கடைசி பக்கம்



நெடுஞ்சாலையில் நிதான வேகத்தில் காரில் சென்று கொண்டிருந்தார் அவர். விதிகளை மதிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. சீட் பெல்ட் அணிந்துதான் கார் ஓட்டுவார். சாலையோர போர்டில் குறித்த வேகத்துக்கு மேல் போக மாட்டார். வாகன நடமாட்டமே இல்லை என்றாலும், சிவப்பு விளக்கைப் பார்த்ததும் சிக்னலில் நின்றுவிடுவார். இப்படி நின்ற இவர் கார்மீது சிக்னலை மதிக்காத பஸ் மோதி, அது வழக்கு ஆனதும் உண்டு. ஆனாலும் அவர் மாறவில்லை.

இன்றும் ஒரு அவசர வேலை இருந்தாலும், அதற்காக எல்லாம் அவர் அசுர வேகத்தில் செல்லவில்லை. அவருக்குப் பின்னால் தாறுமாறான வேகத்தில் வந்த ஒரு வாகனம், ஓயாமல் ஹார்ன் அடித்து வழி கேட்டபடி இருந்தது. கண்ணாடியில் பார்த்தார். திறந்த ஜீப்பில் ஐந்து இளைஞர்கள்... அநேகமாக போதையில் இருக்க வேண்டும். ஓட்டுபவனும் குடித்திருந்தான் போல... வாகனம் ஒழுங்கற்று அலைந்தது. சத்தமாக பாடலை ஒலிக்க விட்டபடி பெருங் கூச்சலோடு பயணித்து வந்தார்கள். ஒதுங்கி வழிவிட்ட அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு முன்னேறினார்கள்.

அவருக்கு ரத்தம் கொதித்தது. விதிகளை மதிக்காமல் செல்லும் இவர்கள் என்னைத் திட்டுவதா? இவர்களை தண்டிக்க வேண்டும். ஜீப்பை பின்தொடர்ந்தார். அந்த இளைஞர்கள் சாலையோர ஹோட்டலில் காரை நிறுத்தி விட்டு ஒதுக்குப்புறமான அறைக்குள் குடிக்க நுழைந்தனர். இவரும் நேராக அந்த ஹோட்டலுக்குப் போய் சிக்கன் அயிட்டங்கள் ஆர்டர் செய்தார். பார்சலை வாங்கியவர், அதை அவர்களுடைய திறந்த ஜீப்பின் சீட்டுகளில் தெளித்துவிட்டு நகர்ந்தார். சில நிமிடங்களில் காகங்களும் பருந்துகளும் சிக்கனை மட்டுமின்றி சீட்டுகளையும் குதற ஆரம்பித்தன. விதி மீறுபவர்கள், விதிகளை மீறிய வழியில் தண்டிக்கப்படுவார்கள்!