நடைவெளிப் பயணம்



புதிய சன்மார்க்க சபை

மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு என் முகவரியைச் சரியாக எழுதி ஒரு கடிதம் வந்தது. அன்றிலிருந்து நான் பிராணி நல அமைப்பு ஒன்றில் அங்கத்தினனாக இருக்க வேண்டியதாயிற்று.

இந்தக் குழுவுக்கு முறையான வங்கிக் கணக்கு இருக்கிறது. செலவு பாராது ரசீது அனுப்பி விடுகிறார்கள். மிகச் சிறப்பான முறையில் சுற்றறிக்கை தயார் செய்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்புகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஓர் உயிரினத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு மனிதன் இழைக்கும் கொடுமையையும் அநீதியையும் பற்றிச் சிறிது விளக்கம்; ஆனால் மனதை பிளப்பது புகைப்படங்கள். இந்தக் குழுவின் தலைவர்கள் சமண மதத்தினராக இருக்கலாம். ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குப் பொருத்தமானவர்கள்.

தப்பித் தவறிக் கூட அவர்கள் செய்திக்கு மதத்தையோ மதத்தலைவரையோ துணை கோருவதில்லை. இந்தியாவில் இவ்வளவு ‘சரியான அரசியல்’ (Politically correct) குழுக்களை எளிதில் காண முடியாது. ஓரிடத்தில் கூட மனிதனின் குரூரத்தைத் தவிர ஏதும் கூறுவதில்லை. ஒரு முறை நான் என் வழக்கமான சிறு தொகையை அனுப்பவில்லை. ‘எங்களை விட்டுப் போய் விடாதீர்கள்’ என்று கடிதம் வந்தது.

‘அஹிம்ஸா பரமோ தர்ம’ என்று அகிம்சைக்கு தர்மங்களில் முதலிடம் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் நம் மரபுசார் வாழ்க்கையில் மிருகங்களை எவ்வளவு உடல்வலிக்கு உட்படுத்திவிடுகிறோம்? நான் எங்கு படித்தேன் என்று நினைவில்லை. வி.எஸ்.நைபால் ஓர் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தைக் கிண்டல் செய்திருப்பார். அந்த நிறுவனம் இயங்கும் இடம் பரோடாவில் இருந்தது.

 (இப்போது ‘பரோடா’ என்ற பெயரை ‘வதோதரா’ என மாற்றி விட்டார்கள்.) அந்த நிறுவனம் ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டது. அது என்ன? கட்டை வண்டியின் அச்சில் மோட்டார் கார் அல்லது சைக்கிள் போல ‘பால் பேரிங்’ பூட்டுவது.

இதைத்தான் நைபால் கிண்டல் செய்திருப்பார். ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு மிருகங்களைப் பாரமிழுக்கச் செய்வீர்கள்? பால் பேரிங் போட்டு இன்னும் அதிக சுமையேற்றுவீர்கள்? இது என்ன கண்டுபிடிப்பு?’ அவர் பிராணி நல அமைப்பின் அங்கத்தினர் அல்ல. நம்மைச் சுற்றிப் பார்த்தால் நிறைய விலங்குகள் உள்ளன. பறவையினங்கள் சிறிது அதிர்ஷ்டம் செய்தனவோ எனத் தோன்றும். அதுவும் இல்லை.

காகங்கள், பருந்து வகைப் பறவைகள் தவிர மற்றதெல்லாம் மனிதனுக்கு உணவு. தி.நகரில் ராஜகுமாரி சினிமா அருகே ஒரு நடிகர் விசேஷ உணவு விடுதி நடத்தி வந்தார். அங்கு ஒரு பட்டியல். அதில் உலகத்தில் உள்ள பறவைகள் எல்லாம் இருக்கும். நீங்கள் விரும்பும் பறவையை சமைத்து வழங்குவார்.

இப்போது அது இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் செல்லப்பிராணி போல இப்போது செல்லப் பறவைகளும் ‘பெட்’ கடைகளில் விற்கப்படுகின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன. அவை சுதந்திரமாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால், நிலையம் முன்பு நிறைய ஜட்காக்களும் ரிக்ஷாக்களும்தான் நிற்கும். பனகல் பூங்காவுக்கு கட்டணம் பேசிக்கொண்டு ஒரு ஜட்காக்காரர் பெட்டி, படுக்கைகளை ஏற்றுவார். அந்த நாளில் ‘ஹோல்ட் ஆல்’ என்று ஒன்று உண்டு. அது படுக்கைக்கு என்று ஏற்பட்டது. எங்கள் ஹோல்ட் ஆலில் படுக்கையும் இருக்கும். நிறைய சிறு சிறு மூட்டைகளாகப் பருப்பு வகைகளும் இருக்கும்.

நாங்கள் உறவினர் வீடுகளுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போகிறோம். அது யுத்த காலம். எல்லாவற்றுக்கும் ரேஷன் இருந்தது. திடீரென உறவுகள் வந்தால் திண்டாடியல்லவா போவார்கள்! நாங்கள் அரிசி, கோதுமை போன்றவற்றை எடுத்து வர முடியாது. அதனால்தான் பருப்புகளை படுக்கையில் தலையணை போல எடுத்து வருவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூட்டை. அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள்.

மீண்டும் ஜட்காவுக்கு வருவோம். எங்கள் எட்டு சாமான்களில் ஆறுதான் வண்டிக்குள் இருக்கும். இன்னும் இரண்டு எங்கே என்று தேடுவோம். அவற்றை இன்னொரு ஜட்காக்காரர் அவருடைய வண்டியில் வைத்திருப்பார். நான்தான் கண்டு பிடித்துத் தூக்கி வருவேன். அந்த நாளில் எங்கள் ஊரில் ஜட்கா கிடையாது. ஆனந்தமாகக் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம் என்று நினைத்திருந்த என்னை ஜட்காக்காரர் அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஆறு அங்குல இடத்தில் உட்கார வைத்து விடுவார்.

அங்கு காலைத் தொங்க விட்டு வர முடியாது. ஜட்காக்காரருக்கும் ஒரு காலை ஜட்கா பட்டையில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் ஐயப்ப சுவாமி போல முழங்காலைக் கட்டிக் கொண்டு சென்னை சென்ட்ரலிலிருந்து பனகல் பார்க் வரை ஜட்காவின் முன் பக்கத்தில் உட்கார்ந்து உறவினர் வீடு அடைய வேண்டும்.

வண்டிக்காரர் பக்கத்திலேயே உட்காருவதனால் அவரிடம் பேசலாம் என்று, ‘‘ஏன் குதிரை எலும்பும் தோலுமாக இருக்கிறது?’’ எனக் கேட்டேன். ‘‘இவ்வளவு சாமானையும் உன்னையும் வண்டீலே கொண்டு வர்ணும்லே? நிறையத் தீனி போட்டா வண்டி இழுக்குமா?’’ என்று திருப்பிக் கேட்டார். ஆனால் சினிமாவில் குதிரைகள் தளதளவென்று இருக்கின்றன. வேகமாக ஓடுவதற்கே வளர்க்கப்படும் பந்தயக் குதிரைகள் பளபளவென்று ஆரோக்கியமாக இருக்கின்றன.

நான் இன்னும் ஒருமுறைகூட ஜட்காவில் பின்புறம் உட்கார்ந்து, காலைத் தொங்கப் போட்டுப் பயணம் செய்ததில்லை.இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜட்கா இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த ஜட்கா சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எதிரே, பழைய ஜெயில் மேம்பாலம் ஏறி இறங்கும்போது பின்கனம் அதிகமாகி, வண்டியோடு குதிரை அந்தரத்தில் ஒரு கணம் மிதக்கும். நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். இந்த ஜட்காக்களுக்கு பம்பாய்க் குதிரை வண்டிகள் எவ்வளவோ மேல்.

அங்கு அந்த வண்டிகளை விக்டோரியா என்று அழைக்கிறார்கள். இது மறைமுகமாகப் பிரிட்டிஷ் அரசைக் கேலி செய்வதாக இருக்கலாம். விக்டோரியா ராணி காலத்திலேயே இந்த வண்டிகள் இருந்திருக்க வேண்டும். விக்டோரியாவுக்கு நான்கு சக்கரங்கள். முன்கனம் பின்கனம் என்றில்லாமல் உட்காரலாம். வேண்டுமென்றால் ஓட்டுபவர் பக்கத்தில் உட்காரலாம். காலைத் தொங்கப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வண்டியில் இருப்பவர்களுக்கு ஏதோ கல்யாண ஊர்வலம் போவது போலிருக்கும்.

சென்னை ஜட்காக்களுக்கு அந்த நாளில் தனி ‘ஸ்டாண்ட்’ இருந்தது. சென்னை கெயிட்டி சினிமா அருகே ஒரு ‘ஸ்டாண்ட்’ இருந்தது. அங்கு மஸ்தான் என்றொரு ஜட்காக்காரர் இருந்தார். யாரோ அவர்தான் மோடி மஸ்தான் என்ற புரளியைக் கிளப்பி விட்டார்கள். வண்டியை சவாரிக்கு அமர்த்தாமல், வந்தவர்கள் ‘மந்திரம் சொல்லிக் கொடு... மாயம் சொல்லிக் கொடு...’ என்றால் அவர் என்ன செய்வார்? வைவார். ஒருவர் அவர் வைத ‘உல்லு’, ‘உல்லு கா பச்சே’, ‘பேவகூஃப்’ போன்ற சொற்களை எல்லாம் மந்திரங்கள் என்று நினைத்தார். மஸ்தானின் குதிரையும் எலும்பும் தோலுமாக இருந்தது.

ஏன் குதிரை எலும்பும் தோலுமாக இருக்கிறது?’’ எனக் கேட்டேன். சினிமா வில் குதிரைகள் தளதளவென்று இருக்கின்றன. வேகமாக ஓடுவதற்கே வளர்க்கப்படும் பந்தயக் குதிரைகள் பளபளவென்று ஆரோக்கியமாக இருக்கின்றன.

படிக்க

உலகத்தில் ஏதேதோ விஷயங்கள் எல்லாம் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் வானொலிப் பாட்டு, பேச்சு, நாடகம் அப்படி இல்லை, தமிழ் வரை! பல ஆண்டுகள் முன்பே ஓர் அறிஞரின் வானொலி உரைகளுக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்ததாகச் சொல்வார்கள். ஒரு காரணம், அவரது உரைகள் கவனமாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தன. இப்போது அப்படி இன்னொரு தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

எழுத்தாளர் திலகவதி அவர்கள் நாற்பது தலைப்புகளில் ஆற்றிய வானொலி உரைகள் ‘காலந்தோறும் அறம்’ என்ற நூலாக வந்துள்ளது. சென்னை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை: ரூ.60/- (அம்ருதா மாத ஏடு, பதிப்பகம் ஆகியவற்றின் புது முகவரி: 1, கோவிந்த ராயல் நெஸ்ட், 12, மூன்றாவது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் கிழக்கு, நந்தனம், சென்னை-600035. பேச: 94440 70000).

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்