மயில் கராத்தே!



அதிக பக்கம், அதே விலையில் வந்த பொங்கல் ஸ்பெஷல் அமோகம். அதிலும் ‘பொங்கல் வாழ்த்து ஞாபகங்களை’ பிரபலங்களிடம் கிண்டிக் கிளறியதைப் படித்து மனம் சந்தோஷத்தில் பொங்கியது.
- வி.விஷால், புதுச்சேரி.

என்னது ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவைக் கொஞ்ச சிவகார்த்திகேயன் தயங்குறாரா? முதல்ல கொஞ்சம் ‘மயில் கராத்தே’ கத்துக்கிட்டு வாங்க பாஸ்!
- ஜெ.கணபதிராவ், சென்னை-15.
குப்பையில் தூக்கிப் போடும் உதிரிப் பொருட்களைக் கொண்டு ரோபோ தயாரிக்கும் வில்லேஜ் விஞ்ஞானி என்றதும் பெரிய மனிதர் என்று நினைத்தோம். +2 மாணவனான தியாகுதான் அது என்றதும் வியப்பிலும் பெருமிதத்திலும் மூழ்கிப் போனோம்.
- இரா.ராஜேஷ்கண்ணா, வந்தவாசி.
சென்னையைச் சேர்ந்த சுந்தர் ராமசாமி ஜிம்மி, டாமிக்கெல்லாம் ஒரு ‘ஜிம்’மை ஆரம்பித்து அசரடிக்கிறார். அதுங்க போட்டோவை பார்க்கும்போதே ‘நாங்களும் களத்துல இறங்கிட்டோமில்ல’ என்பது போல் இருந்தது.
- ஏ.வி.நாகராஜன், கோவை.
இளையராஜா இசையின் ‘பிரம்மா’ என்றுதான் இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், அவர் போட்டோகிராபியிலும் சிறந்த ஒளி ஓவியர் என்பதை அவரே பிரத்யேகமாகக் கொடுத்திருந்த அந்த சாம்பிள் படங்களே சொல்லிவிட்டன.
- டி.சுடர்மணி, நாகை.
இறந்து போன ஜல்லிக்கட்டு காளைக்கு ஒரு கோயிலா? ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தக் கட்டுரை. ஜல்லிக்கட்டை மிருகவதை என்று சொல்பவர்களுக்கு பதிலாக இந்தக் கோயிலும் அந்த ஊர் மக்களும் விளங்குவது தெள்ளத் தெளிவு.
- ஜி.கே.மணிகண்டன், தேனி.
இன்றைய கம்ப்யூட்டர் காலத்திலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செகுட்டு அய்யனார் கோயிலின் சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்கள் அனைவரும் காது வளர்த்து, காது மடலில் பெரிய ஓட்டையோடு திகழ்வது வியப்பின் உச்சம்!
- மா.மாரிமுத்து, ஈரோடு.
இலக்கியவாதிகளைப் பொறுத்தவரை தங்கள் பரஸ்பர மோதலுக்கான மிகச் சரியான காரணங்களை ஒவ்வொருவரும் கையில் வைத்திருப்பார்கள் என்பதையே சாருநிவேதிதாவின் நேர்காணல் உணர்த்தியது!
- தி.தே.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
‘ஜல்லிக்கட்டுக்கே நிபந்தனையோடு கோர்ட் அனுமதி இருப்பது போல், சென்னையில் சேவல் சண்டைக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.’ - சண்டை சேவல்கள் வளர்க்கும் தட்சிணாமூர்த்தியின் இந்த ஆதங்கம் நியாயமானதே! செய்வார்களா?
- எல்.ரம்யா கணேஷ், விழுப்புரம்.
‘சகுனியின் தாயம்’ தொடர்கதையின் முதல் அத்தியாயம் படிக்கும்போதே மனதில் திகில் ஒட்டிக்கொண்டது. தடதடக்கும் வேகத்தில் கதை பயணிக்கும் என்பது புரிகிறது.
- கே.மேகலா ராஜு, சங்கரன்கோவில்.