ஆண்டரியாவுடன் மீண்டும் காதலா?



‘‘அனிருத்... அப்படின்னா யாரு?’’ என்று கேட்பவர்களை கொலவெறியுடன் பார்க்கக் காத்திருக்கிறது ஒரு கும்பல். விடலைப் பருவத்தின் மொத்தப் பொருத்தமும் மெத்தப் பதிந்த புல்லாங் குழல் உருவம்.

 ஒற்றைப் பாடலால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தாலும் மீடியா பக்கம் அத்தனை எளிதில் தலை காட்டாமல் இருந்தவரை ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில்
சந்தித்தோம். ‘‘நடிகராகிட்டீங்க... வாழ்த்துக்கள்!’’

‘‘அடடா... ‘ஆகோ’ படத்துக்காக எடுத்த போட்டோஸ் பார்த்துட்டு நீங்களா கணக்குப் போட்டுக்கிட்டீங்களா? ஷ்யாம்ங்கிற புது இயக்குனர், ‘ஆகோ’ படக் கதையை சொன்னப்போ, ‘நீங்களே நடிச்சி மியூசிக் பண்ணணும்’னுதான் கேட்டார். ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. மியூசிக் மட்டும் பண்றேன்’னு ஒப்புக்கிட்டேன். அது ஜஸ்ட் பப்ளிசிட்டிக்காக பண்ணின போட்டோ ஷூட்!

வழக்கமான ஃபார்முலாவில் அடங்காத ஃபிரஷ்ஷான கதை. அதனால டூயட், குத்துப் பாட்டுங்கற ஃபார்முலாவைத் தாண்டி பாடல்கள் இருக்கணும்னு முயற்சி செய்கிறேன். ‘வணக்கம் சென்னை’ படத்துல ஒரு பாட்டுக்குப் பாடி நடிச்ச மாதிரி இதிலும் ஒரு பாடலில் முகம் காட்டுவேனான்னு தெரியாது. ‘யூத் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு நீ செமையா செட் ஆகுறே... நடிக்கலாமே’ன்னு நிறைய பேர் ஏத்தி விடுறாங்க. ஆனா நடிக்கறதா இல்லை.’’

‘‘உங்க மியூசிக் புது டிரெண்டா இருக்கு. பாட்டில் கூட ஒரு சரணம்தான் வைக்கிறீங்க?’’ ‘‘கரெக்ட் சார். எல்லாம் ஆசீர்வாதம்னுதான் நினைக்கிறேன். ‘கொலவெறி’ எனக்கு ஒரே நாள்ல அங்கீகாரம் கொடுத்த பாட்டு. அந்தப் பாடலுக்காக பாராட்டு, விமர்சனம் என்று இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் பார்த்துட்டேன். இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு. ‘கொலவெறி’ முயற்சியை வீடியோவா எடுத்து யூ டியூப்பில் போடலாம் என்று டிரை பண்ணினோம்...

அது ஹிட்டாச்சு! ‘எதிர்நீச்சல்’ ஆடியோ மேக்கிங்கை காமெடியா பண்ணலாம்னு பிளான் செய்தோம்... அதுவும் வொர்க் அவுட் ஆச்சு. ‘வணக்கம் சென்னை’யில் டான்ஸே ஆடிடலாம்னு நினைச்சேன் அதுவும் ரீச் ஆகிடுச்சு. நம்ம ஊர்லதான் ஒரு பாட்டு 5 நிமிஷம், 6 நிமிஷம் ஓடுது. ஏன் இதை மாற்றக்கூடாதுன்னு நினைத்து, ஒரு பாட்டு மூணு நிமிஷம் மட்டும் வர்ற மாதிரி ஒரு சரணத்துடன் நிறுத்திக்கிறேன். இதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. ஆக, புதுசா ஒரு விஷயத்தை முயற்சி பண்ணினால் கண்டிப்பா ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்!’’
‘‘உங்களுக்குள் இருந்த இசையமைப்பாளரை எப்போ கண்டுபிடிச்சீங்க?’’

‘‘நான் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கேன். என் திறமையைக் கண்டுபிடித்தது பெற்றோர்தான். எனக்கு இரண்டரை வயசா இருக்கும்போது பொம்மை கீ போர்டு வாங்கிக் கொடுத்திருக்காங்க. டி.வியில விளம்பரத்தில் வந்த ஒரு மியூசிக்கை அப்படியே வாசிக்க டிரை பண்ணியதை என் அம்மா கவனித்து, பியானோ கிளாஸில் சேர்த்துவிட்டாங்க. ஆறாம் வகுப்பில் சொந்தமா மெட்டும் வரிகளும் போட்டு நண்பர்களிடம் இசைத்துக் காட்டுவேன். அப்புறம் பள்ளி, கல்லூரி இசைக் குழுவில் இருந்தேன். லண்டன் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர் பியானோவில் எட்டு கிரேடு முடிச்சேன். குறும்படம், விளம்பரப் படம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘3’யில் இசையமைப்பாளரானேன்.

‘கொலவெறி’ பாட்டு ஹிட்டானதும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் போன் பண்ணினார். ‘எனக்கு ‘ரோஜா’ படத்தில் நடந்தது, இப்போ உனக்கும் நடந்திருக்கு. எனக்காவது இந்தியா முழுவதும்தான் இந்த வரவேற்பு இருந்தது. ஆனா, உனக்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடச்சிருக்கு. இதைப் பாதுகாத்தாலே போதும். இருபது முப்பது வருஷத்துக்கு ஒருமுறை வரும் இந்த மாற்றத்தை நீ சரியா பயன்படுத்திக்கொள்’ என்று அவர் வாழ்த்தியதை பெருமையா நினைக்கிறேன்.’’

‘‘உண்மையான காதல் ஒருமுறைதான் பூக்கும் என்கிறார்களே?’’
‘‘அப்படியெல்லாம் இல்லை. எனக்கு முதலில் காதலி இருந்ததும் அந்தக் காதலில் முற்றுப்புள்ளி விழுந்ததும் எல்லோருக்கும் தெரியும். என் வாழ்க்கையில் அவருக்கு இடமில்லை என்று தெரிந்ததும் இரண்டாவதாக ஒரு காதல் துளிர்த்தது. அந்தப் பெண் சினிமாவுடன் சம்பந்தப்படாதவர்.

அதுவும் இப்போது முறிந்துபோய் விட்டது. அடுத்து ‘வேலை இல்லா பட்டதாரி’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படங்கள் என்று நிறைய வேலைகள் இருக்கிறது. இந்தி வாய்ப்புகளும் வருது. இப்போது எனக்குள் காதலுக்கு இடமும் இல்லை. நேரமும் இல்லை.’’ ‘‘ஆண்ட்ரியாவுடனான முதல் காதலில் எங்கே பிரச்னை எழுந்தது?’’

‘‘வயசுதான் பிரச்னை. எனக்கும் அவங்களுக்கும் நிறைய வயசு வித்தியாசம். நிறைய பேர் அட்வைஸ் கூட பண்ணினாங்க. ரெண்டு பேரோட எதிர்பார்ப்பும் வேற வேற திசையில் இருக்கு. இது சரிப்பட்டு வராதுன்னு பிரிஞ்சுட்டோம். அந்தப் போட்டோ வெளியே வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்பதிலும் உண்மையில்லை. அதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எங்களுக்குள் இடைவெளி விழுந்துவிட்டது.

 திரும்பவும் நாங்க சேர்ந்துவிட்டதாக வர்ற நியூஸும் பொய். ‘வணக்கம் சென்னை’ படத்தில் ஒரு பாடலுக்கு அவங்க வாய்ஸ் இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்துப் பாட வைத்தேன். ஆனா, என் அசிஸ்டென்ட்ஸ்தான் ரெக்கார்டிங் பண்ணினாங்க. நான் அப்போ மும்பை போயிட்டேன். முறிந்த காதல் முறிந்தது தான்... இனி அதை ஒட்ட வைக்க முடியாது!’’

- அமலன்