நீலகிரியை மிரட்டும் மேன் ஈட்டர்!



இப்போதெல்லாம் ஊட்டி என்றாலே உதறல் எடுக்கிறது. குளிரால் அல்ல... மூன்று மனித உயிர்களை பலி வாங்கிய அந்த கோரப் புலியால். ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டமும் இப்போது திகிலடைந்து கிடக்கிறது. ‘‘எங்கள் மாட்டுக்கொட்டகைக்கு வந்தது’’, ‘‘எங்கள் தோட்டத்துக்குள் ஓடியது’’ என்றெல்லாம் மக்களிடம் வதந்திகள் பரவி, திகிலின் தீவிரத்தைக் கூட்டுகின்றன. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை.

 பிரதான சுற்றுலா பகுதியான தொட்டபெட்டா மூடப்பட்டது. வயற்காடுகளுக்குச் செல்ல மக்களுக்குத் தடை. வனத்துறை, அதிரடிப்படை என வரலாறு காணாத பிரயத்தனங்கள். ஜான், வாசிம், விஜய் போன்ற பயிற்றுவிக்கப்பட்ட கும்கிகள் ஒரு பக்கம் தேடுகின்றன. எப்போது வேண்டுமானாலும் பிடிபடலாம் அந்தப் புலி.

காலம் காலமாக ஊட்டி அதே இடத்தில்தான் இருக்கிறது... இத்தனை வருடங்களாக இல்லாத இந்தப் புலியும் அதன் தாக்குதலும் திடீரென எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? இத்தனை தூரம் அது பிடிபடாமல் ஆட்டம் காட்டுவது எப்படி? ‘‘பொதுவாக புலிகள் மனிதனை சாப்பிடுவதில்லை. அவை ‘மேன் அட்டாக்கர்’...

அதாவது, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மனிதனைத் தாக்கிவிட்டு ஓடிவிடும் வகையைச் சேர்ந்தவை. ஆயிரத்தில் ஒரு புலி மட்டுமே இது போன்ற ‘மேன் ஈட்டராக’ மாறும். அந்தப் புலி வாழ்கிற சூழ்நிலையே இதற்குக் காரணமாகிறது’’ எனத் தொடங்கினார் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன்.

‘‘மேன் ஈட்டர் புலிகள் மூன்று விதமாக உருவாகின்றன. முதல் வகை, வயதான புலிகள். விலங்குகளை வேட்டையாடி சாப்பிட வலுவற்ற புலிகள், மனிதர்களை வேட்டையாடுவது எளிது எனக் கண்டுகொள்கின்றன.

இன்னொரு வகை, இளம் புலிகள். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, தாய்ப்புலியால் விரட்டப்படும் புலிகள், சுயமாகத் தன் வேட்டையைத் தொடங்கும். அவற்றில் மிகச்சில புலிகள் எதிர்பாராத விதமாக முதல் வேட்டையை மனிதனில் இருந்து தொடங்க நேர்ந்தால், அந்த சுவைக்கு அடிமையாகி விடுகின்றன. மூன்றாவது வகை, காயம் காரணமாக வேட்டையாட முடியாமல் தவிக்கும் புலிகள். அவை எளிதாகக் கிடைக்கும் மனிதர்களை வேட்டையாடுகின்றன.

நீலகிரியில் உலவிக்கொண்டிருக்கும் புலியின் படம் வனத்துறை கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது, அது 4 வயது பெண் புலியாக இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். மேலும், அந்தப்புலியின் காலில் காயம் இருப்பதால், அது மூன்றாவது வகையாக இருக்கலாம் என்கிறார்கள். இதற்கு முன் 1965ல்தான் நீலகிரியை ஒரு மேன் ஈட்டர் புலி கலங்கடித்தது. இப்போது இன்னொன்று. ஆனால், வனத்துறை பழைய வழிமுறைகளைப் பயன்படுத்தியே தேடிக் கொண்டிருக்கிறது.

இது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள வனத்துறை போதிய தயாரிப்போடு இல்லை. மாவட்ட நிர்வாகத்துக்கும், வனத்துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பொதுவாகவே குறிப்பிட்ட பகுதிக்கு மேல் மக்கள் நடமாட தடை இருந்தும் சரியான கண்காணிப்பு இல்லாததால் விலங்குகளின் இயல்பு பாதிக்கப்பட்டு அது மனித - விலங்கு மோதலாக உருவெடுக்கிறது. வனத்துறையில் 60% ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்கிறார்கள். இருக்கும் அதிகாரிகள் பலரும் 55 வயதைத் தாண்டியவர்கள். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும் விரைந்து செயல்பட முடியவில்லை!’’ என்ற ஜெயச்சந்திரன், ‘‘இந்த ‘மேன் ஈட்டர்’ புலியைப் பிடித்து வண்டலூரில் விட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.

அது மிகவும் ஆபத்தானது. சுட்டுக்கொல்வதே சிறந்த வழி. இதைப் பிடித்துப் பாதுகாப்பதில் எந்தப் பயனும் இல்லை’’ என்கிறார் உறுதியாக!ஆனால், இயற்கைக் காப்புக் கழகத்தின் ஆராய்ச்சியாளரும், காட்டுயிர் ஆர்வலருமான ப.ஜெகநாதனின் கருத்து சற்று மாறுபட்டது. ‘‘புலிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டுவதில்லை. மனிதர்கள்தான் மெல்ல மெல்ல வனத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

வன விலங்குகளின் வாழிடத்தை மறித்து விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விலங்குகளைப் பற்றி நம்மிடம் ஏகப்பட்ட கற்பிதங்கள் உள்ளன. ‘யானைகள் அட்டகாசம், புலியின் கொடூரச்செயல்’ என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதுகின்றன. ‘கும்கி’ படத்தில் யானையைப் பற்றி எந்த புரிதலுமே இல்லாமல் ஒரு கற்பனையைப் பரப்பினார்கள். இது போன்ற தவறான கற்பனைகளே விலங்குகளுக்கும் மனிதர்களுக்கான உறவைக் குலைக்கின்றன. 

எந்தக் காரணமும் இல்லாமல் விலங்குகள் மனிதர்களைத் தாக்குவது மிக மிக அரிது. அப்படி மூன்று பேரையும் ஒரு புலி கொன்றது உறுதி செய்யப்பட்டால், காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், மூவரின் மரணத்துக்கும் காரணம், குறிப்பிட்ட அந்த ஒரே புலிதானா என்று பார்க்க வேண்டும். அதற்கு பல அறிவியல் நடைமுறைகள் உண்டு. வனவிலங்கு வாழிடங்களை ஒட்டிய வளர்ச்சித் திட்டங்களையும், குடியிருப்புகளையும் அகற்றாவிட்டால், இது போல இன்னும் பல சம்பவங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்...’’ என எச்சரிக்கையோடு முடித்தார் அவர்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: சதீஷ்