வசதி



அடிக்கடி தன் அம்மா வீட்டில் வந்து தங்கும் கீதாவைப் பார்க்க வந்திருந்தாள் பக்கத்து வீட்டு மாமி. தன் பிரச்னை என்னவென்பதை கீதாவே மாமியிடம் புலம்பினாள்...

‘‘எங்க வீட்டுல ஒரு வசதியும் இல்ல மாமி! இங்க எல்லாத்துக்கும் பழகிட்டு, அங்க போய் சிரமப்பட வேண்டியிருக்கு. எல்லாம் இருக்குற வீடா பார்த்து வாக்கப்பட்டிருக்கலாம்!’’
‘‘அப்படீன்னா நீ, 48 வயசுக்காரனைத்தான் கட்டியிருக்கணும்’’ என்று சொல்லிச் சிரித்தாள் மாமி!
‘‘என்ன மாமி சொல்றீங்க..?’’

‘‘பின்னே! 21 வயசுல உன் வீட்டுல எல்லாம் இருக்குதுன்னா, அது உங்கப்பாவோட 25 வருஷ சம்பாத்தியம்! நீ போற இடத்திலேயும் அதெல்லாம் வேணும்னா எப்படிம்மா? வசதிங்கறது வராமலா போயிடப் போவுது...’’
‘‘அப்படியா சொல்றீங்க?’’

‘‘இதோ பாரம்மா! உன் புருஷன்
இப்பதான் உன் கையைப் பிடிச்சு தனியா வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கார். அவரோட சேர்ந்து நீயும் குழந்தை, குட்டி, வீடு, வாசல், கார், பணம்னு பெருக்கி, சேர்த்து வை. அதுதான் வாழ்க்கை! எல்லாமே சுலபமா கிடைக்கணும்னு நினைச்சா, அதுக்கும் விலை இருக்கு. ஆனா, அது வாழ்க்கைக்கு நல்லா இருக்காது’’ - மாமி மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, கீதா கிளம்பத் தயாரானாள், அவள் புகுந்த வீட்டுக்கு!

ப.உமாமகேஸ்வரி