நிழல்களோடு பேசுவோம்



''மேடம், எனக்கு நீங்க என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க. ஆனா அவர்கூட என்னை வாழச் சொல்லாதீங்க, மேடம்’’ - தொலைக்காட்சியில் குடும்பப் பஞ்சாயத்து பண்ணும் அந்தப் பிரபல நிகழ்ச்சியில், நிகழ்ச்சி நடத்தும் பெண்மணியைப் பார்த்து ஒரு பெண் கதறிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி இறுக்கமாக முகத்தை வைத்தபடி, ‘‘நான் சொல்றதை கேட்கப் போறியா இல்லையா?’’ என்று மிரட்டுகிறார்.

எனக்கு மிகவும் குழப்பமாகிவிட்டது. ‘அந்தப் பெண்மணி ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர்தானே... அவரிடம் ஏன் தனக்கு தண்டனை கொடுங்கள் என ஒரு பெண் மன்றாடுகிறாள்’ என்று எனக்குப் புரியவில்லை. நிகழ்ச்சியை நடத்தும் அந்தப் பெண்மணி, ‘யாருக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் எனக்கு இல்லை’ எனச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவரோ, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிவிட்டு பேனாமுனையை உடைக்கத் தயாராக இருக்கும் நீதிபதியின் தோரணையில் அமர்ந்திருந்தார்.

அடுத்த நாளும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஒரு ஆள் தன் மனைவியை தள்ளி வைப்பதற்காக, ‘‘எனக்கு பராசக்தியின் அருள் இருக்கிறது’’ என்று நாடகமாடிக் கொண்டிருந்தார். தன் மனைவி ஒரு சாத்தான், தீயசக்தி என்றும், அவளோடு வாழ முடியாது என்றும் கதை விட்டுக்கொண்டிருந்தார். அந்த மனைவியோ, ‘‘சாப்பாட்டுக்குக்கூட இந்தப் பாவி காசு தருவதில்லை’’ என அழுதுகொண்டிருந்தாள். திடீரென அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் தெய்வீக அவதாரம் எடுத்தார். ‘‘பராசக்தி எனக்குள்ளும் இருக்கிறாள். நான் பராசக்தியாக சொல்கிறேன்...’’ என்று ஆரம்பித்தார். நான் பயந்து போய் சேனலை மாற்றிவிட்டேன்.

ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. மூன்றாவது நாளும் அந்த நிகழ்ச்சியை வைத்தேன். ஒரு மத்திய வயது பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் நட்பு. அந்தப் பெண்ணின் வயது வந்த மகளுக்கும் அதே இளைஞனுக்கும் இடையே வேறு நட்பு. இளைஞனை பெற்றோருடன் போகச் சொல்லி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி வற்புறுத்துகிறார். இளைஞன், ‘‘போக மாட்டேன்...’’ என்கிறான். நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி, ‘‘உன்னை இப்ப அடிச்சுருவேன்’’ என்று கையை ஓங்குகிறார். அங்கே பிரச்னை முற்றுகிறது. அப்போது அந்தப் பையனை அம்மாவுடன் வந்த அந்த இளம்பெண், பளார் பளார் என அறைகிறாள். இதையெல்லாம் அருகிலிருந்து இன்னொரு மகளான சிறுமி கண்ணீருடன்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

நான் பதற்றத்துடன் வழக்கம்போல சேனலை மாற்றினேன். இன்னொரு சேனலில் ஒரு ‘புகழ்பெற்ற’ சாமியார் இதேபோன்ற குடும்ப கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். கணவன் - மனைவி சண்டை. மனைவி திடீரென கணவனை அடிக்க ஆரம்பிக்கிறார். சாமியார் அதை வேடிக்கை பார்க்கிறார். பிறகு, ‘‘இப்போது உங்க கோபம் தணிந்ததா?’’ என சிரித்துக்கொண்டே கேட்கிறார்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? குரங்காட்டிகள் குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல, பாம்பாட்டிகள் பாம்பை வைத்து வித்தை காட்டுவதுபோல, மனிதர்கள் மனிதர்களை வைத்து வித்தை காட்டும் இந்த அவலம் எங்கிருந்து தொடங்கியது?தொலைக்காட்சிதான் முதன்மையான வெகுஜன ஊடகம் என்பதில் சந்தேகம் இல்லை. இது நுகரப்படும் அளவு எந்த ஊடகமும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை. மக்களால் அதிகம் பார்க்கப்படுவது மட்டுமல்ல, மக்கள் அதிகம் நேரடியாகப் பங்கேற்கும் ஊடகமாகவும் தொலைக்காட்சி மாறியது. ஒரு பத்திரிகையில் ஒரு முறைகூட புகைப்படம் வர சாத்தியமற்றவர்கள்கூட, தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாகத் தோன்றினார்கள். முதலில் பேச்சரங்கங்கள் பிரபலமாயின. அவற்றில் ஏதாவது ஒரு பொதுக் கருத்தை முன்வைத்து மக்கள் வாதங்களில் ஈடுபட்டார்கள்.

பிறகு ரியாலிட்டி ஷோக்கள். பாடல், நடனம் சார்ந்த இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுக்கத் தொடங்கினர். இதுவரை தொழில்முறை பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த வாய்ப்புகள், சாதாரண மக்கள் பங்கேற்கக் கூடியதாக மாறியது. இது ஒருவிதத்தில் ஜனநாயகபூர்வமான செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மக்களுடைய பேச்சுத் திறமை, கலை ஆர்வம் இவற்றை மட்டும் மையமாகக் கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சிகள், மக்களின் அன்றாடப் பிரச்னைகளை, கலாசாரப் பிரச்னைகளைப் பேச ஆரம்பித்தன. மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே பேசும் இந்த நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதும், குடும்பங்களின் அந்தரங்க விவகாரங்களில் கை வைக்க சிலர் முடிவு செய்தார்கள். அதன் விளைவுதான் இவை...

மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். அவற்றைக் கேட்பதற்கு செவிகள் இல்லை. அவர்களை ஆற்றுப் படுத்த ஒரு கரம் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்க எந்த தேவதையும் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துபவர்கள், இப்படி பாதிக்கப்பட்டவர்களை மோப்பம் பிடிக்கிறார்கள். அவர்களை தந்திரமாக அழைத்து வருகிறார்கள். நேருக்கு நேர் உட்கார வைக்கப்பட்டு, அவர்களின் துக்கமும் ஆத்திரமும் பழிவாங்கும் உணர்ச்சியும் தூண்டி விடப்படுகிறது. ஒருவரையொருவர் ஆவேசமாக அம்மணமாக்குகிறார்கள். அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் மூலம் தங்களுக்கு நீதியும் தீர்வும் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். ‘‘எனக்கு தண்டனை கொடுங்கள்’’ என்று அவரை நோக்கிக் கெஞ்சும் அளவுக்குப் போகிறார்கள். ஒரு போலி நீதிமன்றத்தில் ஒரு போலி விசாரணை நடக்கிறது. எந்த உளவியல் அறிவோ, சமூக அறிவோ இல்லாத நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொத்தாம்பொதுவான தீர்வுகளையும் அறிவுரைகளையும் அள்ளி வீசுகிறார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஏழைகள்; அதிகம் படிக்காதவர்கள்; தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள். இவர்களின் அந்தரங்கம், கேமரா வெளிச்சத்தின் முன் துகிலுரியப் படுகிறது. அவர்களுக்குத் தீராத சமூக அவமானங்களை தேடித் தரப் போகும் விஷயங்களை, லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பிறகு அவர்கள் சமூகத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகிவிடுகிறார்கள். சமீபத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கேள்விப்பட்டேன். இது பச்சையான நரவேட்டை.

கொடுமை என்னவென்றால், இதில் குழந்தைகளையும் சம்பந்தப்படுத்துவதுதான். கள்ளக்காதல் விவகாரங்கள் பஞ்சாயத்து செய்யப்படும் நிகழ்ச்சிகளில்கூட சம்பந்தப்பட்ட குடும்பங்களின் குழந்தைகள் அழுதுகொண்டே அருகில் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் மனநிலை பற்றியோ, எதிர்காலம் பற்றியோ, யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. ஒருபுறம் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் எத்தகைய குற்றங்களும் மூடி மறைக்கப்படுகின்றன. எளிய மனிதர்களின் அவலமான அந்தரங்கங்கள் அம்மணமாக்கப்படுகின்றன.

இந்த தொலைக்காட்சி விவாதங்களின் மற்றொரு வடிவம் 24 மணிநேர செய்தி சேனல்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள். அன்றாட அரசியல், சமூகப் பிரச்னைகளைப் பற்றி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கட்சி சாராதவர்களும் (அவர்கள் சமூக ஆர்வலர்கள் என்ற வினோதப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்) விவாதிக்கும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. அரசியல் இவ்வளவு வெளிப்படையாக விவாதிக்கப்படுவது வரலாற்றில் இதுதான் நமக்கு முதல் முறை. மக்கள் அவற்றை ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் வரவர சந்தைக்கடையாக மாறி வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்குப் பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சிகளை தாக்கவும் இந்த மேடையை உபயோகிக்கின்றனர். தனிநபர் தாக்குதல்களும் அவதூறுகளும் அதிகரித்து வருகின்றன. பொய்யான தகவல்கள், புள்ளிவிபரங்களைச் சொல்வதற்கு எந்தக் கூச்சமும் படுவதில்லை. இதன் இன்னொரு பெரிய ஆபத்து சமீபத்தில் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்ச்சியில் தொலைபேசியில் கருத்துத் தெரிவித்த ஒரு நபர், தமிழக முதல்வரையும் ஒரு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவையும் மிகவும் ஆபாசமாகத் திட்டினார். இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் இப்படி திடீரென தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளைத் தடுப்பது மிகவும் கடினம். அதற்காக நேரலையில் வாசகர்கள் பேசுவதைத் தடுப்பது என்பது ஒரு ஜனநாயகச் செயல்பாட்டை தடுப்பதாகும். வேறு என்னதான் செய்வது? தார்மீக நெறிகளையும் பண்பாட்டையும் சீரழிப்பதற்கு நமக்குத்தான் எத்தனை எத்தனை
வழிகள்!
(பேசலாம்...)

நெஞ்சில் நின்ற வரிகள்

சில பாடல்கள் அவற்றின் வரிகளாலும், இசையாலும், குரலாலும், நமது குருதியோட்டத்தில் கதகதப்பையும் துடிப்பையும் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு தகிக்கும் உணர்ச்சியை ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எப்போதும் ஏற்படுத்தியிருக்கிறது. மனிதனின் உணர்ச்சிகளையும் ஆசாபாசங்களையும் நன்மை, தீமையாகவோ கறுப்பு, வெள்ளையாகவோ பிரிக்க முடியுமா? அவையெல்லாம் சேர்ந்துதானே வேட்கையின் கனல் எழுகிறது...

கொஞ்சம் நிலவு
  கொஞ்சம் நெருப்பு
ஒன்றாகச் சேர்ந்தால்
  எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
  கொஞ்சம் அமுதம்
ஒன்றாகச் சேர்ந்தால்
   எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம்
   கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்ந்தால்
  எந்தன் நெஞ்சம்
வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் விளைந்த மாஜிக்குகளில் ஒன்று இந்தப் பாடல்.

சச்சின் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு பாரத ரத்னா வழங்கியிருப்பது பற்றி...
- ஜி.கோகுலகிருஷ்ணன்,
திருவாரூர்.
சர்ச்சைகள் இன்றி வாழ்ந்த சரித்திர நாயகனை, சச்சரவோடு அனுப்பி அவமதித்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் ஆற்றிய உரை குறித்து?
- அ.யாழினி பர்வதம்
சுதந்திர இந்தியாவின் பிரதமர் தன் நாட்டு தமிழர்களுக்குத் தர முடியாத நியாயத்தையும் நிம்மதியையும், நம்மை ஒரு காலத்தில் அடிமைப்படுத்திய தேசத்தின் தலைவர் தந்திருக்கிறார்.
மறைந்த எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பற்றி?
- மு.மதிவாணன், அரூர்.
தமிழில் வெகுஜன எழுத்தை திறமையாகக் கையாண்டவர். ரகசிய புன்னகையோடு ரசிகர்களைப் படிக்க வைத்தவர்.
முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டது பற்றி...
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

முதல் நாள் காமன்வெல்த்திற்கு எதிராக சட்டமன்ற தீர்மானம். அடுத்த நாள் சுவர் இடிப்பு. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்பதற்கு இதுதான் அர்த்தமா?
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
email: editor@kungumam.co.in