சீஸன் சாரல் பாபனாசம் அசோக்ரமணி



ராமராவ் கலா மண்டபத்தில், சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் கே.ஜே.யேசுதாஸ் கச்சேரி... தேர்த் திருவிழா போல கூட்டம்! அந்த வசீகரக் குரல் எல்லாரையும் இழுக்கிறது. மஹாதேவ சர்மா வயலின், திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம், திருப்பணித்துரா ராதாகிருஷ்ணன் கடம். வலசி ராக நவராகமாலிகா வர்ணம், ‘ஓம்காரப் பொருளே’ என ஹம்ஸவிநோதினி ராகத்தில் அமைந்த கீர்த்தனை, ‘நீ ஸரி ஸாடி’ என்கிறஹேமவதி ராகத்தில் அமைந்த பாட்டு, ‘தெலிஸிராம’ என்று பாடிய கீர்த்தனையில் எல்லாம் ஸ்ருதி சுத்தமாக ஒலித்தது.

‘பரியாசகமா’ கீர்த்தனை, யேசுதாஸின் குரலில் பாயசமாக இனித்தது. மாயா மாளவ கௌளை ராகம் மெயின். அதற்கு மஹாதேவ சர்மா அருமையாகக் கூட வாசித்தார். ‘மேரு ஸமான’ கீர்த்தனைக்கு பக்தவத்சலமும், ராதாகிருஷ்ணனும் வாசித்த அழகு அருமையோ அருமை. தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட குரல்... மயங்கியது ரசிகர்கள் வெள்ளம்.

மியூசிக் அகாடமியில் லால்குடி கிருஷ்ணன் - விஜி கிருஷ்ணன் இரு வயலின் இசை... அமைதியான, ஆழமான, பாரம்பரியமான சங்கீதம் அது. திருச்சி சங்கரனின் மிருதங்க நாதமும் கச்சேரியில் ஸ்பெஷல். லால்குடி ஜெயராமனின் அருமையான மந்தாரி ராக வர்ணத்தோடு கச்சேரி ஆரம்பம். ‘கந்ந தண்ட்ரி’ என்ற தேவமனோஹரி ராக கீர்த்தனையும், ‘அம்பநீலாயதாக்ஷி’ கீர்த்தனையும் சுகமாக ஹாலில் மிதந்து வந்தன. விஜியின் தன்யாசி ராக ஆலாபனையைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள். அப்படி ஒரு ராகம் கேட்டு எவ்வளவு நாளாச்சு.

வீணை குப்பையரின் ‘நாமொறாலகிஞ்சி’ கீர்த்தனை அபூர்வம். ‘தாமதம் தகாதய்யா’ என்கிற லால்குடி கோபாலய்யரின் மோகன கல்யாணி ராக கீர்த்தனையில், திருச்சி சங்கரன் மிருதங்கம் கூடவே பாடியது. காம்போதி ராகத்தில் தியாகய்யரின் ‘மஹிதப்ரவ்ருத்த’ கீர்த்தனையும் மிக அபூர்வமாக மேடையில் கேட்கும் சந்தர்ப்பம். திச்ர த்ரிபுடை தாளத்துக்கு, தனி விட்ட உடனே... மெதுவாக, ஒவ்வொரு ஆவர்த்தனமாக சொல்லை வாசித்து, அதை அழகுபடுத்திக் கொண்டே போய், சர்வலகு, பொடி சொல், குமுக்கி, கோர்வை... இப்படி சங்கரன் வாசித்த மிருதங்கம், நிச்சயமாக அடுத்த அவரின் அகாடமி கச்சேரி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். புருஷோத்தமன் கஞ்சிரா அருமை.

கோசல ராகத்தில் ராகம், தானம், பல்லவி. கோசலை மடியில் ராமர் தவழ்ந்து விளையாடியது போல, கிருஷ்ணன் கையில் கோசலம் விளையாடியது. ‘தேவி ப்ரோவ சமயமிதே, அதிவேகமே வச்சி’ என்ற பல்லவி வரியைப் போல, ரசிகர்கள் லால்குடியின் வாரிசு வயலின் இசையை, சமயம் கிடைக்கும்போதெல்லாம் வந்து கேட்டு அனுபவிக்கக் காத்திருப்பது உண்மை.

நாட்டியத்திற்கும், நாடகத்திற்கும் பெயர் போன ‘பாகவத மேளா’ பரம்பரை உள்ள ஊர்கள் ஊத்துக்காடு, மெலட்டூர் போன்றவை. மன்னார்குடியில் பிறந்தாலும், ஊத்துக்காட்டிலே வாழ்ந்தவர் வேங்கடகவி. எவ்வளவோ கீர்த்தனைகளை இயற்றிய பெரிய சாகித்யகர்த்தா. சாட்சாத் கிருஷ்ணர்தான் அவருக்குக் குரு. ஊத்துக்காடு கிருஷ்ணர் மீது அவர் இயற்றிய பல பாடல்கள் பிரசித்தம். ரொம்ப நகைச்சுவையாகவும் பல பாடல்களில் கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘விஷமக்காரக் கண்ணன்’ பாட்டில் முகாரி ராகம் கண்டுபிடிக்கணும் என்றால், ‘‘பக்கத்து வீட்டுப் பொண்ண கிள்ளிவிட்டு அவ அழறதுதான் முகாரி’’ என்பார்.

ஊத்துக்காடு கீர்த்தனையான ‘வேணு கான ரமண’வை தோடி ராகத்தில் அருமையாகப் பாடினார் சிக்கில் குருசரண். நாரத கான சபையில் கச்சேரி. மிச்ரசாபு தாளத்தில் இந்தப் பாட்டை மெயினாக குருசரண் பாடக் கேட்டபோது, ‘ஊத்துக்காடு கிருஷ்ணனின் வேணு கானத்தை இந்தப் பாட்டில் விசேஷமாகக் கூறியது உண்மைதான்’ என்று தோன்றியது. ரசிகர்களும் குருசரணின் கானத்தைப் பருகக் காத்திருந்தார்கள்.

‘ரங்கநாதுடே’ கீர்த்தனையுடன் கச்சேரி ஆரம்பமானது. தஞ்சை நால்வரில் ஒருவரான தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை எழுதிய அருமையான பாட்டு. வயலினில் நாகை ஸ்ரீராம், சிக்கில் நாகையில் உள்ளது போல் ஒன்றோடு ஒன்றாக இணைந்தார். ஒரே ஊர்க்காரர் ஒன்றாக இணைந்தால் ரகளைதானே! தியாகராஜரின் அபூர்வ ராகமான ‘நாகநந்தினி’யை சிக்கில் அருமையாகப் பாட, நாகை கையில் மகுடிக்கு அடங்கிய நாகம்போல், ராகம் சொன்னபடி கேட்டது. மோஹனராம் கடத்துடன், ராஜாராவ் தனி... அமர்க்களம்.

குருசரணின் குரல் குளுமை, ஸ்ருதி சுத்தம், ராஜாராவின் மிருதங்க நாதம் எல்லாம் சேர்ந்து, சிக்கிலுக்குப் போய் சிங்காரவேலனின் தரிசனம் பார்த்த பரவசத்தை ரசிகர்களுக்குக் கொடுத்தது. கர்நாடிக்கா சகோதரர்களின் சங்கீதம், அறிவுக்குத் தீனி. கணேஷ் பாட்டில் ஒரு விறு விறுப்பு... சசிகிரண் பாட்டில் ஞானம்... இருவரும் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பாடியது ரசிகர்களைக் கவர்ந்தது. எம்.ஏ.சுந்தரேசன், வயலினில் ஒரு பூர்ண வித்வான். கையில் இனிமையோடு, கணக்கும் சேர்ந்த விநோதம்.

 ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் மிருதங்கம் வாசித்தால், கச்சேரி சக்சஸ்தான்.
அன்றைக்கு ஸ்ரீரஞ்சனி ராகத்தை சசியும், கணேஷும் மாறி மாறிப் பாடி அசத்தினார்கள். சசிகிரண், ராஜாராவைப் பார்த்து, இந்த பல்லவியே இவருடைய மிருதங்க வாசிப்புக்காக என்பது போல, ‘ஸொக ஸுகா மிருதங்க தாளமு ஸ்ரீரஞ்சனி ராக பரித’ என்று கூறிப் பாடியது அருமை. ராஜாராவ் வாசிப்புக்கு இது நிச்சயம் சரியான பல்லவிதான்.

சென்னை இசை விழாவில், தியாகய்யர் கீர்த்தனைகளைப் பாடியது போல, திருவையாறு உற்சவத்தில் ஜனவரி 17 முதல் 21 வரை நடக்கும் வைபவத்தில் தியாகய்யருக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து கலைஞர்களும் ரசிகர்களும் அங்கு செல்வோம்...

படங்கள்: புதூர் சரவணன்