வீரம்



பகையாளிகளை விட்டு வைக்காமல் உண்டு, இல்லை என பந்தாடும் அஜித்தின் ‘வீரம்’. நாலு சகோதரர்களிடம் தாய்க்கும் மேலாக அன்பு பாராட்டும் பாசக்கார அண்ணன் அஜித். இந்த ‘விநாயகம் பிரதர்ஸ்’, ஊருக்குள் அடிதடி போக, கொஞ்சம் வியாபாரமும் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால், தம்பிகளின் கதி அதோகதிதான் என ஃபீல் பண்ணும் அஜித், தலை நரைக்கும் அளவுக்கு பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்.

 ஏற்கனவே காதல் வலையில் சிக்கியிருக்கும் தம்பிமார்களை சந்தானம் துணையோடு கல்யாண வளையத்தில் அஜித் மாட்டுவது பாதிக்கதை. காதல் துணை தமன்னாவின் குடும்பப் பகையைத் தீர்த்துக் கட்டுவது மீதிக்கதை.

தியேட்டரை விட்டு வரும்போது இவ்வளவு எக்குத்தப்பான ஆபரேஷன் எல்லாம் சாத்தியமா என முட்டி மோதுகின்ற லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கிற வரையில் பரபர திரைக்கதையில் அசரடிக்கிறது சிவாவின் இயக்கம்.

 படத்தில் ஆக்கிரமிப்பது அஜித்தான். வெள்ளை வேட்டியும், சட்டையுமாக நடந்து வருகிற மிடுக்கிலும், தம்பிகளுக்கு அப்பா மாதிரி பாசம் காட்டுவதிலும் அச்சு அசல் இயற்கையான நடிப்பு. விக்ரமன் வகை சினிமாதான் என கர்ச்சீப்போடு போஸ்டர் பார்த்துப் போனால் நிச்சயம் ஏமாற்றம் காத்திருக்கிறது.

பாசத்தை ஊறுகாய் மாதிரி வைத்துக்கொண்டு அசரடிக்கிற காரசாரத்தோடு வீரத்தைப் பரிமாறுகிறார்கள். ‘நீ என்ன சாதிடா’ எனக் கேட்கும் வில்லனிடம் பல்லைக் கடித்து அஜித் பரிமாறுகிற வார்த்தைகள், உயிர்ப்புள்ளவை. தாதா வகையில் சேர்ந்துவிடாமல் அஜித் படத்தைக் கொண்டுபோவது இன்னும் விறுவிறுப்பு.

‘பக்கத்தில் இருக்கிறவங்களை கவனிச்சா போதும், ஆண்டவன் நம்மளைப் பார்த்துக்குவான்’ என்ற தத்துவத்திலும் வாழ்க கோஷம் போடும் தம்பிமார்களை, ‘முதல்ல இதை நிறுத்துங்கடா’ என அடக்கி வைப்பதிலும் அஜித் நிஜமாகவே மினி ரஜினி. அடிக்கடி பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் ஸ்டைலாக பின்னி எடுப்பதில் அள்ளுகிறது அஜித் மேனரிசம்.

தமன்னா ‘கும்னா’. வழவழப்பான மூங்கில் தேகத்தின் இடுப்பு பிரதேசத்தில் உடைகள் நிற்பது என்னவோ அபாயக் கட்டத்திற்கு அருகில்தான். வாயைத் திறந்து பேசாதபொழுதெல்லாம் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். ‘சிக்’ உடையில் அபாரமான வளைவுகளோடு அழகான உருவம். தம்பிமார்கள் அவரை அஜித்தோடு இணைத்துக் கோர்த்து விடும் ரகசியம் புரியாமல் தமன்னா மயங்குவது சுவாரஸ்யம். வெளிநாட்டுக் காதல் பாடல்களில் தமன்னா இன்னும் செம ‘ஜில்’.

காமெடிக்கு சந்தானம் வந்து பாதிப் பகுதிக்கு அஜித்தோடு அருமையாக கை கொடுக்கிறார். சென்டிமென்ட் வகையறாவில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றுவது அவரது சாமர்த்தியமே. தயக்கமில்லாமல் எல்லோருக்கும் இடம் கொடுத்திருப்பது அஜித்தின் தாராளம். விவேகாவின் பாடல்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத்தின் சுமாரான இசை.

 ஆனால், தமன்னாவின் துள்ளலில் பாட்டையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை. பரபரப்பு ஆக்ஷனில் வெற்றியின் கேமரா கூடவே இருக்கிறது. நெஞ்சை உலுக்கும் அஜித்தின் ரியல் ரயில் சண்டையை வெற்றியின் படப்பிடிப்பு கண் முன்னால் நிறுத்துகிறது.
அஜித்தின் வீர தீர ஆக்ஷன் மசாலா!

- குங்குமம் விமர்சனக் குழு