பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 32 அருண்

காற்றில் அலையும் தனிமைஎந்த ஒரு கலை சார்ந்த கண்டுபிடிப்பும், அதன் விஞ்ஞான வளர்ச்சி என்கிற நிலையில் இருந்து, கலை என்கிற நிலைக்கு மாறுவதற்கு நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் தேவை. சினிமா என்கிற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு, பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகள் நடந்ததன் விளைவாகவே மாபெரும் கலையாக மாறியது.

ஐசன்ஸ்டீன் சினிமாவை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்து, அதன் பல்வேறு சாத்தியங்களைக் கண்டுணர்ந்தார். லூயி புனுவல் பிம்பங்களை வைத்தே, சர்ரியலிச முறையில் கதைகளைச் சொல்வதில் வெற்றியடைந்தார். இந்த எல்லா பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் ஒற்றை நோக்கம்தான் உள்ளது. ‘கலைக்கும் மக்களின் வாழ்க்கைமுறைக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும்’ என்பதே அது.

தமிழில் இப்படியான பரீட்சார்த்த முயற்சிகள் மிகக் குறைவாகவே நிகழ்கின்றன. தமிழ் சினிமாவின் வணிக எல்லைக்குட்பட்டு, இயக்குனர் எஸ்.பாலசந்தர் சில முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இயக்குனர் பீம்சிங்கும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் சில முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். தமிழ்க் குறும்படங்களைப் பொறுத்தவரை, சினிமாவை விடவும் மிகக் குறைந்த அளவிலேயே இப்படியான முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு குறும்படம், ‘விண்ட்’.

ஒரு கதையைக் காட்சிப்படுத்துவதில் இருக்கும் சிரமங்களை விட, ஒரே ஒரு சம்பவத்தை ஒட்டு மொத்தமாக படமாக வார்த்தெடுப்பதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் அப்படியான கதைசொல்லல் முறைதான், பார்வையாளனுடன் நேரடியாக உரையாடச் செய்கிறது. தங்கள் காதலுக்கு பெண் வீட்டில் சம்மதிக்காததால் தற்கொலை செய்துகொள்கிறான் காதலன்.

கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில், தனியாக இருக்கும் ஒரு மரத்தில் அவன் தூக்கு மாட்டி இறந்து பல மணி நேரமாகிறது. கிராம மக்கள் யாரும் அங்கு வரவில்லை. காவல்துறை ஆய்வாளரும், மருத்துவ உதவியாளர்களும் வருவதற்கு நேரமாகும் என்பதால், ஒரு காவலரை அங்கு காவல் பணியில் அமர்த்துகிறார் தலைமைக் காவலர்.

இரவு நேரப் பணியை முடித்துக்கொண்டு நேராக அங்கு வரும் காவலர், தனக்கு பதிலாக இன்னொரு காவலரை விரைவில் சம்பவ இடத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறார். ஆனால் அலைபேசியில் போதுமான அளவிற்கு சார்ஜ் இல்லாததால், உடனே அது அணைந்து விடுகிறது. யாராவது வரும் வரையில், இந்தக் காவலர் நேரத்தைக் கடத்தியாக வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடைகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்கள் யாரும் அவ்வழியே வருவதுமில்லை. ஒரு சடலத்துடன் அந்த நீண்ட நேரத்தை எப்படி இந்தக் காவலர் கழிக்கிறார் என்கிற ஒற்றைச் சம்பவமே காட்சிகளாக விரிகிறது.

சராசரி மனிதர்கள் பலரும் போலீஸாரைப் பார்த்தாலே ஒதுங்குவார்கள். காரணம், அவர்கள் மீதான மிரட்சியாகவோ அல்லது வெறுப்பாகவோ இருக்கும். ஆனால், காவல்துறை நண்பர்களுக்குள் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் மனநிலையை இந்தப் படம் பதிவு செய்கிறது.

காற்று எந்தத் திசையில் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பனை ஓலையில் விசிறி செய்து காற்று வரும் திசையைக் கண்டுபிடிப்பதும், கற்களை அடுக்கி வைத்து அவற்றைக் கலைத்து விளையாடுவதும், ஒரு நாயுடன் சில நிமிடங்கள் விளையாடி தனிமையைப் போக்கிக் கொள்வதுமாக, அந்தக் காவலாளிக்குள் இருக்கும் அந்தத் தனிமையை, வெறுமையை இந்தக் குறும்படம் பார்வையாளனுக்குள் கடத்த விழைகிறது. காவல்துறை அலுவலர் மட்டும் அந்த சடலத்துடன் நேரத்தைக் கழிக்கவில்லை.

மாறாக, படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களும் அந்த இடத்திற்குச் சென்று, அந்தக் காவலருடன் சேர்ந்தே தங்கள் நேரத்தைக் கழிக்கிறார்கள். அத்தனை நுட்பங்களுடன் குறும்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக வருவதில் இருக்கும் மாபெரும் நன்மை, அவர்கள் பிம்பங்களை வைத்தே கதை சொல்ல விரும்புவார்கள். இந்தக் குறும்படத்தின் முதல் காட்சியில், இரவு நேர வானமும் நிலவும் பிம்பங்களாக அசைகின்றன. அடுத்த காட்சியில், காலை நேர வானமும், எழும் சூரியனின் கதிர்களும் காட்டப்படுகின்றன.

நீண்ட தொலைவில் ஒரு பேருந்து வருவது காட்டப்படுகிறது. அதிலிருந்து காவலாளி இறங்குகிறார். ஒரு வசனம் கூட இல்லை. ‘அவர் இரவு நேரப் பணியை முடித்துக்கொண்டு, சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்’ என்பதை காட்சி பிம்பங்களாலேயே விளக்கியிருக்கிறார்கள். 

நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின்னர் அயர்ச்சி ஏற்பட்டு, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று அந்தக் காவலர் கண்களை மூடுவார். திரை முழுக்க இருளாகும். அடுத்த சில நொடிகளில் ஒரு நாய் குரைக்கும் சப்தம் மட்டும் கேட்கும். திடுக்கிட்டு அவர் விழித்துக்கொள்வார். தூக்கில் தொங்கும் நபரைப் பார்த்து அந்த நாய் குரைத்துக்கொண்டே இருக்கும். அதனை விரட்டி விடுவார்.

இந்த இடத்தில் திரை முழுக்க இருளாவதன் காரணம், பார்வையாளனும் அந்த சில நொடிகளில் காவலருடன் சேர்ந்தே உறங்கிப் போகிறான் என்பதற்காகத்தான். அடுத்த காட்சியில் காவலருடன் நாயும் சேர்ந்து அமர்ந்திருக்கும். சில நிமிடங்களில் நாய் எழுந்து ஓடி விடும். காவலர் நாயை திரும்ப அழைத்தாலும், அது திரும்பிப் பார்த்து விட்டு ஓடி விடும். ஒரு காவலரின் வெறுமையை, தனிமையை மிக நேர்த்தியாக உணர்த்தும் காட்சி அது.

படத்தின் தொடக்கம் முதல், இறுதிக்காட்சிக்கு முன்பு வரை இசையே இருக்காது. நேரடி ஒலி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடையிடையே தூக்கில் தொங்கும் நபரின் அலைபேசி ஒலிக்கிறது. அதில் வரும் குறுந்தகவலை வைத்துத்தான், அவன் ஏன் தூக்கு மாட்டிக்கொண்டான் என்பதை விளக்குகிறார்கள்.

 மற்றபடி படம் முழுக்க ஒரே இடத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சிக்கு முன்பாக, தூக்கில் தொங்கும் நபரின் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வருகிறது. ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன் - விஜி’ என்கிற அந்தக் குறுந்தகவலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார் காவலர்.

இவன் இறந்த தகவலை யாரிடமாவது சொல்லியாக வேண்டும் என அதுவரை துடிக்கும் காவலர், அதன்பின்னர் காதலியிடமிருந்து இறந்தவனின் அலைபேசிக்கு வரும் அழைப்பைக் கூட துண்டித்துவிடுகிறார். தற்கொலை செய்துகொண்டவனின் பை ஒன்று அருகில் கிடக்கிறது. அதற்குள் இருக்கும் பிளாஸ்டிக் கவரில், ஒரு தங்க மீன் அங்குமிங்கும் நீந்தி ஓடுகிறது. அப்போது தான் படத்தில் இசை தொடங்குகிறது. காவலரின் வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. தொலைவில் ஆய்வாளரும், மருத்துவ உதவியாளர்களும் வருகிறார்கள். இறந்து போன ஒருவனோடு இருக்கும் வரை, காவலாளி உணர்வது துயரம்;

இறந்தவன் வழியே இன்னொரு உயிர் இருக்கிறது என்பதை அறியும்போது அவருக்குள் எழுகிறது ஆசுவாசம். தங்க மீனைப் பார்க்கும்போது, அவர் முற்றிலுமாகவே தன்னுடைய தனிமையிலிருந்து வெளியே வருகிறார். காய்ந்து போன மரத்தில் வந்தமரும் பறவை ஒலி எழுப்புகிறது. காற்றின் திசையை அறிந்துகொள்ள அவர் உருவாக்கிய பனை விசிறி சுற்றிக்கொண்டே இருக்கிறது. உயிர்ப்பற்றுக் கிடந்த அந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறுகிறது.

ஒரு சம்பவத்தை இப்படி பல நுட்பமான காட்சிகளுடன் படமாக்கும்போது, அது மனதை விட்டு அகல்வதே இல்லை. ஒரு பிம்பத்தின் மீதிருக்கும் எல்லாவகையான கட்டமைப்புகளையும் இந்த நுட்பங்கள் கட்டுடைத்து, பார்வையாளனின் சுதந்திரத்தை உணர்த்துகின்றன.

படம்: விண்ட்
இயக்கம்: எம்.மணிகண்டன்
நேரம்: 29.34 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: எம்.மணிகண்டன்
இசை: ராஜேஷ் முருகேஷன்
படத்தொகுப்பு: அல்போன்ஸ் புத்திரன்

தூக்கில் தொங்கும் நபரின் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வருகிறது.‘நான் கர்ப்பமாக இருக்கிறேன் - விஜி’என்கிற அந்தக் குறுந்தகவலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார் காவலர்.
ஒளிப்பதிவாளராக தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய மணிகண்டன், பல்வேறு குறும்பட இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

தற்போது முன்னணியில் இருக்கும் பலர் இந்தக் குறும்படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இதில் காவலாளியாக நடித்திருப்பவர் விஜய்சேதுபதி. தூக்கில் தொங்கும் நபராக நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. படத்தொகுப்பைச் செய்திருப்பவர், ‘நேரம்’ திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.

மணிகண்டன் தந்தைக்கு காவல்துறையில் பணிபுரியும்போது நேர்ந்த அனுபவத்தையே ‘விண்ட்’ குறும்படமாக எடுத்துள்ளார். டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ள ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இயக்குனர் இதே மணிகண்டன்தான். ‘விண்ட்’ குறும்படமும், சர்வதேச அளவில் பல இடங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

(சித்திரங்கள் பேசும்...)

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி