மெலடி எங்க கோட்டை!



இமான்-யுகபாரதி ஸ்டிராங் கூட்டணி

‘உன்னை எப்போ பாக்கணும்...ஒண்ணு பேசணும்...’- ‘கயல்’ படப் பாடல் ட்ராக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள் இசையமைப்பாளர் டி.இமானும், பாடலாசிரியர் யுகபாரதியும்.
‘மைனா’, ‘கும்கி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் அத்தனையும் செம ஹிட். இன்னும் 8 படங்கள் வரிசையில்...

‘‘ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா நில்லுங்க... கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க’’ - போட்டோகிராபர் கேட்க ‘‘யுகபாரதி, நாம என்ன லவ்வர்ஸா?’’ என இமான் அடித்த கமென்ட்டில் இருவரும் அதிர அதிர சிரிக்கிறார்கள்.

‘‘ம்ம்... ‘மைனா’தான் எங்க ஆரம்பப்புள்ளி. பிரபுசாலமன்தான் எங்க காம்பினேஷன் அமையக் காரணம். ஒரு பாடல் கம்போஸிங் தொடங்கும்போது, அதற்கான ஐடியாவை யுகபாரதிகிட்ட சொல்வேன். ரொம்ப சின்ஸியரா கேட்பார். ‘ஊதா கலரு ரிப்பன்...’ எழுதிக் காட்டினார். அப்புறம்தான் அதை ட்யூன் போட்டோம்.

‘மெட்டுக்கு எழுதினதா? எழுதின பிறகு மெட்டு போட்டதா?’ என்றெல்லாம் பார்க்காமல், அந்தப் பாடல் இனிமையா வரணும்னுதான் வேலை பார்ப்போம். யுகபாரதி ஒரு சந்தக் கவிஞர். மீட்டருக்கு அவ்வளவு ஃபிட்டா பாட்டெழுது வார். எனக்குத் தெரிஞ்சு இப்படி எழுதக்கூடிய ஒரே பாடலாசிரியர் இவர்தான்னு கூட சொல்லலாம்!’’ - இமான் சொல்ல, யுகபாரதியிடம் மெல்லிய புன்னகை.

‘‘ஒரு பாடல் பிறப்பதற்கான கருவை இயக்குநர்கள்தான் கொடுக்கிறாங்க... அந்தப் பாடலை எழுதி உச்சரிப்பு சுத்தம் மட்டும்தான் ஒரு பாடலாசிரியரா என்னால சரிபார்க்க முடியும். அதைப் பண்பாட்டு ரசனையோடு கொண்டு போறதுல இமான் கெட்டிக்காரர். இதனாலேயே எங்க கூட்டணி இன்னும் ஸ்டிராங்கா ஆகுது!’’

‘‘ ‘இமான் மாதிரி கிராமத்து ஸ்டைல் வரமாட்டேங்குது’ன்னு அனிருத் ஃபீல் பண்ணினாராமே...’’ ‘‘நேரடியா என்கிட்ட சொல்லலை. ஆனா, கேள்விப்பட்டேன். முழுக்கதையும் வில்லேஜ் சப்ஜெக்ட்டா அனிருத்துக்கு இன்னும் கிடைக்கலைன்னுதான் சொல்வேன். கிடைக்கிறப்ப, அவரும் பின்னியெடுப்பார். தவிர, இப்ப சந்தோஷ் நாராயணனும் நல்லா பண்றார். எங்க லட்சியமே உணர்வுள்ள பாடல்கள் நிறைய கொடுக்கணும். இதுநாள் வரைக்கும் மெலடியை எங்க கோட்டைன்னு வச்சிருக்கோம். அதை தொடர்ந்து செய்யணும்’’ - கீ போர்டில் மெல்லிய ட்யூனைக் கோர்த்துக்கொண்டே பேசுகிறார் இமான்.

‘‘விஜய், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் வரிசையில், அடுத்து விக்ரமை பாட வைக்கற ஐடியா இருக்கா?’’

‘‘ஆமாம். என் முதல் படமான ‘தமிழன்’லயே விஜய் சார், பிரியங்கா சோப்ராவை பாட வச்சேன். ரொம்ப வருஷம் கழிச்சு, ‘ஜில்லா’வில் பாட வச்சேன். மறுபடியும் விஜய்யை சந்திச்சப்ப, என் வீட்ல ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி நலம் விசாரிச்சார். டோட்டல் ஃபேமிலி பெயரையும் அவர் ஞாபகம் வச்சிருந்தது ஆச்சரியம். ‘ஜில்லா’வில் ஒரு பாடகரா அவர்கிட்ட நிறைய இம்ப்ரூவ்மென்ட் தெரிஞ்சது.

 நடிகர் - நடிகைகளைப் பாட வைக்கும்போது, இனிஷியலா அந்தப் பாட்டுக்கு ஒரு கவனம் கிடைக்கும். ஈஸியா அது ரீச் ஆகும். ஆனா, அந்தப் பாட்டைக் கேட்கிறவங்க, அதைத் திரும்பத் திரும்பக் கேட்கிறப்பதான் அது ஹிட் ஆகும். அந்த சூட்சுமம் இசையிலதான் இருக்கு. இப்போ ‘10 எண்றதுக்குள்ள’ படத்தோட கம்போஸிங் நடக்குது. ஒரு பாட்டை விக்ரமை பாட வைக்கலாம்னு இருக்கேன்!’’

‘‘பாடலாசிரியர்களின் எண்ணிக்கையை விட, இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிடுச்சே?’’

‘‘என்ன தப்பு? நானே ஒரு படத்துல ஒரு பாடகரைப் பயன்படுத்தினேன்னா... அடுத்த படத்துல அவரையே ஏன் பயன்படுத்தணும்னு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு. புது வாய்ஸா முயற்சி பண்ணலாமேன்னு தோணுது. தயாரிப்பாளருக்கு புது இயக்குநர்கள்கிட்டே கதை கேட்கத் தோணுகிற மாதிரியான விஷயம்தான் இதுவும். சினிமா ஒரு ஓப்பன் ஃபீல்டு. புதியவர்கள் நிறைய பேர் வர்றது ஆரோக்கியமான விஷயம்தான்’’ - இயல்பாகச் சிரிக்கிறார் இமான்.

‘‘உங்க இசையில பாலிவுட் இசையமைப்பாளர்கள் விஷால் டக்லானி - சேகர்... ரெண்டு பேரையும் பாட வச்சிருக்கீங்களே... அதைப்பத்தி சொல்லுங்க!’’ - இமானிடம் ஞாபகப்படுத்தினார் யுகபாரதி.

‘‘பாலிவுட்ல அவங்க பெரிய இசையமைப்பாளர்கள். லேட்டஸ்ட்டா ‘ஹேப்பி நியூ இயர்’னு ஷாருக்கான் படத்துக்கு இசையமைச்சிருக்காங்க. ‘ரோமியோ - ஜூலியட்’டுக்கு ஒரு பாடல் பாடித் தர முடியுமானு அவங்ககிட்டே கேட்டேன். உடனே ஓகே சொன்னாங்க. அவங்க என்னைப்பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்காங்க.

ஃபுல் பயோடேட்டா சொல்றாங்க. எனக்கு சர்ப்ரைஸ். ‘எங்களுக்கு நீங்க சம்பளம் கொடுக்க வேண்டாம். டெல்லியில வீதியோர சிறுவர்களுக்கான இசைப்பள்ளி ஒண்ணு இருக்கு. அந்தக் காசை அங்கே கொடுத்துடுங்க. நாங்க பாடுறதுக்கு வாங்குற ஊதியம் எல்லாம் அங்கேதான் அனுப்பறோம்’னு அவங்க சொன்னது எனக்கு அவங்க மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்துச்சு’’ என ஆச்சரியப்படுகிறார் இமான்.

‘‘உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஈகோ புகுந்துடுச்சுனு ஒரு டாக் வந்ததே..?’’

‘‘கேட்கறதுக்கே ரொம்ப காமெடியா இருக்கு. ‘மைனா’, ‘கும்கி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு தொடர்ச்சியா வொர்க் பண்ணியிருக்கோம். இப்போ, ‘கயல்’, ‘பஞ்சு மிட்டாய்’, ‘வெள்ளைக்கார துரை’, சசிகுமார் படம், சிவகார்த்திகேயன் படங்கள்னு எங்க கூட்டணியில இசை வரிசை கட்டி நிக்குது. எல்லா இசையமைப்பாளர்களோடவும் யுகபாரதி வேலை செய்யுறார். நானும் எல்லா பாடலாசிரியர்களுடனும் வேலை செய்றேன். இந்தப் படங்கள் இனிமேல்தான் ரிலீஸ் ஆகப்போகுது. இந்த இடைப்பட்ட நாட்கள்ல நாங்க இணைஞ்சு வேலை பார்த்த படங்கள் வராமல் போனதால் இப்படிப்பட்ட பேச்சு எழுந்திருக்கலாம்’’ - இமான் சொல்ல, மௌனமாகத் தலையாட்டி அதை ஆமோதித்தார் யுகபாரதி.

‘‘ ‘இந்த உலகத்துல நாம இல்லன்னாலும் நம்ம பாட்டு எப்பவும் இருக்கும்’னு திருச்சி லோகநாதன் ஐயா சொன்னார். நாங்க இன்னிக்கு ட்ரெண்ட்ல ஹிட் ஆகணும்னு நினைச்சு பாட்டு பண்ணலை. எல்லாமே ஃபீல் குட் மெலோடிஸா இருக்கணும்னு கவனம் செலுத்தி பண்றோம். எங்க காலத்துக்கு அப்புறமும் ரேடியாவிலோ, டி.வியிலோ அடுத்த தலைமுறை அதைக் கேட்கணும். அப்படி யொரு பெருமையை எங்க பாட்டு அடையணும்னு விரும்பி வொர்க் பண்றோம்’’ - கோரஸாகச் சொல்கிறார்கள் இருவரும்.

-மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.கோபால்