கோப்பை நிழல்



எனக்கும் அதற்குமான உறவு
நிறைவேறும் காமத்தைப் போலிருந்தது.
இருபத்தைந்து வயதில் இணக்கமாயிருந்து
துக்கம் களிப்பு ஏக்கம் தனிமை திருவிழாவென
உறவாடிப் பரவசம் பெற்றபோதிலும்
நானறியாது வளர்ந்துகொண்டே
இருந்தது அதன் விஷம்.

சந்தோஷமற்ற குழந்தைப் பருவத்தில்
தாய்ப்பாலாகிய அதன் ரசாயனம்,
பருகிப் பருகிப் பழகிக் கிளைத்திருந்தது.

யாவும் அவற்றின் தந்திரமென உணரும்
வயதொன்றில்
எஞ்சியிருக்கும்
அமைதியின் மீதான விருப்பத்தின்பால்
தொடர்பைத் துண்டித்து வெளியேறும்
மூர்க்கமும் எனக்கு வந்தது



விட்டு வைக்கப்பட்ட அவயவங்களும்
ஆழ்மனதின் ஒப்புதலும்
உறவுமுறிவுக்கு உந்துதல் எனினும்
குற்றவுணர்வும் பயமும்
பின்தொடரும் உபாதையும்
இன்னபிற
பாதுகாப்பற்ற வெறியூட்டத்தக்க
செயல்பாடுகளும் இதன் அடக்கம்.

கௌரவமாக வழி நடத்தத் தவறிய
அதனிடமிருந்து
விடைபெற்ற பின்பும்
என் அருகிலேயே அது இருக்கிறது
எனக்கும் தெரியாமலில்லை.

சீனு ராமசாமி