பரவசம்





வாசு விரக்தியின் உச்சத்தில் இருந்தான்.எட்டு வருடங்கள்... எல்லாம் தோல்வி! எங்கும் மூடப்பட்ட கதவுகள்... முகத்தில் எறியப்பட்ட அவமானங்கள்! மானத்துடன் வாழ நினைத்த ஒரு ஏழை வாலிபனின் சாமானியக் கனவைத் தூக்கி எறிந்த அரசும் தனியார் நிறுவனங்களும்! பட்டது போதும்... இனியும் அழுவதற்குக் கண்ணீர் இருக்கலாம். ஆனால், மனதில் பலமில்லை!எலிமருந்தை எடுத்து கடைக்காரரிடம் விலை கேட்டபோது, வெகு அருகில் ஒரு படகுக் கார் வந்து நின்றது.

இறங்கி ஓடி வந்தார் ஒரு கோட் சூட் மனிதர்.‘‘தம்பி... தம்பி... தெரியுதா என்னை? நாலு வருஷம் முன்னால பார்த்தமே’’ என்றார் பரபரப்பாக.
கைகளைப் பற்றிக்கொண்டார். கணத்தில் கண்கலங்கி விட்டார்.‘‘விபத்துல அடிபட்டு ரத்தம் ஒழுக ரோட்டில் கிடந்தேன். நீங்கதான் ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரியில சேர்த்தீங்க... இந்த உயிர் நீங்க போட்ட பிச்சை தம்பி. உங்களை பலநாளா தேடிக்கிட்டிருக்கேன்’’ & அவர் சொல்லிக்கொண்டே போனார்.முதலில் திகைத்தான். அடுத்த கணம் அவன் நெஞ்சம் பரவசத்தில் நெகிழ்ந்தது.இதுதான் வாழ்க்கை! இதுதான் அவன் பிறந்ததின் பலன்!எலிமருந்தை மானசீகமாகத் தூக்கி எறிந்தான்.

- வானதி