விவஸ்தை



‘‘இதோ பாருங்க... தேதி இருபத்தைந்துதான் ஆகுது! கையில சல்லிக்காசு இல்லை... வீட்டுல எந்த மளிகை சாமானும் இல்லை... பணத்துக்கு ஒரு வழி பண்ணுங்க... ஒவ்வொரு மாசமும் இதே நிலைமைதான். எனக்கு வெறுத்துப் போச்சு...’’

மாடி போர்ஷனுக்கு புதிதாகக் குடி வந்த கமலா, தன் கணவனிடம் கத்திச் சொல்வது கீழ் வீட்டு நிர்மலாவுக்குக் கேட்டது. கடந்த நான்கைந்து நாட்களாகவே இப்படித்தான் தினம் ஒரு பஞ்சப்பாட்டு!
‘சே... என்ன மனுஷி இவள்? இப்படியா தன் வறுமையை கதவு, ஜன்னல் எல்லாத்தையும் திறந்து வச்சிட்டுப் பேசணும்? கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லை’ - மனதிற்குள் கமலாவை திட்டினாள் நிர்மலா.

குப்பையைப் போட வெளியே வந்தவள், மாடி பால்கனியில் பேச்சு சத்தம் கேட்டு நின்றாள். ‘‘எதுக்கு இப்படி கூச்சல் போடறே கமலா? எல்லா சாமான்களையும் மொத்தமா முதல் தேதியே வாங்கிட்டே இல்ல..?’’ - கமலா வின் கணவர்தான் கேட்டார்.

‘‘சாரிங்க... கீழ்வீட்டுல குடியிருக்குற நிர்மலா, மாசக் கடைசியில் கைமாத்து கேட்பாங்களாம்... போதாதுக்கு சர்க்கரை, காபித்தூள் கடன் வேறயாம். இங்க ஏற்கனவே குடியிருந்தவங்க சொன்னாங்க. வரவுக்கு ஏத்த மாதிரி குடும்பம் நடத்துற என்னால அப்படிக் கொடுக்க முடியுமா? அதான்... அவங்க காதில் விழணும்னு கத்திப் பேசினேன். இப்ப அவங்க மாடிக்கே வர்றதில்லை!’’
அதிர்ந்து நின்றாள் நிர்மலா.                 

வி.சிவாஜி