சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

நான் உங்களுடையவன் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுடனேயே இருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் பசியைத் தணிக்காமல் நான் உண்ண முடியுமா? சொல்லுங்கள்! - பாபா மொழி சித்திக் பாளங்கே பொறுமை இழந்தார். அவர் ஷீரடிக்கு வந்து ஒன்பது மாதங்களாகி விட்டன. ஆனால், பாபா அவரை நெருங்க விடவில்லை.

‘‘ஹாஜி சாகேப், நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டமும் துக்கமும் படுகிறீர்கள்? நிறைய பேர் தங்கள் கவலையை பாபாவிடம் சொல்லி ஆறுதல் அடைந்து செல்கிறார்கள். நீங்கள் பல மாதங்கள் இங்கு தங்கியிருந்தும் பாபாவைச் சந்திக்கவில்லையா?’’ என ஓர் ஆசாமி கேட்டார்.

‘‘என்னுடைய கர்மம்... என்னவென்று சொல்வது?’’ - தலையில் அடித்துக்கொண்டார் சித்திக்.
‘‘ஏன், என்னவாயிற்று?’’
‘‘நான் இங்கு வந்து ஒன்பது மாதங்களாகிறது. ஆனால், பாபா மசூதிக்குள் விடமாட்டேன் என்கிறார். பாபா சொல்கிறார், ‘இங்கு யார் காலை வைத்தாலும், அவர்களுடைய குறைகள் தீரும்’ என்று. ஆனால், நான் மட்டும் மசூதியில் காலை வைக்க முடியவில்லையே?’’
‘‘பாபா கோபித்துக்கொண்டாரா?’’

‘‘ஆமாம்!’’
‘‘எதற்காக?’’
‘‘அதுதான் தெரியவில்லை. என்னைப் பார்த்தாலே ஒரேயடியாகக் கத்துகிறார். திட்டி விரட்டுகிறார். நான் ஹாஜி, வயோதிகன், நமாஸ் ஓதுபவன். குரானை நன்கு பாடம் செய்தவன். யாருக்கும் மனதால்கூட கெடுதல் நினைத்ததில்லை. அப்படியிருந்தும், பாபா ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார் எனப் புரியவில்லை!’’

அந்த ஆசாமி ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சொன்னார்... ‘‘ஹாஜி சாகேப், நான் பாபாவை நன்கு அறிவேன். பாபா சில நேரங்களில் பரீட்சை செய்வார். அவருடைய கோபம் வெறும் வெளித்தோற்றம்தான். உள்ளுக்குள் அன்புதான் இருக்கும். ஒரு அருமையான யுக்தி சொல்கிறேன். உங்களுக்கு மாதவராவ் தேஷ்பாண்டேவைத் தெரியுமா?’’
‘‘தெரியும். பாபா அவரை அன்புடன் ஷாமா என்று அழைப்பார். பாபாவின் செல்லப்பிள்ளை’’
என்றார் சித்திக்.

‘‘அவரை அழைத்துச் செல்லுங்கள். காரியம் கைகூடும்!’’
‘ஆனால் அவர் அருகில் இருக்கும்பொழுதுதான் பாபா என்னைத் துரத்திவிட்டார்.’’

‘‘நடந்ததை விடுங்கள்... ‘பாபா ஈசன் என்றால் ஷாமா நந்தி’ என்று ஜனங்கள் சொல்கிறார்கள். எனவே, முதலில் நந்திக்கு நமஸ்காரம் செய்யணும். பிறகு ஈசன் பிரசன்னமாவார். நீங்கள், உங்களுடைய பிரச்னையை மறுபடி அவரிடம் சொல்லுங்கள்...’’

சித்திக் எழுந்து, பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். அவருடைய அதிர்ஷ்டம்... மாதவராவ் அங்கிருந்தார். இருவரும் அன்புடன் பேசிக்கொண்டார்கள். சித்திக் எல்லா விஷயங்களையும் அவரிடம் சொல்லிவிட்டு, ‘‘தயவுசெய்து, என் கவலையைப் போக்குங்கள்’’ என்றார்.

‘‘கவலைப்பட வேண்டாம்! நான் நாளைக்கே உங்கள் வேலையை முடிக்கிறேன். நாளை காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின் வாருங்கள்!’’
‘‘உங்கள் உபகாரத்திற்கு ரொம்ப நன்றி!’’ - மாதவராவின் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார் சித்திக். அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து, அவருடைய வெண்மையான தாடியில் பட்டது. இதைப் பார்த்து மாதவராவிற்கு, ‘இந்த ஹாஜி பவித்திரமானவராகத் தெரிகிறார். ஆனால், பாபா எதற்காக இவரை அண்ட விடமாட்டேன் என்கிறார்?’ என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், ‘பாபாவின் எண்ணம் என்ன என்பது யாருக்குத் தெரியும்? அவர் உயரத்திற்கு யார் போக முடியும்? நாம், நம்முடைய முயற்சியினைச் செய்துகொண்டே இருக்கணும்’ என்று ஒரு பதிலும் அவர் மனதில் தோன்றியது.

மறுநாள்...
பாபா சிற்றுண்டி முடித்துவிட்டு கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் மாதவராவ் இருந்துகொண்டு, வேடிக்கையான விஷயங்களைச் சொல்லி, பாபாவை ஆனந்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்பொழுதுதானே சித்திக்கை உள்ளே அனுமதிப்பது சாத்தியம்!
மாதவராவ் சொன்னபடி சித்திக் மிகுந்த எதிர்பார்ப்புடன் மசூதியின் எதிரில் நின்றார். பாபா அவரைப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்டார். ஆனால், அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை.
‘‘பாபா...’’
‘‘என்னப்பா ஷாமா?’’

‘‘நீங்கள், நாய், பன்றி, ஈ, எறும்பிடம்கூட அன்பைக் காட்டுகிறீர்கள்’’ - ஷாமா ஆரம்பித்தார்.
‘‘நீ என்ன சொல்ல வருகிறாய்?’’

‘‘இல்லை. சித்திக் பாளங்கே என்னும் கிழவர் இங்கு வந்திருக்கிறார். அவர் மெக்கா, மதீனாவுக்குப் போய் வந்திருக்கிறார். ஐந்து வேளை நமாஸ் செய்கிறார். குரானை பாடாந்திரம் செய்திருக்கிறார். அவருக்கு உங்கள் தரிசனம் வேண்டுமாம். வயசான இவன் தங்களைக் காண ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். ஒன்பது மாதங்களாக இங்குதான் இருக்கிறார். அவர்மீது தயை காட்டுங்கள். எண்ணற்றவர்கள் இங்கே வருகிறார்கள். அதில் ஒருவர் இவர். இவரை ஏன் தடை செய்கிறீர்கள்? அவர்மேல் கருணை காட்டுங்கள். தன் மனதில் உள்ளதை உங்களிடம் சொல்லிவிட்டு, உடனே அவர் கிளம்பி விடுவார்!’’

ஷாமா சொன்னதைக் கேட்டு, பாபா வெகுண்டு எழுந்தார். குரலை உயர்த்தி, ‘‘ஷாமா, உன்னை ரொம்ப புத்திசாலியாக நினைத்துக்கொண்டாயா? உன்னுடைய உதட்டில் இருக்கும் அலங்காரமான வார்த்தைகள் எள்ளளவு கூட உலரவில்லை. அதற்குள் என் செய்கையை எடை போடுகிறாயா? அல்லாவின் அருள் அவர் மேல் இல்லாதிருக்கும்போது, நான் அவருக்காக என்ன செய்ய முடியும்? இங்கே பக்கீர்களின் செயல் மாறுபட்டது. அதற்கு நான் பொறுப்பு அல்ல. நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு விடையளிக்க அவர் தயாரா என்று கேள்!’’ என்றார்.
இவ்வளவு பேசியதற்கு ஷாமா சந்தோஷப்பட்டார். சித்திக் சரியான விடை சொல்லிவிட்டால், பாபா அவரை அருகில் அழைத்துவிடுவார் என மனத்தில் நினைத்தார். அங்கிருந்தபடியே, ‘‘ஹாஜி, பாபா என்ன சொன்னார் என்பதை கேட்டீர்களா?’’ என்றார்.

‘‘கேட்டேன்’’ - குனிந்து, இரண்டு கைகளையும் மார்பில் வைத்துக்கொண்டு சித்திக் சொன்னார்.
‘‘பிறகென்ன? பாபா கேள்விகள் கேட்பார். நீங்கள் அதற்கு விடை சொல்லத் தயாராகுங்கள்!’’
ஷாமாவைப் பார்த்துக்கொண்டே பாபா சொன்னார்... ‘‘ஷாமா! அவரை உறுதியாகக் கேள். கிணறு இருக்கிறது. அதன் அருகில் ரொம்பவும் குறுகலான ஒத்தையடிப்பாதை இருக்கிறது. அங்கிருந்து நடந்து வர முடியுமா?’’
ஷாமா, ஹாஜியைப் பார்த்தார்.

‘‘முடியும் பாபா. எவ்வளவு தடைகள் இருந்தாலும் நான் நடந்து வருவேன். ஆனால், நீங்கள் எனக்கு பிரத்யேகமான சந்திப்பு கொடுக்கணும். நான் உங்கள் பவித்திரமான காலடியில் உட்காரணும்.’’
ஷாமா மறுபடி பாபாவை நோக்கினார்.
‘‘ஷாமா, அவரைக் கேள், நான்கு முறை எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுக்கத் தயாரா என்று?’’
‘‘இதை ஏன் விசாரிக்கிறீர்கள்? நீங்கள் கேட்டால், நாலு லட்சம் கூடக் கொடுப்பேன்!’’
ஷாமா, பாபாவைப் பார்த்தார்.

‘‘ஷாமா, இன்று மசூதியில் ஆடு வெட்டணும் என நினைக்கிறேன். அவருக்கு மாமிசம் வேணுமா அல்லது, எலும்பு வேணுமா அல்லது ஈரல் மட்டும் சாப்பிடுகிறாரா என்று கேள்.’’
‘‘இதில் எதுவும் எனக்கு வேண்டாம். பாபா! உங்கள் விருப்பப்படி கொடுங்கள்.’’
இதைக் கேட்டு பாபா சந்தோஷமடைவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சித்திக்கின் பதில் பாபாவுக்குக் கோபத்தை உண்டாக்கியது. எழுந்து, இரண்டடி முன் வைத்து, அங்கிருந்த இரண்டு தண்ணீர்க் குடங்களை எடுத்து, தண்ணீருடன் வீசி எறிந்தார்.

ஹாஜி இதைப் பார்த்துக் கலங்கிவிட்டார். அவரது உடல் நடுநடுங்கியது. பாபா, தான் சமைக்கும் பாத்திரத்தையும் அவர் மேல் தூக்கி எறிந்தார். பல்லைக் கடித்துக்கொண்டு, கடுங்கோபத்தினால் சிவந்த முகத்தோடு பாபா, அவரருகில் வந்தார். பாபாவின் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு, ஹாஜி பயத்தில் வெடவெடத்தார்.

‘‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? தற்பெருமை அடித்துக்கொள்கிறாயா? என்னைவிட வயதில் மூத்தவன் என்பதற்காக, திமிர் காட்டுகிறாயா? நீ என்ன குரான் படிப்பது? என்னிடம் படேபாபா என்பவர் வருகிறார். அவருக்கும் குரான் மனப்பாடம். குரான் படிப்பதினால் பெரிய ஆளாகி விட்டாயா? நீ மெக்காவுக்குப் போய் வந்ததினால் உன்னையே பெரிய மகான் என்று கருதுகிறாயா? உனக்குத் தெரியாது. நான் தினமும் மெக்காவைச் சுற்றி வருகிறேன்.

நான் என்றைக்காவது மமதை காட்டியிருக்கிறேனா? மசூதியின் படியேறிவர பக்கீர் அனுமதி கொடுக்கவில்லை. ஏன் தெரியுமா? ஐந்து வேளை நமாஸ் ஓதுகிறேன் என்கிற தற்பெருமை. மக்காவிற்குப் போய் வந்திருப்பதால் உனக்கு அகங்காரம்! இங்கெல்லாம் போய் வந்திருந்தும், உன் மமதை, அகங்காரம் உன்னைவிட்டுப் போகவில்லை. எனவே நீ ஒரு பயங்கர பாபி! அதனால் நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லை... புரிந்து கொள்ளவும் முடியாது. மலையளவு பாபம் செய்திருந்தாலும் அல்லா மன்னித்தாலும் மன்னிப்பார். ஆனால், உன்னைப் போன்ற அகங்கார சாதுப் பேர்வழிகள் சிறிதளவு பாபம் செய்திருந்தாலும், அவர் பொறுக்கமாட்டார். என்னுடைய பார்வையிலிருந்து விலகி, அந்த மூலையில் போய் உட்கார்!’’

ஹாஜி இப்போது தன்னைப் புரிந்துகொண்டார். அகங்காரம் என்னும் பூதம் தன் சரீரத்தில் நுழைந்து அலைக்கழித்தது. சாது என்னும் போர்வையில் சைத்தான் உள்ளே சஞ்சரித்து, தன்னுடைய மனிதத் தன்மையை இழக்கச் செய்தது. பாபா சரியாகத்தான் சொன்னார். அவர் சொன்ன பிறகுதான், இவற்றை உணர்ந்தார். ஹாஜி தன்னுடைய அகங்காரத்தைத் தியாகம் செய்தார். மனசு லேசானது. பாபா குறிப்பிட்ட இடத்தில் போய் ஹாஜி உட்கார்ந்தார்.

பாபா இதைக் கவனித்தார். அப்பொழுது இரு பழக்காரிகள் மாம்பழம் விற்கக் கொணர்ந்தனர்.
‘‘வாங்க... இன்றைக்கு எனக்கு மாம்பழம் வேண்டும். கூடையை இறக்குங்கள்!’’
‘‘பழம் எப்படி? இனிக்கும்தானே?’’ - பாபா சாந்தமாகக் கேட்டார்.
‘‘ஆமாம்!’’‘‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘‘பாபா, மாம்பழத்தின் மேலிருக்கும் நிறத்தை வைத்து உள்ளேயிருக்கும் ருசி தெரியும்!’’ என்றாள் மாம்பழக்காரி.
‘‘நீ சொன்னது லட்சத்தில் ஒரு வார்த்தை. மனிதர்களைக்கூட இப்படி சோதித்துப் பார்க்கலாம். சரி, அந்த இரண்டு கூடைகளையும் வையுங்கள். எவ்வளவு பணம் கொடுக்கணும்?’’
‘‘பாபா, நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ, அதை வாங்கிக்கொள்கிறோம். நீங்கள் சாட்சாத் தெய்வம். தெய்வத்திடம் யாராவது விலை பேசுவார்களா?’’
‘‘சரி தாயி. இப்படியே நம்பிக்கை வை’’ என்று கூறி, பாபா இருவருக்கும் கைநிறைய பணம் கொடுத்தார்.

‘‘ஷாமா... உன்னுடைய அந்தக் கிழ ஹாஜிக்கு இந்த இரண்டு கூடைப் பழங்களையும் என்னுடைய பரிசு என்று சொல்லிக் கொடு!’’
‘‘நன்றி பாபா! எவ்வளவு பெரிய சண்டை... என்ன கோரமான சம்பவம்... உங்களுடைய கோபத்தை தரிசித்ததில் ஹாஜி மயக்கமாகி விழுந்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது’’ - ஷாமா தமாஷ் செய்தவாறே சொன்னார். சிரித்தவாறு பாபா சொன்னார், ‘‘சரி... சரி... அவருக்குப் பழங்களைக் கொடு. சாப்பிடச் சொல்லு!’’

ஷாமாவும் தாத்யாவும் பழக் கூடைகளை எடுத்து, மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சித்திக்கிடம் கொடுத்தார்கள். அவர் சந்தோஷப்பட்டார்.
‘‘ஹாஜி சாகேப். பாபாவின் கோபம் மறைந்தது. உங்களுடைய கவலை தீர்ந்தது. இப்பொழுது கோபத்தின் இடத்தில் அன்பைக் காட்டுவார் பாருங்கள்!’’ - ஷாமா உற்சாகத்துடன் சொன்னார்.
பாபா ஹாஜியின் அருகில் வந்தார். பையிலிருந்து ஐம்பத்தி ஐந்து ரூபாய் எடுத்து, அவர் கையில் எண்ணி வைத்தார்.

‘‘வாங்கிக்கொள். உனக்குத்தான் இது. நிறைய அனுபவித்துவிட்டாய் நீ. ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வை. நல்ல காரியம் செய்யும்போதும், நல்ல வார்த்தைகள் சொல்லும்போதும், அகங்காரத்தை நாம் பிடித்து வைத்துக் கொள்ளக்கூடாது. அகங்காரம் என்பது பாலில் உறை ஊற்றுவது போல. இறைப்பணி என்னும் பாலையும் அது கெடுத்துவிடும். சரி... சரி... என்னருகில் வா!’’
சித்திக்கை கை கொடுத்து எழுப்பினார் பாபா. அவர் கையைப் பிடித்தவாறே மசூதிக்குள் வந்தார். தன்னருகில் உட்கார வைத்தார். சித்திக் தன்யன் ஆனார். பாபாவின் அருள் அவருக்குக் கிட்டியது!
அன்றைக்கு பாபா, அவருக்கு சாப்பிட அழைப்பு விடுத்தார். அவர் உச்சி குளிர்ந்தார்.

‘‘பாபா... நான் மெக்காவிற்குப் போய் வந்தேன். ஆனால், ஷீரடியில்தான் புனிதமானேன்!’’
பாபா அவரைக் கட்டித் தழுவினார். ‘‘அப்பனே, இந்த இடம் இந்துக்களுக்குக் காசி... முஸ்லிம்களுக்கு மெக்கா! இதைக் கண்டுகொள்ள புனிதமான பார்வை வேண்டும்! அப்படிப்பட்ட பார்வை கொண்டு பார்த்தால், மெக்காவும் காசியும் ஒன்றாகவே தெரியும்... காரணம், எல்லோருக்கும் எஜமானர் ஒருவரே!’’ என்றார் பாபா.
ஹாஜியின் கண்கள் பனித்தன.

அகங்காரம் என்பது பாலில் உறை ஊற்றுவது போல. இறைப்பணி என்னும் பாலையும் அது கெடுத்துவிடும்.

இந்த இடம் இந்துக்களுக்குக் காசி... முஸ்லிம்களுக்கு மெக்கா! இதைக் கண்டுகொள்ள புனிதமான பார்வை வேண்டும்!

(தொடரும்...)


வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்