கவிதைக்காரர்கள் வீதி



*விடிகாலையிலேயே எழுவது
சற்றுக் கடினமாயிருக்கும்
கால் போட்டுத் தூங்கும்
குழந்தையின் கனவு கலையாமல்!

*மழை நின்ற வெயிற்பொழுதில்
இலைகளைக் காய வைக்கும்
மரம்!

*அதிகாலைப் பனி விரட்ட
சுடச்சுட பணியாரம் சுவைக்க
சுருக்குப்பை முடிச்சவிழ்த்து
பேரன் பேத்திகளுக்கு
சில்லரைகளைப் பகிர்ந்தளித்த
தாத்தா பாட்டிகளையும்

பணியாரம் சுடும் பாட்டிகளையும்
தொலைத்து விட்டுத்தான்
பிழைப்பு தேடி அலைந்தபடி...
இப்போதும்
ஞாபகார்த்தமாய் வந்து செல்வது
பனி விடியல் மட்டும்!

*குவிந்திருக்கும் மணலிலே
குழந்தைகள் செய்து விளையாடும்
கோபுரங்களை மிதித்து விடாதீர்...
உள்ளே கடவுள்கள் குடியிருக்கக் கூடும்!

*யாரோ ஒருவனை அணைத்தபடி
யாரோ ஒரு வசீகரமான பெண்
தினமும் கடந்து செல்கிறாள்
போக்குவரத்து நெரிசல்களில்!

வத்திராயிருப்பு
தெ.சு.கவுதமன்