+2 வேதியியல் சென்டம் வாங்க டிப்ஸ்



பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் என்றாலே ஒருவித கசப்புதான். காரணம் கனிம, இயற்பு, கரிம வேதியியல் என மூன்று பிரிவுகள், அதில் அதிக பாடங்கள், நிறைய சமன்பாடுகள், சேர்மங்களின் பெயர்கள் என ஞாபகத்தில் வைக்க வேண்டியவை இதில் ஏராளமாக இருக்கின்றன. இருந்தும் மற்ற பாடங்களை ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் இதில் சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடிதான் உள்ளது.

தெளிவாகத் திட்டமிட்டால் சென்டம் வாங்குவது சுலபம் என்பதே காரணம்! இதற்கான டிப்ஸ்களைத் தருகிறார் ராஜபாளையம் அருகிலுள்ள சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிசுந்தரபாரதி. வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர், ஒரு மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்களையும் எளிதாகப் பெறலாம் என்கிறார்.

* பெரும்பாலான மாணவர்களின் சென்டம் கனவைத் தகர்ப்பது ஒரு மார்க் கேள்விகள்தான். எப்படிப் படித்தால் இதில் முழு மதிப்பெண்களையும் பெறலாம் என்பதை ப்ளூ பிரிண்ட் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* ஒரு மதிப்பெண்ணில் 30 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 22 பாடங்கள் இருக்கின்றன. இதில் ‘மின் வேதியியல் -2’, ‘கரிம வேதியியல் மாற்றியம்’, ‘நடைமுறை வேதியியல்’ ஆகிய மூன்று பாடங்களிலிருந்து ஒரு மார்க் கேள்விகள் வராது. மீதியுள்ள 19 பாடங்களைத் தயார் செய்ய வேண்டும். இதில் புக் பேக்கில் 291 கேள்விகள் உள்ளன. இவற்றை முழுவதுமாகப் படித்தால் குறைந்தபட்சம் 18 முதல் 22 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். மீதி கேள்விகள் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்பார்கள்.  
* புத்தகத்தின் உள்ளேயிருந்து ‘வொர்க் அவுட்’ பண்ணக் கூடிய கணக்குகள் மற்றும் பயிற்சிக் கணக்குகள் மூன்று வரும். சில நேரங்களில் மூன்று மார்க் கணக்கு கேள்விகள் கூட ஒரு மதிப்பெண்ணில் கேட்டுவிடுவார்கள். இதனால் அனைத்துக் கணக்குகளையும் கவனமுடன் ஒருமுறை பார்த்துவிட்டால் போதுமானது.
* பெரும்பாலும் கனிம மற்றும் இயற்பு வேதியியலில் தவறு செய்யாமல் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடுவார்கள் மாணவர்கள். ஆனால், கரிம வேதியியல்... இதில் கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. கரிம வேதியியலில் ‘ஹைட்ராக்ஸி வழிப்பொருட்கள்’, ‘கார்பனைல் சேர்மங்கள்’, ‘கார்பாக்ஸிலிக் அமிலங்கள்’ ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி வருகிறது. ஈதர்கள் பாடத்தில் இரண்டு கேள்விகள். இவற்றில் பத்து மதிப்பெண் கேள்விகளும் வருவதால், இந்தப் பாடங்களை தெளிவாகப் படிக்க வேண்டும்.
* கரிம வேதியியலில் உள்ள கரிம ஹைட்ரஜன் சேர்மங்கள் பாடத்திலிருந்து மட்டும் 3 ஒரு மதிப்பெண் கேள்விகள் வரும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை புத்தகத்தின் உள்ளே இருந்துதான் கேட்பார்கள். இதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் இதில்தான் நிறைய மாணவர்கள் ஒரு மதிப்பெண்ணை தவறவிட்டுவிடுகிறார்கள். எனவே கவனம் தேவை.
* படிக்கும்போதே முக்கியமான கீ நோட்ஸ்களை அடிக்கோடிட்டு வைத்துப் படியுங்கள். அவை ஒரு மதிப்பெண் கேள்விகளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
3 மார்க் கேள்விகளுக்கான டிப்ஸ்:
* மூன்று மதிப்பெண் கேள்விகள் மொத்தம் 21. இதில் 15க்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா 7 கேள்விகள் கேட்கப்படும். 
* மொத்தமுள்ள 22 பாடங்களில் ‘எஃப் தொகுதி தனிமங்கள்’, ‘அணைவு, உயிரியல் அணைவுச் சேர்மங்கள்’, ‘மின் வேதியியல்-2’, ‘ஈதர்கள்’, ‘உயிர்வேதி மூலக்கூறுகள்’ ஆகிய 5 பாடப் பிரிவுகளிலிருந்து மூன்று மார்க் கேள்விகள் வராது. மீதி 17 பாடங்களைத் தயார் செய்ய வேண்டும்.
* கனிம மற்றும் இயற்பு வேதியியலை முழுவதுமாகப் படித்தால் 14 கேள்விகளுக்கு இதிலேயே விடையளித்துவிட முடியும். ஆனால் மூன்று கணக்கு கேள்விகள் வருகிறது. அதனை விடுத்து பார்த்தால் 11 கேள்விகளுக்கு விடையளிக்கலாம். கணக்கு கேள்விகள் கஷ்டமாக இருப்பின், மீதி 4 கேள்விகள் கரிம வேதியியலில் எழுதுவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தப் பகுதியில் வேறுபாடுகள் என்ன? பயன்கள் யாவை? சேர்மங்கள் பெயர்கள்? பெயர் வினைகள்? வேதிப் பண்புகள் யாவை? இப்படியான கேள்விகள் கேட்பார்கள். எல்லாப் பாடத்திலும் உள்ள இப்படியான கேள்விகளை தெளிவாகப் படித்துக் கொள்ள வேண்டும்.
* கணக்கு கேள்விகள் தெரிந்திருந்தால் தியரி எழுதுவதைத் தவிர்த்து இந்தக் கணக்குகளைச் செய்யலாம். ஏனெனில் நேரம் மிச்சமாகும். மார்க் எடுப்பதும் சுலபம். இதில் ஃபார்முலா, அப்ளை செய்தல், யூனிட் மற்றும் விடை என ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மூன்று மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. 
* பொதுவாக மூன்று மார்க் கேள்விகளுக்கு விடையளிக்கும்போது வரையறை, ஃபார்முலா, சமன்பாடுகள், சேர்மங்களின் பெயர்கள் ஆகியவற்றை தெளிவுடன் எழுத வேண்டியது அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மார்க் என்ற அளவில் மதிப்பெண் இடுவார்கள்.
* பழைய கேள்வித்தாள்களை ஒருமுறை புரட்டிப் பார்ப்பது நல்லது. அடிக்கடி கேட்கப்பட்ட மூன்று மதிப்பெண் கேள்விகளை இங்கே கொடுத்துள்ளோம். ஐந்து மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்களையும் எடுப்பது எப்படி? வரும் இதழில் பார்க்கலாம்...

சென்டம் ரகசியம்!

சென்ற வருடம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஒன்பது பேரில் ஒருவர்தான் நாமக்கல், கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.விஷ்ணுவர்தன். வேதியியலில் சென்டம் எடுத்த இவர், தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கிறார். வேதியியல் பாடத்தில் சென்டம் வாங்க இவர் கூறும் சிம்பிள் டிப்ஸ்:
‘‘வேதியியல் பாடத்தில் சென்டம் வாங்குவது கனவாக இருந்தால் அதற்கு 1, 3 மார்க் கேள்விகள் அனைத்துக்கும் சரியான விடையளிக்க வேண்டும். அப்படியென்றால், அவசியம் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படித்தே ஆகவேண்டும். அதேபோல், முக்கியமான பாயின்ட்ஸ், ஃபார்முலா, ஈக்வேஷன்ஸ் போன்றவற்றை தனியாக எழுதிப் பார்க்கவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி எழுதிப் பார்த்துவிடுவது நல்லது.

மூன்று மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட பகுதிகளை ஆசிரியர்களே சொல்வார்கள். அவற்றை அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பெரும்பாலும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் இருந்து வரும் கேள்விகளுக்கு தவறாமல் விடை எழுத வேண்டும். ஏனென்றால், இதில் சுலபமாக மதிப்பெண்களைப் பெற முடியும். சின்னச் சின்ன விடைகளாக இருக்கும். அதனால் நேரமும் அதிகம் செலவாகாது. இன்ஆர்கானிக்கைவிட ஆர்கானிக் கெமிஸ்ட்ரி கேள்விகளுக்கு விடையளிப்பது சுலபம். வேதியியல் பாடத்தை திட்டமிட்டுப் படித்தும் எழுதியும் பார்த்தோமென்றால் சுலபமாக சென்டம் வாங்கலாம்.’’

அடிக்கடி கேட்கப்படும் மூன்று மார்க் கேள்விகள்

* ஹைசன்பெர்க் நிலையில்லாக் கோட்பாடு யாது?
* புளூரினின் எலக்ட்ரான் நாட்டம் குளோரினை விட குறைவு? ஏன்?
* பிளம்போ கரைப்பான் பற்றி குறிப்பு வரைக.
* றி2ளி5   சிறந்த நீர்நீக்கி என நிரூபி?
* இடைநிலை தனிமங்கள் ஏன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன?
* டி தொகுதி தனிமங்கள் ஏன் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளன?
* ஹைட்ரஜன் குண்டு செய்வதில் உள்ள அறிவியல் கருத்தை விளக்குக?
* அதிமின் கடத்தி என்றால் என்ன? பயன் ஒன்று கூறு?
* வெப்ப இயக்கவியலில் இரண்டாம் விதியின் கெல்வின்-ப்ளாங் கூற்று யாது?
* லீ-சாட்லியர் கொள்கை யாது?
* வினை வகை - வரையறு.
* அடுத்தடுத்து நிகழும் வினை பற்றி எடுத்துக்காட்டுடன் கூறு?
* மின்முனை கவர்ச்சி என்றால் என்ன?
* கோல்ராஸ் விதி யாது?
* மீசோ கலவை, சுழிமாய் கலவை- வேறுபடுத்துக?
* பீனால்-ஐ பினாப்தலினாக மாற்றுக?
* டெர்லின் எவ்வாறு தயாரிப்பாய்?
* யூரோட்ரோபின் எவ்வாறு தயாரிப்பாய்? பயன் ஒன்று கூறு?
* ஆக்ஸாலிக் அமிலத்தின் பயன்கள் யாவை?
* காப்ரியேல் தாலிமைடு தொகுப்பு வினையை எழுதுக?
* நிறம் உறிஞ்சிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக?
* 84A218 என்ற உட்கரு நிலைப்பு தன்மையுள்ள 82B206 உட்கருவாக மாறும்போது வெளிப்படும் " மற்றும் $ துகள்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
* நீர்(373K) " நீராவி(373K) என்ற செயல்முறையில் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக. )H(VAP) = 40850 j mole1
* C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மம் (கி) நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து (ஙி) என்ற சி2பி6ளி கரிம சேர்மத்தை தருகிறது. சேர்மம் (B) ஆக்ஸிஜனேற்றம் அடைந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) சேர்மத்தை தருகிறது. சி, டாலன்ஸ் சோதனைக்கு உட்படுகிறது. சேர்மங்கள் கி, ஙி, சியை கண்டறிக.

- பேராச்சி கண்ணன்,
எம்.நாகமணி
படங்கள்: ஆர்.சி.எஸ், முத்துகிருஷ்ணன்