம், பாபாவின் விளக்கத்தால் மறைந்தது. மறுபடியும் உற்சாகம் பரவியது. பாபா என்ன சொல்லப்போகிறார் என்பதை உன்னிப்பாகக் கேட்க எல்லோரும்  தயாரானார்கள். ‘‘மகல்சாபதி, அதற்காக நான் ஒருத்தருக்கு உயிர் கொடுக்கணும்!’’ என்றார் பாபா.அந்த அதிர்ச்சி சம்பவம்...

(தொடரும்...)

வினோத் கெய்க்வாட்

தமிழில்: பி.ஆர்.ராஜாராம்