இளக்காரம்



அடேயப்பா... மாதக் கடைசி என்பதால் அன்று வங்கியில் எவ்வளவு கூட்டம்!  என் மகனுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட வேண்டும். டி.டி எடுக்க நீண்ட வரிசை இருந்தது. என் பக்கத்து வீட்டுக்கு புதுசாக குடி வந்திருப்பவர் இந்த வங்கியில்தான் பணிபுரிகிறார் என்று என் மனைவி சொன்னது ஞாபகம் வந்தது. அவரைத் தேடினேன்.

அதோ அவர்தான்... ஒரு சேரில் உட்காராமல் உள்ளே ஒவ்வொரு கவுன்ட்டருக்கும் ஓடி ஓடி ஃபைல்களை எடுத்துக் கொடுப்பதும், சலான்களை இங்கிருந்து அங்கு மாற்றிக் கொடுப்பதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார். ‘எடுபிடி வேலை செய்கிறாரே... அப்ப இவர் இங்கே பியூன்தானா!’ - அவரை நான் இளக்காரமாகப் பார்க்க, அவரோ சங்கடமில்லாமல் என்னை நோக்கி வந்தார்.
‘‘என்ன சார்...  ஃபீஸ் கட்டணுமா? சலானையும் பணத்தையும் கொடுங்க, நான் கட்டித் தர்றேன்!’’ என்றவர், சொன்னபடி ஐந்தே நிமிடத்தில் பணம் கட்டி சலானைத் தந்தார். நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

வாசலில் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது... ‘‘இந்த பேங்க் மேனேஜர் எனக்கு வேண்டப்பட்டவர்ப்பா... அவரைப் பார்த்தா வேலையை சுளுவா முடிக்கலாம்னு வந்தேன்... பாவி ஒரு மணி நேரமா என்னை உள்ளே கூப்பிடாம காக்க வைக்கிறான்!’’ என் பக்கத்து வீட்டுக்காரர் பியூன் என்பதில் இப்போது எனக்குப் பெருமையாக இருந்தது!   

கு.அருணாசலம்