இனிஷியல்





இந்த உலகத்தில் நாகு மிகவும் வெறுக்கின்ற ஒன்று உண்டு என்றால் அது அவருடைய அப்பாவைத்தான்.நாகுவுக்கு 10 வயது ஆனபோது, அப்பா வேறொரு பெண்ணுடன் ஓடிவிட்டார். நாகுவும் அம்மாவும் வாழ்வதற்கு நிறையப் போராட வேண்டியிருந்தது. அப்போது ஏற்பட்ட வெறுப்பு அப்படியே அவர் மனசில் நிலைத்து விட்டது. தனது பெயருக்கு எப்போதும் இனிஷியல் போடுவதே கிடையாது. யாரிடம் பேசினாலும் அப்பா பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். அப்பா புராணம் பாடுகிறவர்களை வெறுத்தார்.வருடங்கள் ஓடின. அன்று...‘‘அப்பா!’’ என்று கூப்பிட்டவாறே வந்தான் முகுந்த். அவரது ஒரே மகன். 20 வயசு இளமைத் துடிப்பில் இருப்பவன்.‘‘என்னடா?’’ என்று கேட்டார் நாகு.

‘‘நடிப்பின் உச்சம், எங்க தெய்வம், தலைவர் உம்ரித்து ரசிகர் மன்றத்துக்கு இந்த மாவட்டத் தலைவர் நான்தான்ங்கிறது உங்களுக்குத் தெரியுமே! நானும் எங்கள் மன்றத்திலுள்ள நண்பர்களும் எங்க பெயரோடு தலைவர் பெயரையும் சேர்த்துக்கொள்ள முடிவு செஞ்சிருக்கோம். இனிமே என் பேரு நா.முகுந்த் இல்லே. இனிஷியலே இல்லாம ‘உம்ரித் முகுந்த்’! தெரியுதா? இந்தப் பெயரிலேதான் இனி என்னை எல்லோரும் கூப்பிடணும்!’’ நாகு அதிர்ச்சியில் உறைந்தார். 

- அன்பிற்கினியவன்