ஏ.டி.எம்கள் இனி பணத்தைப் பிடுங்குமா?



‘‘இனிமே நம்ம அக்கவுன்ட்ல இருந்து, நம்ம பேங்க் ஏ.டி.எம்ல பணம் எடுத்தாலே காசாமே!’’ - ஏ.டி.எம் பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரின் இன்றைய புலம்பலும் இதுதான். நிஜமாகவே அப்படியொரு கோரிக்கையைத்தான் ரிசர்வ் வங்கியிடம் வைத்து அனுமதிக்காக காத்திருக்கிறது இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banks Association).

அவர்கள் எதிர்பார்க்கும் அனுமதி மட்டும் கிடைத்துவிட்டால், அதன் பிறகு நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தைக் கூட மாதம் 5 முறை மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால், 15 முதல் 18 ரூபாய் வரை நம் கணக்கில் இருந்து மாயமாகிவிடும். ‘சமீபத்தில் ஏ.டி.எம் மையங்களில் நடந்த சில அசம்பாவிதங்களால், அவற்றின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் அதிகரித்தாக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டிருக்கிறது. அந்தச் செலவுகளுக்காகத்தான் இந்தக் கட்டணம்!’ என்பது வங்கிகள் தரப்பு நியாயம்!  இந்தியாவில் கடைக்கோடி வங்கி வாடிக்கையாளனுக்கு இது நியாயமா?

உண்மையில் தொழில்நுட்பம், பாதுகாப்பு, துரிதம் மூன்றும் கலந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதே, வங்கிகளின் நோக்கம். அதை செயல்படுத்த உதவும் சாதனங்களில் ஒன்றுதான் ஏ.டி.எம் மையங்கள். 1987ம் ஆண்டு, முதல்முறையாக, இந்திய வங்கித் துறையில் ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு வந்தது. பின்பு படிப்படியாக வளர்ந்து, இப்போது லட்சக்கணக்கான ஏ.டி.எம் மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. ஏ.டி.எம் மையங்கள் வங்கிகளின் மினி கிளைகளாக செயல்படுவதால், வங்கிக் கிளைகளின் வேலைப் பளு குறைந்து, அவற்றின் நிர்வாகச் செலவும் வெகுவாக மிச்சமாகிறது.

தங்கள் கிளைகளுக்குள் இருக்கும் கஜானாவுக்குக் கொடுக்கும் பாதுகாப்பை, வெளியில் அமைந்திருக்கும் எலெக்ட்ரானிக் கஜானாக்களான ஏ.டி.எம் மையங்களுக்கும் அளிக்க வேண்டியது வங்கிகளின் அடிப்படைப் பொறுப்பு. ஆனால் பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில், வாடிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் திடீர் விழிப்புணர்வை ஏற்படுத்திய உடன்... பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாநில அரசுகள் அறிவுறுத்திய உடன்... பொறுப்பை நிறைவேற்றவே இங்கு செலவுக் கணக்கு பார்க்கப்படுகிறது.

‘‘ஒவ்வொரு ஏ.டி.எம் மையத்தின் நிர்வாகச் செலவே மாதம் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. ஆகவே, வியாபார நோக்கில், நஷ்டங்களைத் தவிர்க்க, சில செலவுகளை குறைக்க வேண்டியிருக்கிறது’’ என்று ஒரு தனியார் வங்கி அதிகாரி, தங்கள் தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒதுக்குப்புறமான இடங்களில் இருக்கும் ஏ.டி.எம் மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடுவதாகவும் சில வங்கிகள் அறிவிப்புப் பலகைகள் வைத்துள்ளன.

ஆனால், பல வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச கையிருப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கையிருப்பு குறைந்தால், ஒவ்வொரு காலாண்டுக்கும் 200 முதல், ஆயிரம் ரூபாய் வரை அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. ஏ.டி.எம் கார்டுகளுக்கென ஒரு பராமரிப்புத் தொகையும் ஆண்டுக்கொருமுறை பிடித்தம் செய்யப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது, வங்கியில் சேமிக்கும் பழக்கமுள்ளவர்களிடையே, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

தங்கள் மாதச் சம்பளத்தைப் பெறுவதற்கு, பல நிறுவனங்களின் ஊழியர்கள், வங்கிகளில் கட்டாயக் கணக்கு துவங்குகின்றனர். சுய உதவிக் குழு அங்கத்தினர்கள், மைக்ரோ ஃபைனான்ஸ கடனுதவி பயனாளிகள் ஆகிய பல தரப்பட்ட சாமானியர்கள், தங்கள் பணத்தை பாதுகாப்பாக எடுக்க ஏ.டி.எம் மையங்களைத்தான் நம்பி இருக்கின்றனர்.

பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக, அவர்கள் தங்கள் பணத்தை மொத்தமாக எடுக்காமல், சிறிது சிறிதாக எடுத்து செலவழிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் அதிக நேரம் வங்கியிடம் இருக்கிறது. இதன் மூலம் வங்கிகளின், ‘காசா டெபாசிட்’  (CASA Deposit)  என்றழைக்கப்படும் சேமிப்பு வைப்புத் தொகை செழிப்படைந்து, அதிக லாபத்திற்கு வழி வகுக்கிறது. இவர்கள் மீது, கூடுதல் கட்டணங்களை திணிப்பது தங்க முட்டை இடும் வாத்தை கத்தியால் வெட்ட முயல்வது போன்ற செயல்.

அதிக செலவில்லாத, எளிமையான வழிமுறைகள் மூலம், அவர்களை வங்கி சேமிப்பு பழக்க வட்டத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. ‘2016க்குள் 18 வயதான அனைவருக்கும் ஒரு எலெக்ட்ரானிக் வங்கிக் கணக்கு வசதி’ என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கி யின் ஆய்வறிக்கை. அரசாங்க உதவித் தொகைகளை, பயனாளிகளின் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தும் திட்டமும் அமலாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஏ.டி.எம் சேவைக்கு கட்டணம் விதிப்பது நல்லதுக்கா என்ன!

‘‘இந்தக் கட்டணங்களால் வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளை அதிகம் நாடுவார்கள். இதனால், வங்கிகளில் கூட்டம் அதிகரித்து, வேலைப்பளுவும் பராமரிப்புச் செலவும் அதிக மாகும்’’ என்று ஏ.டி.எம் இயந்திர உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சரி, இதற்கு மாற்று வழிதான் என்ன?


‘‘இந்திய அளவில் ஒவ்வொரு ஆயிரம் கி.மீ தூரத்துக்குள் 25 என்ற எண்ணிக்கையில்தான் ஏ.டி.எம்கள் அமைந்துள்ளன. ஆனால், சில நகரப் பகுதிகளில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள், பல்வேறு வங்கிகளின் பதினேழு ஏ.டி.எம் மையங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக சமீபத்திய சர்வே தெரிவிக்கிறது. ஒரு மொபைல் டவரை பல மொபைல் கம்பெனிகள் பகிர்ந்துகொள்வது போல், நெருக்கமாக ஒரே பகுதியில் இருக்கும் பல வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களை ஒருங்கிணைத்தால், பராமரிப்புச் செலவை பெருமளவில் குறைக்கலாம்’’ என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ஏ.டி.எம் மையங்களில் நிகழும் ஆள் மாறாட்ட மோசடிகளைத் தடுக்க, வங்கிகள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். விழித்திரை, விரல் ரேகை மூலம் வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறைக்கு மாறினால், மோசடிக் குற்றங்களை பெருமளவில் தவிர்க்கலாம். அட்டையை நுழைத்தால் மட்டும் திறந்து, மூடக்கூடிய தானியங்கி கதவுகள், ஏ.டி.எம் மையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும்.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்திய வங்கிகளின் வாராக் கடன் 1.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. பல பெரிய நிறுவனங்களின் கணக்குகள் இதில் அடங்கும். இந்த வாராக்கடன்களை நன்கு பராமரித்து, அதில் ஒரு பகுதியை வசூல் செய்தாலே, வங்கிகள் தங்கள் செலவினங் களை ஈடுகட்டி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தலாம். புதிய வாடிக்கையாளர்களையும் வங்கிக்குள் இழுக்கலாம். அதை விட்டு, ஏழைகளையும் சிறு முதலீட்டாளர்களையும் கட்டணங்களால் அடித்தால், அது யாருக்கும் நல்லதில்லை!                  

கட்டணங்களால் வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளை அதிகம் நாடுவார்கள். இதனால், வங்கிகளில் கூட்டம் அதிகரித்து, வேலைப்பளுவும் பராமரிப்புச்
செலவும் அதிகமாகும்

ஏ.டி.எம்... சில உஷார் டிபஸ்!

* ஏ.டி.எம் அட்டையையும், றிமிழி எண்ணையும், ஒன்றாகச் சேர்த்து வைக்காமல் தனித்தனி இடங்களில்தான் கட்டாயமாக வைக்க வேண்டும்.
* வங்கி ஊழியர் உள்பட, வேற்று நபரின் உதவியை ஏ.டி.எம் மையத்தில் நாட நேர்ந்தால், உடனடியாக றிமிழி எண்ணை மாற்றி விட வேண்டும்.
* றிமிழி எண்ணை பதியும்போது கீ போர்டை முழு உடலால் மறைத்துக்கொள்ள வேண்டும்.
* பணப்பரிவர்த்தனைக்குப் பிறகு, கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும்.
* இயந்திரத்திலிருந்து பணம் வெளிவராமல், கணக்கில் மட்டும் கழிக்கப்பட்டிருந்தால், உடனடியாக கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் வழங்கும் அடையாள எண்ணை ஞாபகமாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய விதிமுறைகளின் படி, வங்கிகள் ஏழு நாட்களுக்குள் அந்தத் தவறை சரி செய்தாக வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் நிவாரணத் தொகை, வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், வாடிக்கையாளர், அசம்பாவிதம் ஏற்பட்ட 30 நாட்களுக்குள் வங்கிக்கு தகவல் கொடுத்தால்தான் இந்த நிவாரணங்கள் பொருந்தும்.
* இரவு நேரங்களில், அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும்தான் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்க வேண்டும்.
* அட்டையை ஏற்கும் கார்டு ரீடர் கருவியில், பசைகள் ஒட்டப்பட்டிருந்தாலும், வயர்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பைப் பற்றி வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.

எஸ்.ராமன்