வாழைப்பழம் வாங்க பெட்டிக்கடைக்குச் சென்றேன். பக்கத்தில் நின்ற ஒரு இளைஞன் சிகரெட் புகையை என் முகத்துக்கு அருகே ஊதினான். ‘சட்டம் போட்டாலும் இவனுங்க திருந்த மாட்டேங்கறானுங்களே!’ என நான் மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தபோதே, எனக்கு மறுபக்கம் நின்றிருந்த இன்னொரு இளைஞன் முந்திக்கொண்டான்.

‘‘ஏம்ப்பா! பக்கத்துல ஆளுங்க நிக்கிறது தெரியல! கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம மேலயே புகை விடுறீயே. மண்டையிலே என்னதான் இருக்கோ!’’ என்றான் அவன் காட்டமாக.
புகை விடும் இளைஞனுக்கும் ஆக்ரோஷம். ‘‘நான்தான் புகை விடுறேன்னு தெரியுதுல்ல! அந்தப் பக்கமா தள்ளிப் போய் நிக்க வேண்டியதுதானே!’’ - பதிலுக்குப் பாய்ந்தான்.
நான் இரண்டு ஸ்டெப் தள்ளி நின்றேன். சிகரெட் முழுதும் இழுத்து முடித்த பின் அந்த இளைஞன் அங்கு நின்ற பைக்கில் போய் ஏறினான். அவனிடம் சத்தம் போட்ட இளைஞனும் அதே பைக்கில் அவன் பின்னால் உட்கார, இருவரும் சென்று விட்டார்கள்.
எனக்குத் திகைப்பு! கடைக்காரரைப் பார்த்தேன். ‘‘என்ன சார் பார்க்கறீங்க... அந்த ரெண்டு பயல்களும் ஃபிரண்ட்ஸ்தான். எங்கே நீங்க திட்டப் போறீங்களோன்னு அவங்க போட்ட டிராமாதான் அது’’ என்றார் அவர். நான் வாயடைத்து நின்றேன்.
கு.அருணாசலம்