ஆங்கிலேயர் வரைந்த இந்தியா! அடடே கேலரி



பிரிட்டிஷ் ஆட்சி என்றதும் நம்மூரில் இருவேறு கருத்துக்கள் கிளம்பும். ‘இந்தியாவின் வளங்களைச் சுரண்டி...’ என ஆரம்பிக்கும் பாடப் புத்தக கமென்ட் ஒன்று. ‘ரயிலு வுட்டான், கரன்ட்டு வுட்டான், கப்பலு வுட்டான்’ என வரும் பாமர பாஸிடிவ் கமென்ட் இன்னொன்று.

 ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் இயற்கை அழகையும் மக்களையும் கலையையும் சக மனிதனாக ஆங்கிலேயன் நேசித்தான் என சாட்சி சொன்னது அந்தக் கண்காட்சி. இந்திய விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்திய ஓவியங்கள் சென்னை அப்பாராவ் கேலரியை அலங்கரித்திருந்தன.

‘‘இதை ஓவியங்கள்னும் சொல்ல முடியாது... போட்டோக்கள்னும் சொல்ல முடியாது. ரெண்டுக்கும் இடைப்பட்டது. அதாவது அந்தக் காலத்து கேமராக்கள்ல எடுக்கப்படுற தெளிவில்லாத போட்டோக்களை பெரிய பிரின்ட்டா போட்டு, அது மேல தங்களோட கற்பனையை ஏற்றி ஓவியம் தீட்டுறது.

ஆங்கிலத்துல இதை போட்டோ இல்லஸ்ட்ரேஷன்னு சொல்வாங்க’’ என்கிறார் கேலரியின் உரிமையாளர் ஷரன் அப்பாராவ். கடந்த சில வருடங்களாக இப்படிப்பட்ட ஓவியங்களை சேகரித்தும், சேகரிப்பாளர்களை ஒருங்கிணைத்தும் காட்சிப்படுத்த உழைத்திருப்பவர் இவர்தான்.

‘‘அந்தக் காலத்துல வேலைக்காகவோ சுற்றுலாவுக்காகவோ இந்தியா வந்த ஆங்கிலேயர்கள்ல சிலரை இந்தியாவின் இயற்கை, சடங்கு சம்பிரதாயங்கள் ரொம்ப கவர்ந்திருக்கு. இந்திய மக்களை, அவர்களின் ஆடைகளை, முகபாவங்களை ரொம்பவே ரசிச்சிருக்காங்க. இப்படி அவங்களைக் கவர்ந்த காட்சிகளை அவங்க போட்டோ எடுத்திருக்காங்க. அப்போதைய கேமராவில் ரொம்பத் துல்லியமான படங்கள் வராது. பெரிய சைஸ் படம் வேணும்னா பிரின்ட் எடுத்து பிரஷ்ஷால திருத்த வேண்டியிருக்கும்,

அப்படியே அதில் அவங்க கற்பனையைக் கலந்து இப்படி அற்புதம் செஞ்சிருக்காங்க. இது அப்போதைய புத்தகங்கள்ல படங்களா கூட சேர்க்கப்பட்டிருக்கு. முழுக்க முழுக்க கையால்தான் பிரதி எடுக்க முடியும்ங்கிறதால இதை பிரின்ட் ஓவியங்கள்னு சொல்றாங்க. ஔரங்கசீப் கல்லறை, பழைய டெல்லி, இந்தியாவின் குகைக் கோயில்கள், தென்னிந்திய இயற்கைக் காட்சி, பல்வேறு மாநில மக்கள்,

பறவைகள் என இந்தியாவைப் படம் பிடித்திருக்கும் இந்த ஓவியங்களில் நம் தமிழ்நாட்டின் தஞ்சையும், செஞ்சியும் இடம்பெற்றிருப்பது பெருமை. இப்படி இந்தியர் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவிதத்தில் பெருமை கொள்ளச் செய்வதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம்!’’ என்கிறார் ஷரன்.

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்