குட்டிச்சுவர் சிந்தனைகள்



நகரத்தில் சக்கையாய் பிழியப்பட்ட உடலையும், மக்கிப் போன மனசையும், தமிழ் சினிமா கதாநாயகிகளின் உடைகளைப் போல சுருங்கிப்போன உணர்வுகளையும், பணத்துக்காக அடமானம் வைக்கப்பட்ட பாசத்தையும் நேசத்தையும், வேலைக்குப் போகும் முன் வீட்டிலேயே விட்டுப் போன மனிதாபிமானத்தையும்,

பொங்கல் பண்டிகையின் விடுமுறைக்கு பிறந்த ஊருக்குச் சென்று உள்ளதையும் உள்ளத்தையும் சலவை செய்து மீட்டுக் கொண்டுவந்த அனைவருக்கும் வாழ்த்துகள். வாருங்கள்... மீண்டும் அடுத்த விடுமுறை வரும் வரை பழையபடி மெஷின்களாவோம்.

நம்ம காதோரம் வந்து உய்ய்ய்ய்ங்னு பாட்டு பாடிட்டுப் போகுது ஒரு அரை கிராம் வெயிட்டுள்ள கொசு. அதை நினைச்ச வுடனே நம்மளால அடிச்சுக் கொல்ல முடியுமா? முடியாது. மொதல்ல தெளிவா ஒரு திட்டம் போடணும். அந்த திட்டத்த செயல்படுத்த சரியான சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருக்கணும். சந்தர்ப்பம் அமையும்போது மிக கவனமாகவும் அதே சமயம் வேகமாகவும் செயல்படணும். அந்தச் செயலைச் செய்வதில் நமது மொத்த அர்ப்பணிப்பும் இருக்கணும்.

 நாம செயல்படுத்தும் திட்டம், நமது கவனக்குறைவால சிறிதும் மாறிடக்கூடாது. அப்படியே பிளான் ‘கி’ மாறினாலும், கொஞ்சமும் தாமதிக்காம அதுக்கு சரிசமமான பிளான் ‘ஙி’ய ரெடியா வச்சிருந்து, டக்குன்னு செயல்படுத்திடணும். எதுக்கு சொல்ல வர்றோம்னா, சாதாரண ஒரு கொசுவ அடிக்கவே நமக்கு இவ்வளவு விஷயங்கள் தேவைப்படுதே... இத்தனை போட்டிகளும் பொறாமையும் நிறைந்த இந்த உலகத்துல தோல்விகளையும் அவமானங்களையும் வெற்றி கொள்ள எவ்வளவு உழைக்கணும், கஷ்டப்படணும்?  

சமையலறை, படுக்கையறை, பூஜையறை என தனித்தனி அறைகள் எல்லாம் ஒருசேர இருப்பதுதான் பேச்சிலர் அறை. பத்தி வாசனையும் பாடி ஸ்ப்ரே வாசனையும் ஒண்ணா வீச, பீர் வாசனையும் ரூம் ஸ்ப்ரே வாசனையும் சேர்ந்து நாசியைக் கூச வைக்கும் அறையே பேச்சிலர் அறை. இந்தியாவின் தெருக்களிலும் வீடுகளிலும் நடக்கலாம் ஏகப்பட்ட வன்கொடுமைகள். ஆனால் வன்கொடுமைகளை வெறும் டூத்பேஸ்ட்டுகள் மேல் மட்டுமே காட்டும் இடம்தான் பேச்சிலர் ரூம்.

உலகெங்கும் சமத்துவத்தையும் சோஷலிசத்தையும் கொண்டு வர லட்சக்கணக்கான தலைவர்கள் போராடிக் கொண்டிருக்க, ‘எது உன்னுதோ அது என்னுது... எது என்னுதோ அது உன்னுது’ என்று பனியன் ஜட்டிகளை மாத்தி மாத்திப் போட்டே, பத்துக்குப் பத்து அறையில் கார்ல் மார்க்ஸின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் கொண்டு வரும் அறைதான் பேச்சிலர் ரூம்.
கண்ணாடியையும் காலண்டரையும் துன்புறுத்தாமல், வாரம் ஒரு முறை ஷேவ் பண்ணுவதும், காலண்டர் கிழிப்பதும் பேச்சிலர் பண்பாடு. தோசைக் கல்லில் தோசை ஊற்றும்போது தோசை சொட்டையாக இருக்கும் இடங்களில் மாவு ஊற்றி பஞ்சர் போடுவதும், ரெண்டு நிமிஷ நூடுல்சை அரை மணி நேரம் செய்வதும், அரை மணி நேரத்தில் வைக்க வேண்டிய ரசத்தை அரை நிமிடத்தில் முடிப்பதுமான மேஜிக்கல் அறைதான் பேச்சிலர் ரூம்.

கழட்டிப்போட்ட ஜட்டி, காலியான புட்டியென குவிந்து கிடந்தாலும், அன்பும் அக்கறையும் வட்டி வட்டியாக வளர்வதுதான் பேச்சிலர் ரூம். பேச்சிலராய் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா பேச்சிலர் ரூமில் இருப்பது மிகப் பெரிய சந்தோஷம். பேச்சிலர் ரூம்களின் ஒரே பிரச்னை, குவாட்டர் பாட்டில்கள் உடைபடாமல் பாதுகாப்பதை விட உடைக்கப்படாமல் பாதுகாப்பது மட்டும்தான். றீ

* ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல.
* ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல.
* யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல.
* ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல.
* மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்?
* காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்?

மனுஷன் ஆயிரம் விஷயத்த கண்டுபிடிச்சு இருக்கலாம், ஆனா ‘மனுஷனை’ கண்டுபிடிச்ச விஷயம் பசி. இந்த இந்திய தேசத்தில் இரு வகை மனிதர்களே இருக்கிறார்கள்- வயிறும் வயிறுக்குக் கீழே வயிறுமாய் பசித்திருப்பவர்கள், வயிறுக்கு மேல வயிறு என ருசியாய் புசித்து வாழ்பவர்கள். பசி என்ற உணர்வை அறியாத பணக்காரர்களுக்கு பெருகிப் போனதும் வயிறுதான்; பசி என்ற ஒன்றைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு சுருங்கிப் போனதும் வயிறுதான். பீச், பார்க் என பெரும் செல்வந்தர்கள் வயிற்றைக் குறைக்க ஓடுகிறார்கள்;

அவர்களைப் பணக்காரர்களாக்கிய பல பசித்த தொழிலாளிகள் வயிறை நிறைக்க ஓடுகிறார்கள். இந்த நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளின் பின்னாலும் இருப்பது ஒன்று நிறைந்த வயிறு; இல்லை, பசியால் மெலிந்த வயிறு. போலி மருந்து, போலிச் சாராயம், போலிச் சிரிப்பு, போலிக் கண்ணீர், போலி பாசம், போலி வாழ்க்கையென இந்தப் பெரிய தேசத்தில் எல்லாவற்றிலுமே போலி உண்டு, பசியைத் தவிர.   

‘‘என்னங்க, இவ்வளவு லேட்டா வர்றீங்க?’’
‘‘ரொம்ப வேலைம்மா!’’
‘‘ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல?’’
‘‘வேலை பிசில மறந்துட்டேன்ம்மா...’’
‘‘போன் பண்ண மறக்கிற அளவு அப்படி என்ன வேலை?’’
‘‘ஆபீஸ் வேலைதான்!’’
‘‘ஆபீசுக்கு போன் பண்ணினேன்... நீங்க கிளம்பிட்டீங்கன்னு சொன்னாங்க?’’
‘‘அட, வெளியில ஆபீஸ் வேலைம்மா!’’
‘‘வெளில எந்த ஆபீஸ்?’’
‘‘அட, எங்க ஆபீஸ் வேலைதான். ஆனா வெளில...’’
‘‘அது முடிச்சுட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?’’
‘‘அதான் ரொம்ப வேலைங்கிறேன்லடி!’’
‘‘ஒரு போன் பண்ண எவ்வளவு நேரமாகப் போகுது?’’
‘‘வேலை பிசிங்கிறேன்லடி!’’
- ‘அம்மா’ மாறி ‘அடி’ வந்தபிறகும் இந்த உரையாடல் இன்னொரு ரவுண்டு வரும். கேள்விகளால் ஆனது பெண்களின் உலகம், பதில்களால் ஆனது ஆண்களின் உலகம். இந்த இரு வகை மனிதர்களால் ஆனது இந்த உலகம்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்(ஸ்)...

என்னென்னைக்கு டாஸ்மாக் லீவுன்னு சரியா தெரிஞ்சுக்கிட்டு, சரக்க ஸ்டாக் வாங்கி லாக் ஆகாத அனைத்து சின்சியர் சிட்டிசன்களும்!

எல்லோருக்கும் எல்லாத்துக்கும் நேரமில்லன்னு சொல்லக் கூடாது... சொல்லவும் முடியாது!

ஆல்தோட்ட பூபதி