கவிதைக்காரர்கள் வீதி



முழுமையாகப்
போட்டு முடித்த
பிறகைவிட
குழந்தையின் கால் பட்டுக்
கலைந்த பிறகுதான்
கூடுதல் அழகு பெறுகின்றன
கோலங்கள்!
- சிவபாரதி, திருவாரூர்.

குழந்தையின் கைக்கு
எட்டாத உயரத்தில்
எல்லா பொருட்களையும்
எடுத்து வைத்தாயிற்று...
இனி என்ன செய்வது
இந்த வீட்டை?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

குழந்தைகளுக்கான
மாறுவேடப் போட்டியில்
காந்தி, ஔவையார்,
சிவபெருமான், ஸ்பைடர்மேன்,
பாரதியார், வள்ளுவர், பாரதமாதா
அத்தனை பேருக்கும் நடுவில்
அழுதபடி ஒரு குழந்தையும்!
- தெ.சு.கவுதமன், சென்னை-52.

ஊருக்குள் புகுந்த யானைகள்
உண்மையில்
காட்டுக்குள்தான்
நுழைகின்றன
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

உதிர்ந்த சிறகில்
ஒட்டியிருக்கிறது
பறவை தொலைத்த வானம்
- பெ.பாண்டியன்,
கீழசீவல்பட்டி.

வெட்டும்போது
மரிக்கும் மரம்
மறுபடியும்
உயிர்த்தெழுகிறது,
ஒரு குழந்தைக்கு
நடைவண்டியாகும்பொழுது!
- கு.வைரச்சந்திரன், திருச்சி.