என் வருங்கால கணவர்...



வெயிலடிக்கும்போது மழை பெய்வது போல... ஒரு சந்தோஷம், இரண்டு துக்கம் என்ற கலவை மனநிலையில் இருக்கிறார் த்ரிஷா. பாசத் தந்தையின் மரணம், செல்ல வளர்ப்பான காட்பரியின் இழப்பு என்று ஒரு கண் கண்ணீர் வடிக்க, இன்னொரு கண்ணில், ‘என்றென்றும் புன்னகை’ வெற்றிக் களிப்பு. அரதப் பழசான கேள்வி என்றாலும் த்ரிஷாவைப் பார்த்ததும் கேட்காமல் இருக்க முடியவில்லை. ‘‘உங்கள் இளமையின் ரகசியம் என்ன த்ரிஷா?’’‘‘இதில் ரகசியமெல்லாம் எதுவுமில்லை.

இயல்பாகவே என் உடல்வாகு அப்படி. தவிர ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற பழமொழியை கடைப்பிடிக்கிறேன். அளவுக்கு மீறிய ஆசைகளையும்,அவசியமற்ற பொறாமைகளையும் தூக்கிப் போட்டுவிட்டால் மனம் லேசாகிவிடும்... முகம் பிரகாசமாகிவிடும். அப்புறம், உணவுக் கட்டுப் பாடு, யோகா... வெஜிடபிள் சூப், எண்ணெய் குறைக்கப்பட்ட உணவு வகைகளே
இப்போது என் மெனுவில் இருக்கு.’’

‘‘ ‘என்றென்றும் புன்னகை’யில் உங்களிடம் பழைய அழகை பார்க்க முடிந்ததே?’’‘‘தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட். நடிக்க வந்து 12 வருஷமாச்சு. இன்னுமும் ரசிகர்கள் மனசில் எனக்கென்று போடப்பட்ட நாற்காலியில் யாராலும் இடம் பிடிக்க முடியவில்லை. பெரிய ஹீரோக்கள், வித்தியாசமான கேரக்டர்கள் என்று எனக்கு எல்லாமே நல்லவிதமாக அமைந்து வந்திருக்கு. எல்லோருக்கும் நன்றி சொல்லணும்.

‘என்றென்றும் புன்னகை’ ஸ்கிரிப்ட்டை எழுதும்போதே ஹீரோயின் என்கிற இடத்தில் இயக்குனர் அஹ்மது என் பெயரைத்தான் எழுதியிருக்கார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு, எனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரை கொடுத்ததற்காக அவருக்கு தேங்க்ஸ். படம் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க.’’

‘‘சமீபத்தில் மனதைத் தைத்த சம்பவம்?’’ ‘‘ஐ மிஸ் மை டாடி. அவர் உயிருடன் இருந்தபோது அவருடன் நிறைய நேரம் செலவழிக்க முடியாம பிஸியா இருந்துட்டேன். ஒரு வாய் சாப்பிட்டுட்டு போகலாம் என்று அப்பா அழைத்தபோது, ‘ஸாரி டாடி... அப்புறம் பார்க்கலாம்’னு அலட்சியம் காட்டியதுண்டு.

அவர் என்னை அழைத்தது உணவு பரிமாறுவதற்காக இல்லை... அன்பு பரிமாறுவதற்காக என்பதை இப்போ ஃபீல் பண்றேன். சமீபத்தில் செல்லமா வளர்த்த காட்பரி நாயும் திடீர்னு இறந்துவிட, இடிந்து போயிட்டேன். கிட்டத்தட்ட என்னோட பிரதர் மாதிரி இருந்துச்சு. இந்த இரண்டு சோகங்களும் அடிக்கடி என்னை அழ வைக்கிறது’’ என்று கைக்குட்டையால் கண்ணீர் துடைத்த த்ரிஷாவை டிராக் மாற்றினோம்.

‘‘பங்கி ஜம்ப், ஸ்கூபா டைவிங் என்று வீர விளையாட்டுகளில் ஈடுபட எங்கிருந்து தைரியம் வந்தது?’’ ‘‘எதையாவது சாதிக்கணும்ங்கிற எண்ணம் இயல்பிலேயே எனக்கு உண்டு. சர்ச் பார்க் ஸ்கூலில் படிக்கும்போதே மரத்து மேல ஏறி கிளையில் தலைகீழா தொங்குவேன். பசங்க மாதிரி செம சேட்டை.

நிறைய தடவை பள்ளி நிர்வாகம் என் பெற்றோரைக் கூப்பிட்டு, ‘உங்க பொண்ணை கண்டிச்சி வைங்க. இல்லாட்டி டி.சி வாங்கிட்டு போயிடுங்க’ என்று வார்ன் பண்ணி அனுப்பியிருக்காங்க. அப்படியும் என் சேட்டை அடங்கல. அந்த அனுபவங்கள்தான் இது போன்ற விளையாட்டுகளில் ஆர்வமா என்னை ஈடுபட வைக்குதுன்னு நினைக்கிறேன்.’’
‘‘கல்யாணம் பற்றி நிறைய செய்திகள் வருதே..?’’

‘‘அதெல்லாம் வெறும் நியூஸ்தான். கல்யாணம் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கல. இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை வசந்தமாகும்னு எந்த ஆண் என் தலைக்குள் மணி அடிக்க வைக்கிறாரோ, அவர்தான் என் வருங்காலக் கணவராக இருப்பார். ஆனால், இந்த நிமிஷம் வரைக்கும் நான் எந்த முடிவுக்கும் வரல. இப்போ, ‘பூலோகம்’, ‘ரம்’ என்று இரண்டு படங்கள் இருக்கு. நிறைய கதைகளும் கேட்டுட்டு இருக்கேன். ‘பிளாக்’ இந்திப் படத்தில் ராணி முகர்ஜி செய்த மாதிரியான கேரக்டர், ‘கை கொடுக்கும் கை’ ரேவதி பண்ணிய மாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை இருக்கு... பார்க்கலாம்!’’

- அமலன்
அட்டை மற்றும் படங்கள் நன்றி: galatta.com